பக்கம் எண் :


184திருத்தொண்டர் புராணம்

 

எடுத்துக் காட்டினர்; அக்கருத்துப் பற்றியே அரசுகள் எழுந்தருளக் "கண்ட கவுணியக் கன்றுங் கருத்திற் பரவுமெய்க் காதல், தொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழு" தனர் என்றதும் காட்டினர். "இத்திருவேடங் காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து அணிகலன் முதலாயின, காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல, மெய்யுணர்வுடையாரைக் காட்சி மாத்திரையானே வசீகரித்து இன்பஞ் செய்தல் பற்றித் திருவேடத்தையும் சிவாலயத்தையும் என்று உபசரித்தார். அது ‘சேலுங்கயலுந் திளைக்குங் கண்ணாரிளங்கொங்கையிற் செங்குங்குமம், போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றிசைப்ப' என்பதனானுமறிக" என இதனியல்பை அவர் விரித்தருளினவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. மெய்ப்பொருள் நாயனார் - ஏனாதிநாத நாயனார் சரித நுட்பங்களும் இங்குக் கருதத்தக்கன.

சிந்தையில் - என்பதும் பாடம்.

140

1406.

கண்டார்கள் கைதலை மேற்குவித் "திந்தக் கருணைகண்டான்
மிண்டாய செய்கை யமண்கையர் தீங்கு விளைக்கச்செற்றம்
உண்டா யினவண்ண மெவ்வண்ண?" மென்றுரைப் பார்கள்பின்னுந்
தொண்டாண்டு கொண்டு பிரானைத் தொழுது துதித்தனரே.

(இ-ள்.) வெளிப்படை. கண்டார்கள் கைகளைத் தலையின்மேல் கூப்பிக் கொண்டு "இந்தக் கருணையே உருவெடுத்தாற்போல விளங்கும் பெருமானைக் கண்டேயும் மிண்டர்களாகிய அமணக்கீழ் மக்களாயினும் இவர்க்குத் தீங்கு விளைக்கும்படி சினம்வந்த வண்ணம்தானெப்படி? என்று சொல்லிக் கொள்வார்கள்; பின்னும் தொண்டரை ஆட்கொண்டு என்றுகொண்ட பெருமானைத் தொழுது துதித்தனர்.

(வி-ரை.) இந்த ... எவ்வண்ணம்? - இது திருவீதியில் நாயனார் முன்பாட்டிற் கூறியபடி உள்ள திருவேடத்துடன் புகுந்தபோது கண்டவர்கள் தமக்குள் சொல்லியது. இந்தக் கருணை வடிவினைக் கண்டும் கோபம் மூளவும் அதனால் இவர்க்குத் தீமை விளைக்கவும் குண்டர்களுக்கும் மனம் எழாதன்றோ! அமண்கையர்க்கு அவ்வாறு மனம் எழுந்ததுதான் என்ன ஆச்சரியம்! என்பது. கருணை - கருணை வேடம். நாயனாரைக் கருணையின் உருவமாகவே கண்டனர். "உள்ளத்திற் றெளிகின்ற வன்பின் மெய்மையுரு வினையும்" (திருஞான - புரா - 1023) என்று கண்ணப்ப நாயனாரையும், "ஞானத்தின் றிருவுரு" (மேற்படி - புரா - 728) என்று ஆளுடைய பிள்ளையாரையும் கூறுவது காண்க. அதன்மேலும், இங்குக் கருணையின் உரு என்னாது கருணை என்றது காண்க. கருணை என்கின்ற குணமே நடந்து வருவது போன்றது என்பதாம்.

கண்டால் - செற்றம் - உண்டாயின வண்ணம் எவ்வண்ணம்? - கருணையைக் காணும்போது மக்களுக்குச் சினமுண்டாகாது; அன்பே விளையும்; இது மக்களுள்ளே தீயவர்க்கு மியல்பு. கொடிய விலங்குகளுக்கு மியல்பு. "ஆய வாரிருளின்க ணேகுமவ் வன்பர் தம்மை யணைந்துமுன், தீய வாய விலங்கு வன்றொழில் செய்ய வஞ்சின; நஞ்சுகால், வாய நாக மணிப் பணங்கொள் விளக் கெடுத்தன" (1620) என்ற நாயனாரது பிற்சரித நிகழ்ச்சியும், அவ்வாறுள்ள பிறவும் காண்க.

கையர் - கையரே யாயினும் அவரும் என இழிவு சிறப்பும்மை தொக்கது. மிண்டாய செய்கை - கொடுஞ் செருக்குடைய செய்கை. பின்னும் - துதித்தனர் - என்றது அமண்கையர் தீங்கு செய்யினும் பிரான் தொண்டரை ஆண்டு காத்து அளித்தனர் என்றும், தமக்கு இப்பெருமானை அளித்தனர் என்றும் அந்த எண்ணத்தைத் தொடர்ந்து துதிசெய்தமை குறித்தது.

தொண்டு ஆண்டு கொண்ட - தொண்டரை ஆளாகக் கொண்டு ஏதப்படாமைத் தாங்கிக் கொண்ட.

141