இன்றமிழ் - உயிருக்கு இனிமையைச் செய்யும் தமிழ். எஞ்ஞான்றும் உயிர்களுக்கு இன்பம் செய்து நிலவுதலுடன், அற்றைஞான்றும் பகைவர்க்கும் துன்பஞ் செய்யாது தமக்கு அரண்செய்து. இன்பமாக்கினமை குறிப்பு. "அடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே", (1363), "கடலினுட் கன்மிதந்ததே" (1392) என்றவை காண்க. யானையால் அமணர்களுக்கு நேர்ந்த துன்பம் அவர்கள் தாமே விளைத்துக்கொண்டது. திருவதிகைப்பதி வாணர் - வாழுநர் - வாணர். எந்தக் காலத்திலும் அதிகையில் தங்குதல் வாழ்வு தருவதாம். அதிலும் அரசுகள் எழுந்தருளிய அப்பெருந்திரு நாளில் அங்கிருக்கும் பேறு பெற்றோர் உண்மையில் பெருவாழ் வுடையோர்களேயாம்! தஞ்செயல் பொங்கத் தழங்கொலி மங்கலஞ் சாற்றல் - நகர மாந்தர் யாவரும் கூடி விளக்கமாய் மிக்க சிறப்பிற் செய்யும்படி வாயாற் சாற்றியும் முரசறைந்தும் மங்கலச் செய்தியை அறிவித்தல். பெருவிழாக்களில் இவ்வாறு செய்தல் மரபு. அத்திருநாளினைப் பெருவிழாவாக அந்நகரமாந்தர் இயற்றினர் என்பது. ஆளுடைய பிள்ளையாரது வருகையின்போது கொல்லிமழவன் இவ்வாறு ஏவிச் செய்தனவும் (திருஞான - புராணம் - 314), ஆளுடைய நம்பிகளது வருகையின் போது கழறிற்றறிவார் நாயனார் இவ்வாறு ஏவிச் செய்தனவும் (வெள்ளானைச் சருக்கம் - 17 - 18), பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. பிற உரையாசிரியர்கள் இதற்கு வெவ்வேறாக உரைத்தனர். செய்தவித் தீய - என்பதும் பாடம். 137 1403. | மணிநெடுந் தோரணம் வண்குலைப் பூக மடற்கதலி யிணையுற நாட்டி யெழுநிலைக் கோபுரந் தெற்றி யெங்குந் தணிவில் பெருகொளித் தாமங்க ணாற்றிச்செஞ் சரந்துநீவி யணிநகர் முன்னை யணிமே லணிசெய் தலங்கரித்தார். |
138 (இ-ள்.) வெளிப்படை. அழகிய நீண்ட தோரணங்களையும், வளவிய கமுகுக் குலைகளையும், மடல்நீண்ட வாழைகளையும் பொருந்த இணைத்து நாட்டியும், எழுநிலைக் கோபுரத்திலும் தெற்றிகளிலும் எங்கும் கெடாமற் பெருகும் ஒளியுடைய மாலைகளைத் தொங்கவிட்டும், செஞ்சாந்து பூசியும், அழகிய அந்நகரினை முன்னை அழகின் மேலும் அழகுசெய்து அலங்கரித்தனர். (வி-ரை) நெடுந் தோரணம் - தோரணங்கள் நீளமாகக் கட்டப்படுவன. பூகம் வண் குலை என்க. வண்மையாவது ஒருகுலையில் செறிவாய்க் காய்த்து எண்ணிறந்த கனிகளைத் தருதல். குலைப்பூகம் என்றே கொண்டு குலைக்கமுகு என்பாருமுண்டு. குலைகளுடன் கமுகு மரங்களை வெட்டிக்கொண்டு வந்து நாட்டுதல் உலக வழக்கில் பெரும்பாலும் இல்லை. மடற்கதலி - வாழையிலை மடல் நீண்டிருக்கு மியல்பு குறித்தது. இணையுற நாட்டி என்றது வாழையுடன் கமுகுக்குலையும் தோரணமும் இணைப்பாய் மாறுபாடின்றிப் பொருந்த நாட்டுதல். எழுநிலைக் கோபுரம் - இறைவரது திருவீரட்டானத்தின் கோபுரம். நிலைக் கோபுரம்போல அங்கங்குச் செய்யும் அலங்காரக் கோபுரம் என்பாருமுண்டு. தெற்றி - திண்ணை. தணிவில் பெருகு - ஒளித்தாமங்கள் - ஒளி - தாமங்களிற் கோத்த மணிகளாலாவது. பெருகொளி என்றது மணிகளின் இயற்கை ஒளி சூரிய சந்திர வொளிகளாலும் காந்த விளக்கு முதலியவற்றின் ஒளிகளாலும் மிகுதல். |