அரசை இக்கடல் ஒருகல் - அரசை என்றதனால் வினைப்பாசம் மலக்கல் ஆர்த்திடப் பவத்தில் வீழ்மாக்களை ஏறிட அருளவல்லது அவ்வாறின்றித் தூயராகிய அரசரை என்பதும்; இக்கடல் என்றதனால் எழு பவக்கடல்போல அளக்கலாகா அகலமும் ஆழமுமுடைத்தல்லாத இந்த ஒரு சிறுகடல் என்பதும்; ஒருகல் என்றதனால் அநாதியே பந்தித்த திணிந்த ஆணவமலம் போலன்றி இறைவனால் உயிர்களின் பொருட்டுத் தரப்பட்ட மாயையின் காரியமாகிய சிறிய இவ்வொருகல் என்பதும் குறித்தபடி கண்டுகொள்க. உரைக்க வேண்டுமோ? - அரிய தென்னவும் படுமோ!; அரிய செயல் செய்வார்க்கு எளிய செயல் ஒன்றினைச் செய்தல் அரிதாகுமோ?; மிக எளிதேயாம் என்றபடி. இருவினைப் பாச முமலக்கல் - மேல் உரைத்தவாறன்றிப் - பாசம் - மு(ம்) மலக்கல் என்று பிரித்து ஆணவம் மாயை கன்மமென்னும் மூன்று மலங்களாகிய கல் என்றுரைப்பினுமமையும். அவ்வாறு உரை கொள்ளுங்கால் முன் உரைத்த இருவினை என்பதும் மலங்களுள் கன்ம மலத்துள் அடங்குதலால் அவ்வுரை பொருந்தாதென்று கேள்வி நிகழ்ந்தவழி, அற்றன்று; மும்மலம் எனப் பின்னர்க் கூறியதனுள் வந்தது மூலகன்மமாகி மும்மலங்களுள் வைத்து எண்ணப்படுவது எனவும், கொள்ளப்படுமென்க. சிவஞானமுனிவரும் இவ்வாறு பொருள் கொண்டுள்ளார். "முன்புதிருக் காளத்தி முதல்வனா ரருணோக்கால், ........ யாக்கைத் தன்பரிசும் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற" (803) என்ற திருவாக்கினையும் காண்க. ஆண்டுரைத்தவையும் பார்க்க. "பட்டவே மூலவினை" என்ற ஆன்றோர் வாக்கும் காண்க. 129 1395. | அருணயந் தஞ்செழுத் தேத்தப் பெற்றவக் கருணைநா வரசினைத் திரைக்க ரங்களாற் றெருணெறி நீர்மையிற் சிரத்திற் றாங்கிட வருணனுஞ் செய்தனன் முன்பு மாதவம். |
130 (இ-ள்.) வெளிப்படை. திருவருள் நயத்தலால், அஞ்செழுத்தினால் தாங்கப்பட்ட அந்தக் கருணையேயுருவான திருநாவுக்கரசரைத் தனது அலைகளாகிய கைகளினால் ஏந்தி, அவரது பெருமையினை அறிந்த முறையாலே, தனது தலைமீது தாங்கிக்கொள்ள முன்காலத்தில் வருணனும் பெரிய தவத்தைச் செய்திருந்தனன். (வி-ரை.) அருள் ... பெற்ற - அருள் நயந்து - இறைவனது திருவருள் கூடுதலால்; அஞ்செழுத்து ஏத்தப்பெற்ற - ஐந்தெழுத்தினால், அதன் வலிமையால் - துணையினால் - மேல் ஏந்தப்பெற்ற. ஏந்த என்பது - ஏத்த என நின்றது. ஏத்த என்பது ஏற்ற என்ற பொருளில் வந்து தெனினுமமையும். அஞ்செழுத்து மேல் ஏற்றிடல் என முன்பாட்டிற் கூறியதனைத் தொடர்ந்து எடுத்து மேற்கூறியபடியாம். இதற்கு இவ்வாறன்றி, திருவருளை நாடி அஞ்செழுத்தைப் போற்றும் பேறுபெற்ற என்று உரைப்பினுமமையும். கருணை நாவரசு - நாவன்மை பெற்றவர்; எது கூறினும் அவ்வண்ணமே பயன் விளைத்துவிடும் நிறைமொழியுடையார். "நிறைமொழியாவது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி" என்பர் பரிமேலழகர். இப்போது நாவுக்கரசர் எனக்கெது விளைவாயினும் எந்தையை ஏத்துவன் என்று திரு அஞ்செழுத்தையே ஏத்தினாரேயன்றி அமணர்களையேனும், அவர்களோடு ஒன்றி மதியிழந்து கொடுஞ்செயல் செய்வித்த மன்னனையேனும் ஒரு சிறிதும் வெகுண்டு கூறினாரல்லர். கூறியிருப்பின் அவர்கள் அச்சொல்லின் ஆற்றலால் அழிந்துபட்டிருப்பர். ஆதலின் இங்கு விதந்து கருணை |