பக்கம் எண் :


356திருத்தொண்டர் புராணம்

 

எழுந்து - கீழே வீழ்ந்த நிலையினின்றும் மேல் எழுந்து.

அன்பு கூர - இடைநிலைத் தீபம்; கண்டு முதலிய எல்லாவற்றோடும் கூட்டுக.

கண்கள்....பொழிய - மழைபோலக் கண்ணீர் பெய்ய. "அன்பர் வார்ந்த கண்ணருவி மஞ்சன சாலை" (திருவிசைப்பா).

தம்மை - தமது. வேற்றுமை மயக்கம். கழல் போற்றி - என்பது "கழலடி பூண்டு கொண்டெழுந்தேன்" என்ற தேவாரத்தினா லறியப்படும்.

போற்றித் திருத்தாண்டகம் புனைந்து - துதித்துத் திருத்தாண்டக யாப்பினால் இயன்ற பதிகம் கட்டளையிட்டு. போற்றி போற்றி என வருவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என வழங்கப்படும். போற்றி - போற்றப்படுவதாக. இகர வீற்று வியங்கோள் வினைமுற் றென்பர்.

தொழுது கரசர ணாதி யங்கங்களெல்லாம் - என்பதும் பாடம்.

222

திருவாரூர் - திருமூலட்டானம்

II திருச்சிற்றம்பலம்

போற்றித் திருத்தாண்டகம்

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி;
         கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி;
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி;
         யல்லலறுத் தடியேனை யாண்டாய் போற்றி;
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி;
         வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி;
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி;
         திருமூலட் டானனே போற்றி போற்றி;

1

பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி;
         பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி;
கரநான்கு முக்கண்ணு முடையாய் போற்றி;
         காதலிப்பார்க் காற்ற வெளியாய் போற்றி;
யருமந்த தேவர்க் கரசே போற்றி;
         யன்றரக்க னைந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரநெரித்த சேவடியாய் போற்றி போற்றி;
         திருமூலட் டானனே போற்றி போற்றி.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இறைவரது புகழ்கள் பலவகையாலும் போற்றப் பெறுவனவாக. குறிப்பு :- போற்றி என்பதை நம - வணக்கம் என்னும் பொருளில் கொண்டு இப்பதிகத்தையும், இன்னும் திருவதிகைப் போற்றித் திருத்தாண்டகம் (1) திருக்கயிலாயப் போற்றித் திருத்தாண்டகம் (3) பதிகங்களையும் இறைவரை அருச்சிக்கும் பகுதிகளாகக் கொண்டு வழிபடும் அன்பர்களு முண்டு. இப்பதிகத்தினுள் போற்றி என்பது 108 முறை வைக்கப்பட்டுள்ளது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கற்றவர்கள் உண்ணுங் கனி - கற்றவர்கள் என்றது ஈண்டு மனமிறக்கக் கற்றுத் தற்போதமிழந்த பெரியோர் என்ற பொருளில் நின்றது. கனி - உருவகம். பயன் என்ற பொருள்பட நின்றது. உண்ணுதல் - அனுபவித்தல். "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை" (திருவிசைப்பா). கதி - சேருமிடும். செல்சார்வு. அற்றவர் - தம்மையன்றி வேறு பற்றுக்கோடில்லாதவர். "மற்றுப் பற்றெனக் கின்றி" (தேவா). -(2) வங்கம் - மரக்கலம் - கப்பல்.