பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்315

 

பொற்பினான்" (சிவஞானபோதம் - 11).- (10) அங்கணார் - அழகிய அருட்கண் உடையார். வெருட்டியும் அஞ்சாது தங்கட்பொருந்தும் அடியார்க்கும் என்றதும் குறிப்பு.

தலவிசேடம் :- திருப்பாலைத்துறை என்ற பெயர் இது முன்னர்ப் பாலைவனமாக இருந்த காரணத்தாற் போந்தது. ஆளுடையபிள்ளையார் பாலை நெய்தல் பாடி நனிபள்ளிசூழ் நகரைக் கானகமுமாக்கிய வரலாறு காண்க,. சிவபெருமான் புலியைச் சங்கரித்து உரித்து அதன் தோலை உடுத்த தலமென்பது வரலாறு. சுவாமி - பாலை வனநாதர். அம்மை - தவளவெண்ணகையாள். அம்மை பெயர் பதிகத்துக் காண்க. 11 பாட்டுக்கள் கொண்டது இத்திருப்பதிகம்.

இது பாபநாசம் இருப்புப்பாதை நிலயத்திலிருந்து வடகிழக்கில் மட்சாலை வழி ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது.

பிறவும் :- திருப்பட்டீச்சரம் முதலியன. தலவிசேட முதலியன பின்னர் ஆளுடைய பிள்ளையார் புராணத்துக் காண்க.

1465.

அப்பதியைச் சூழ்ந்ததிருப் பதியிலர னார்மகிழும்
ஒப்பரிய தானங்க ளுள்ளுருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருடேர் நாவினுக்கு வேந்தர்தா மேவினார்
செப்பருஞ்சீ ரப்பூதி யடிகளூர் திங்களூர்.

200

(இ-ள்.) வெளிப்படை. அந்தத் திருப்பழனமாகிய பதியைச் சூழ்ந்த திருப்பதிகளில் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் ஒப்பற்ற திருக்கோயில்களை உள்ளுருகிப் பணிந்து அணைவாராகி, மெய்ப்பொருளைத் தேர்ந்து தெளிந்தாராகிய திருநாவுக்கரசு நாயனார், சொல்லுதற்கரிய சிறப்புடைய அப்பூதியடிகளாரது ஊராகிய திங்களூரை மேவினார்.

200

(வி-ரை.) சூழ்ந்த திருப்பதி - திருப்புள்ளமங்கை - திருச்சக்கரப்பள்ளி முதலாயின. நாயனாரது பதிகங்கள் கிடைத்தில. தலவிசேடங்கள் பின்னர் வந்துழி உரைக்கப்படும்.

தானங்கள் - திருக்கோயில்கள். இறைவன் விளங்க இடங்கொண்டிருக்கும் தானங்கள் என்க.

மெய்ப்பொருள் தேர் - என்பது ஆணவமலங் கழுவிய சீவன்முத்தர்களும் வாதனாமல மறும்பொருட்டும் ஏனை உயிர்களுக்கு வழிகாட்டும் பொருட்டுமாக ஆலயங்களை அரனெனவே கண்டு தொழுதலும், சிவனது தியானமறா உணர்வினுடன் சரித்தலும் முதலாயின. "மெய்ப்பொருள்" (481) என்ற விடத்துரைத் தவையும் நினைவு கூர்க. "பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் - சீவன்முத்தர் சிவமே கண்டிருப்பர்" (சித்தி - 11 - 2) என்றபடி மெய்ப்பொருளாகிய சிவனையே அறிந்துநிற்கும் என்பதாம்.

நாவினுக்கு வேந்தர் - அப்பூதியடிகளார் இத்திருப் பெயரையே மந்திரமாக் கொண்டு வழிபட்டு அந்த நாமத்தால் தருமங்கள் செய்தும், மக்கள் முதலிய எல்லாவற்றுக்கும் அப்பெயரிட்டும் வழங்கிய ஒழுக்கத்தினையே நாயனார் காணவும் அதுகொண்டு மேற்சரிதம் விளையவும் காரணமாயின குறிப்பு.

செப்பருஞ்சீர் அப்பூதியடிகள் - "ஒருநம்பி யப்பூதி" என்று ஆளுடைய நம்பிகள் ஏத்திய அரிய சிறப்பும், நாயனார் தேவாரத்தில் வைத்து ஏத்தநின்ற சிறப்பும், அவரது புராணத்திற் காணப்படுகின்றபடி அவரது அன்பின் திறமாகிய சிறப்பும் செப்பற்கரியன.

திங்களூர் தலவிசேடம் - தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. திருப்பழனத்தினின்றும் வடக்கில் மட்சாலை வழி ஒரு நாழிகை யளவில் அடையத் தக்கது.

மெய்ப்பொருள் சேர் - அப்பூதியடிகளார் - என்பனவும் பாடங்கள்.

200