1407. | இவ்வண்ணம் போல வெனைப்பல மாக்க ளியம்பியேத்த மெய்வண்ண நீற்றொளி மேவுங் குழாங்கள் விரவிச்செல்ல அவ்வண்ண நண்ணிய வன்பரும் வந்தெய்தி யம்பவளச் செவ்வண்ணர் கோயிற் றிருவீரட் டானத்தை சேர்ந்தனரே. |
(இ-ள்.)வெளிப்படை. இவ்விதமாக அளவற்ற சனங்கள் சொல்லித் துதிக்கவும், உண்மையாகிய அழகிய திருநீற்றின் ஒளி வடிவிற் பொலிந்துள்ள அடியார் கூட்டங்கள் உடன் பொருந்திச் செல்லவும், அவ்வண்ண நண்ணிய அன்பராகிய திருநாவுக்கரசு நாயனாரும் வந்து சேர்ந்து, அழகிய பவளம்போன்ற சிவந்த வண்ணராகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோயிலாகிய திருவீரட்டானத்தைச் சேர்ந்தனர். (வி-ரை.) எனைப்பல - மிகப்பல - அளவில்லாத. மாக்கள் - அந்நகரத்து மக்கள். இவர்கள்வேறு; பின்னர்க் குழாங்கள் என்ற கூட்டம் வேறு. அவர்கள் சிவன் அடியார்கள். அடியார்களையும் ஏனைமக்களையும் வேறுபிரித்துக் கூறுவது மரபு. "பதியோர் சிறப்பிற் பொங்கி .... எதிர்கொள்ள வடியருடன் மகிழ்ந்துவந்தார்", "அடியவரும் பதியவரும்" என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணம் 576 - 579 பாட்டுக்களும், "நீடுகாஞ்சி வாணரு நிலவு மெய்ம்மை யன்பரும் (மேற்படி 986), (மேற்படி 987) என்பவையும், இன்ன பிறவும் பார்க்க. இத்தன்மை பற்றியே ஏனைய மக்கட் கூட்டத்திற்குச் செய்யும் உதவிகள் பசுபுண்ணியம் என்ற வகையுட்பட்டுச் சுவர்க்கமாதி பலன்களைக் கொடுத்து மீளவும் பிறவியுட் புகுத்துவன எனவும், அடியாரிடத்துச் செய்யும் பணிகள் பதிபுண்ணியம் எனப்பட்டுப் பிறவி நீக்குதற் கேதுவாவன வெனவும் ஞானநூல்கள் பேசும். இவ்வண்ணம் ..... ஏத்த - பல இயம்பி என்று கூட்டிப், பலவாகிய சொற்களை இயம்பி என்றலுமாம். மங்கையர்க்கரசி யம்மையாரும், குலச்சிறையாரும், கூன்பாண்டியனாரும் பின்செல்ல, அமணர்கள் கேட்டபடி புனல் வாதமியற்ற ஆளுடைய பிள்ளையார், வைகையாற்றின் கரைக்குச் சென்றபோது கண்ட மாதர் மைந்தர்கள் பற்பலவாறும் இயம்பி ஏத்தின வரலாறும் (திருஞான - புரா - 802 - 808), ஆளுடைய நம்பிகளைப் பிடியின் மீதேற்றிப் பின்பு கழறிற்றறிவார் தாமு மேறி இருந்து சாமரை வீசிக்கொண்டு திருவஞ்சைக்களத்தி லிருந்து கொடுங்கோளுரிற் தமது அரண்மனைக்கு அழைத்துத் திருவீதியிற் செல்வது கண்டு மக்கள் கூறிய வரலாறும் (கழலிற் - புரா - 148), பிறவும் பார்க்க. மெய்வண்ணம் நீற்று ஒளிமேவும் - மெய் - உண்மை. சத்தாகி அழியாதிருக்கும் தன்மை. வண்ணம் - அழகு. அடியார்கள், திருவடிவிற் பொலிய அணிந்த திரு நீற்றின் ஒளியில் விளங்குகின்றனர் என்க. "உண்மையி லுள்ளது நீறு", "கவினைத் தருவது நீறு" என்பன காண்க. இறைவனார் முத்துச் சிவிகை யருளியபோது அதன் ஒளி வெண்ணீற்றொளி போன்றிருத்தலின் அதனைப் போற்றினார் ஆளுடைய பிள்ளையார் என்பதறியப்படும். "வெண்ணீற்றொளி போற்றி நின்று" (திருஞான - புரா - 216) பார்க்க. வெண்ணீற் றொளிவிளங்கும் அடியார் கூட்டங்கள் இருபாலும் கூடியபோது "இரண்டுநில வின்கடல்க ளொன்றாகி யிசைந்தன போலியைந்தன" என்று அருளினர் ஆசிரியர். அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் - "தூய வெண்ணீறு துதைந்தபொன் மேனியும்" முதலியனவாக 1405-ல் சொல்லிய அந்த வண்ணமாக வந்த. அவ்வண்ணம் - "அக்கரங்க ளின்றா மகர வுயிரின்றேல்" என்றபடி அகரம் சிவத்தன்மை காட்டு |