பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்207

 

1416.

"பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்ப" மென்றெடுத்து,
 முன்னாகி யெப்பொருட்கு முடிவாகி நின்றானைத்,
 தன்னாகத் துமைபாகங் கொண்டானைச், சங்கரனை,
 நன்னாமத் திருவிருத்த நலஞ்சிறக்கப் பாடுதலும்,

151

1417.

நீடுதிருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற
வாடகமே ருச்சிலையா னருளாலோர் சிவபூத
மாடொருவ ரறியாமே, வாகீசர் திருத்தோளிற்
சேடுயர்மூ விலைச்சூலஞ் சினவிடையி னுடன்சாத்த,

152

1418.

ஆங்கவர்தந் திருத்தோளி லார்ந்ததிரு விலச்சினையைத்
தாங்கண்டு, மனங்களித்துத், தம்பெருமா னருணினைந்து,
தூங்கருவி கண்பொழியத் தொழுதுவிழுந் தார்வத்தால்
ஓங்கியசிந் தையராகி, "யுய்ந்தொழிந்தே" னெனவெழுந்தார்.

1415. (இ-ள்.) வெளிப்படை. "புன்னெறியாகிய சமண சமயத்தின் தொடக்கிற்பட்டுப் போன இவ்வுடலுடனே உயிர் வாழ்வதற்கு நான் தரிக்க மாட்டேன்; ஆதலின், எனது நாயகரே! நான் தரிப்பதற்கு உமது முத்திரையை இருட்டருளவேண்டும்" என்ற கருத்தினை எடுத்துக் கூறும் செழும் தமிழ் மாலையைத் திருமுன்பு நின்று பாடுவாராய்,

150

1416.(இ-ள்.) வெளிப்படை. "பொன்னார்ந்த திருவடிக்கு என விண்ணப்பம்" என்று தொடங்கி, எல்லாப் பொருள்களுக்கும் முன்னாகியும் முடிவாகியும் நின்றவரைத், தமது திருமேனியில் உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட வரைச், சங்கரரை, அவரது நல்ல நாமங்களைப் பாடும் திருவிருத்தப் பதிகத்தை நலம் சிறக்கப்பாடுதலும்,

151

1417. (இ-ள்.) வெளிப்படை. திருநீடும் தூங்கானைமாடத்தில் நிலாவும், பொன்மேருமலையை வில்லாக உடைய பெருமானரது திருவருளினால் ஒரு சிவபூதமானது, பக்கத்தில் ஒருவரும் அறியாதபடி (வந்து), திருநாவுக்கரசருடைய திருத்தோள்களில் ஒளியான் மிகுந்த மூவிலைக்சூலச் சினவிடைக் குறியோடும் சாத்தியிட,

152

1418.(இ-ள்.) வெளிப்படை. அவர் தமது திருத்தோள்களில் நிறைந்த திருமுத்திரைகளைக் கண்டு, மனகிழ்ந்து, தமது பெருமானது திருவருளை நினைந்து, இடைவிடாது வரும் அருவிபோலக் கண்கள் நீரைப் பொழியத் தொழுது நிலத்தில் விழுந்து மிக்க ஆசையால் நிரம்பி, மேல் எழுந்த சிந்தையராகி "நான் உய்ந்தேன்" என்று கூறி எழுந்தனர்.

153

இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

1415. (வி-ரை.) தொடக்கு - பிணிப்பு; தொடக்குண்டு - பிணிப்புக்குட்பட்டு.

போந்தவுடல் - போந்த என்பது பாழ்போயின - அசுத்தப்பட்டுப் போன - என்ற குறிப்புப்பட நின்றது.

போந்த உடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் - குற்றப்பட்ட உடலாதலின் அதனைத் தாங்கி வாழ்ந்திருக்க மனம் இசையேன். அசுத்தச் செயலும் தொடர்பும் கொண்டால் உடலும் தூய்மையின்றி அசுத்தமாகிவிடும் என்பது துணிபு. அசுத்தமான கலத்தில் பால்விட்டால் பயன்படாதது போல, அவ்வாறு தூய்மையற்ற உடம்பு சன்மார்க்க நெறி நிற்றலுக்கு இடையூறாகத் - தடையாக - இருக்கும்;