பக்கம் எண் :


316திருத்தொண்டர் புராணம்

 

1466.

அந்தணரின் மேம்பட்ட வப்பூதி யடிகளார்
தந்தனய ருடன்சாலை கூவல்குளந் தருதண்ணீர்ப்
பந்தர்பல வாண்டவர செனும்பெயராற் பண்ணினமை
வந்தணைந்த வாகீசர் கேட்டவர்தம் மனைநண்ண,

201

1467.

மற்றவரு மனமகிழ்ந்து மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத் தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக்
கொற்றவரை யமுதுசெயக் குறைகொள்வா ரிறைகொள்ளப்
பெற்றபெருந் தவத்தொண்டர் திருவுள்ளம் பெறப்பெற்றார்.

202

1466. (இ-ள்.) வெளிப்படை. அந்தணர்களின் மேன்மைப்பாடு உடைய அப்பூதி அடிகளார், தமது தனயருடன், சாலைகள் - கூவல் - குளம் - தரு தண்ணீர்ப்பந்தர்கள் முதலிய பல தருமங்களையும் "ஆண்டவரசு" என்னும் திருப்பெயரினால் அமைத்தமை, அங்குவந்து அணைந்த வாகீசர் கண்டும் கேட்டும் தெரிந்தாராய், அவரது திருமனையை அடைய,

201

1467. (இ-ள்.) வெளிப்படை. அவரும், மனமகிழ்ந்து தம் மனைவியார் மைந்தர்கள் பெருஞ்சுற்றமுடனே மகிழ்ச்சி மீக்கூரக் கண்டு, தெரிந்து, தொழுது, எழுந்து, சூழவந்து, திருநாவுக்கரசு நாயனாரைத் தமது திருமனையில் அமுது செய்யும்படி வேண்டிக்கொள்வாராகி அவரது இசைந்த மறுமொழியை வேண்டி நிற்க, எதிர்பாராது தாமே நவந்து கிடைக்கப்பெற்ற பெரிய தவத்தினையுடைய அவரது திருவுள்ளத்தின் இசைவினைப் பெறும்பேறு பெற்றார்.

202

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1466. (வி-ரை.) அந்தணர் - அந்தத்தை அணவுபவர். "சிவமென்னும் அந்ததர" (12-ம் சூத் - சிவஞானபோதம்) என்றவிடத்திற்போல. அந்தம் - வேதாந்தத் தெளிவாகிய சைவ சித்தாந்தத்தை யுணர்த்திநின்றது. அந்தத்தை அணவுதலாவது சைவ சித்தாந்தத்தின் முடிந்த நிலையாகிய ஞானநிறைவும் சத்திநிபாதமும் பெற்று நின்றும், பிராரத்தமுள்ளளவும் உடல் தாங்கி நிற்க வேண்டி யிருத்தலால் அதுவரை உலகத்தொடு ஒழுகி நிற்பினும், திருவேடமும் சிவாலாயமுமே பொருளென்று கொண்டு வழிபட்டு அதில் உறைத்து நின்று ஒழகுதல். அந்தணரின் மேம்பட்ட - அவ்வுறைப்பில் முதிர்ந்து நின்று. "முன்பொழியுங் கருணைபுரி வடிவுடையீர்" (அப்பூதி - புரா - 10), "மங்கலமாந் திருவேடத் துடனின்றிவ் வகைமொழிந்தீர்" (மேற்படி - 15) என்ற திருப்பாட்டுக்கள் இதனை வலியுறுத்ததும். அந்தணர் - இங்குக் காரண இடுகுறியளவாய் நின்று முதல் வருணத்தவர் என்பதுணர்த்திநின்றது.

தனயர் - மக்கள். மக்களுக்குத் திருநாவுக்கரசு என்று பெயர் சாற்றியதனோடு என்க. உடன் என்ற உரபு உயிர்ப்பொருள்களை உயிரில் பொருள்களாகிய சாலை முதலியவற்றினின்றும் பிரித்து நின்றது. சிறப்புப்பற்றி, உடன் உருபைத் தனயர் என்பதனுடன் சார்த்தி ஒதினார். அப்பூதியாரும் நாயனாரும் கூடும் சரித விளைவு தண்ணீர்ப்பந்தலிற் றொடங்கித் தனயரது செயல் பற்றிய செய்தியில் நிறைவேறுகின்றது என்று குறிக்கத் தனயருடன் என்பதை முதலிலும் தண்ணீர்ப் பந்தரை இறுதியிலும் வைத்தோதினார்.

சாலை - வழி போவார்க்கு உதவ நிழல் மரம் வைத்தும், சமண் செய்தும், மற்றும் வசதிகள் செய்தும் உள்ள நெறி. அறச்சாலைகள் என்றலுமாம்.