சண்பையர் நாதன் - சொல்லின் நாதர் - இருவரையும் நாதர் என்று குறித்தது ஆண்டவன் திருவுள்ளத்திலும், அடியார்களது திருவுள்ளங்களிலும் இருவரும் ஒப்ப நிகழும் பெருந்தன்மை வாய்ந்தவர் என்று குறித்தற்கு. 1499-ல் வாய்மை என்றதனை இருவர்க்கும் புணர்த்தி ஓதியதும் காண்க. "அருட்பெருகு" (1450) என்ற திருப்பாட்டும், "சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவு மரசுந் திருமுன்பு" (1529) என்பதும், பிறவும் காண்க. இக்கருத்தைப் "பாட்டுக்கு நீயுமவனு மொப்பீரெப் படியினுமே" என்று பாராட்டினர் சிவப்பிரகாச சுவாமிகள். நாமரு செஞ்சொல் - பூமலிவாவித் - என்பனவும் பாடல்கள். 237 1503. | அத்திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தஞ் சித்த நிறைந்தே யன்பு தெவிட்டுந் தெளிவெள்ளம் மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப் பைத்தலை நாகப் பூணணி வாரைப் பணிவுற்றார். |
238 (இ-ள்.) அத்திரு...நாவுக்கரசம் - அந்தத் திருமூதூரில் எழுந்தருளும் திருநாவுக்கரசு நாயனாரும்; தம் சித்தம் ... முழுதார - தமது உள்ளத்தில் நிறைவாகித் தேக்கித் தெளிந்த வெள்ளமாகக் கூர்ந்து வழிகின்ற தாரையாகக் கண்களினின்றும் பொழிகின்ற நீர் உடம்பு முழுதும் நிறையப்பொருந்த; பைத்தலை ... பணவுற்றார் - நச்சுப் பையினைக்கொண்ட தலையினையுடைய நாகத்தைப் பூணாக அணிந்த சிவபெருமானைப் பணிவுற்றார். (வி-ரை.) மேவிய - மேற்கூறியவாறு புக்காராகிப் பொருந்திய. சித்த நிறைந்தே இன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் மொய்த்திழி தாரை - உள்ளத்தில் அன்பு நிறைந்து தெவிட்ட, அது வெள்ளமாய்ப் பெருக, அப்பெருக்கு இடங்கொள்ளாது மேல் வழிந்தது போலத் தாரையாகக் கண்ணீர் பெருகிற்று என்க. காணக்கூடாத அன்பைக் காணக் காட்டுவது கண்ணீர். "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர், புன்கணீர் பூச றரும்" (குறள்). நாயனார்க்குக் கண்ணீர் பெருகி உடம்பு முழுதும் நனைய வருதலின் உள்ளே நிறைந்த அன்பு பெருகி வழிந்தது போன்ற தென்றார். நாயனாரது திருவடிவத்தின் இத்தன்மைபற்றி முன் உரைத்தவற்றை இங்கு நினைவுகூர்க. புகலூர்ப் பெருமான் இனி இறுதியிற் றம்மைத் திருவடிக்கீழ் இருத்துவராதலின் அதன் சாயை முன்றோன்ற இவ்வாறு மெய்ப்பாடும் உள்ள நிகழ்ச்சியும் உண்டாயின வென்பது. சித்த நிறைந்தே அன்புக் - கண்ணீர் மெய்ம்முழுதாரப் பணிவுற்றார் - இதனால் மனத்தாலும் உடம்பாலும் வழிபாடுகள் கூறினார். வாக்கின்பணி வரும்பாட்டிற் கூறுவார். தெவிட்டும் தெளிவெள்ளம் - தெவிட்டுதல் - நிறைந்து தேக்குதல். தெளி வெள்ளம் - நிறைந்து தேங்கிய நீர், தெளிந்து வெள்ளமாகப் பெருகும் நிலை குறித்தது. தெளி - வெள்ளத்துக்கும், உள்ளத்துணர்ச்சிக்கும் பொருந்தத், தெளி என்றது சொல்லணி. "உள்ளத்திற் றெளிகின்ற அன்பின் மெய்ம்மை யுரு" (திருஞான - புரா 1023). மொய்த்து இழி தாரை - மொய்த்தல் - கூர்தல்; நிறைந்து ததும்புதல். இழிதல் - வழிதல். தாரை - நீர் - தாரையாகிய நீர். தாரை - இடையாறாது பொழிவது. "முகமெலாங் கண்ணீர் வார" (நோரிசை.) மெய்ம் முழுது ஆர - உடம்ஹபு முழுமையும் நனைக்க. 238 |