பக்கம் எண் :


408திருத்தொண்டர் புராணம்

 

வாழ்க்கை யில்லை. 4-9 திருப்பாட்டுக்கள் மருகற்பிரானாரை நாயகராய்க்கண்டு கொண்டு பிரிந்த தலைவி வருந்தும் நிலை கண்டு நற்றாய் கவன்றுரைத்ததாக அகப்பொருட்டுறையில் அமைந்தன.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வணங்கவே - தவம் பெருகல் ஆ(கு)ம் - சிந்தை திருத்தல ஆ(கு)ம் - பருகல் ஆ(கு)ம் என்க. -(2) பாடங்கொள் பனுவல் - வேதம் முதலிய கலைஞானங்கள்; அபர ஞானம். அங்கு உள்ளன நாடு தட்டிய - பயனிலிகளாய்த் திரிந்த. நாணிலீர் - பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பிரானடி பேணாது பெறுதற்கரிய பேறிழந்தமையால் நாணற்றவர்களே என்றிரங்கியது.-(3) சினம் - இங்குக் காமம் முதலிய எல்லாத் தீக்குணங்களின் தொகுதி குறித்தது. செய் தொழில் - (தீக்குணங்களால்) தூண்டப்பட்டுச் செய்யும் தொழில்கள். மிகஆதரவாய் - மிக்க அன்புடன். -(4) ஓது - சொன்னது கேட்டுப் பதிகங்களையும் வேதங்களையும் ஓதும். தூது தன்னிலை யறிவித்து நாயகனை வருமாறு கேட்டு அனுப்பும் தூது.-(5) தாய் கூற்று. கைவளை சோர்தல் - கண்ணீர் - மல்குதல் - காதல் நோயின் மெய்ப்பாடுகள். மேல்வரும் பாட்டில் சங்கு சோர்தல் - கலைசரிதல் - பெருமான் வரும் வீதியுணைதல் என்பவையும் இக்கருத்துப் பற்றியன. -(6) நங்கைமீர் - தோழிமார்களே நோக்கிக் கூறியது. -(7) தாழ்ச்சி - விருப்பம். -(8) கூடலிழைத்தல் - தரையில் தொடர்ந்து சுழிகள் கீறிக் கணக்கிட்ட சுழிகளில் தொடங்கிய இடத்தைக் கூடின் காரியம் கூடும் என அறியும் ஒரு வழக்கு; குறி பார்க்கும் வகைகளுள் ஒன்று. "ஆழிதிருத்திச் சுழிக்கணக்கோதி" (கோவை - 186). -(9) குழல் கட்டிலள் - சிந்தை செய்து - திகைத்தல் - கூடலிழைத்தல் - இவை பிரிந்து வருந்தும் நாயகியின் நிலைகள். குறிப்பு :- இப்பதிகத்துள் 1, 2, 3, 4, 10 பாட்டுக்கள் ஒரு கருத்தும், 5 முதல் 9 வரை பாட்டுக்கள் ஒரு கருத்தும் பற்றியன.

தலவிசேடம் :- திருமருகல் - ஒரு வணிகக் கன்னிக்கு இரங்கி, வணிகனை விடந்தீர்த்து ஆளுடைய பிள்ளையார் அருளிய அற்புதம் நிகழ்ந்த தலம். வரலாறு அவர் புராணம் 472 முதல் 483 வரை பாட்டுக்களுட் காண்க. விடந்தீர்த்த பிள்ளையார் தெற்குச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். மருகல் என்பது வாழை வகைகளுள் ஒன்று; இத்தலமரம் வாழையாதலின இப்பெயர் பெறுவதென்பர். இஃதொரு மாடக்கோயிலாகக் காணப்படுகிறது. இத்தலப் பதிகங்கள் அகப்பொருட்டுறைச் சுவைபட அமைந்தமை குறிக்கத் தக்கது. திருச்செங்காட்டங்குடியுட் கணபதீச்சரத்தில் எழுந்தருளிய திருக்கோலத்தை இங்குக் காட்டக்கண்டு ஆளுடைய பிள்ளையார். அற்புதத்தோடு வணங்கி இருதலங்களையும் சேர்த்துத்" திருச்செங்காட்டங்குடியும் திருமருகலும்" வினாவுரையாகிய திருப்பதிகம் பாடியருளிப்பின் கணபதீச்சரம் தரிசித்தருளினர்; அத்திருப்பதிகத்தினுள் வேதமோதும் சிறப்புத் திருமருகலிலும், செந்தமிழ்ச் சிறப்புத் திருச்செங்காட்டங்குடியிலும் வைத்துப் பாராட்டிய திறம் கருதத்தக்கது. சுவாமி அவரது பெயருக்கேற்ப அழகிய திருமேனியுடன் விளங்குகின்றார். சுவாமி - மாணிக்க வண்ணர்; அம்மை - வண்டுவார் குழலி; தலமரம். வாழை; பதிகம் 3.

நன்னிலம் என்ற இருப்புப் பாதை நிலயத்தினின்றும் கிழக்கே மட்சாலைவழி 4 நாழிகை யளவில் திருப்புகலூரை யடைந்து, அங்கு நின்றும் கிழக்கே மட்சாலை வழி 3 நாழிகை யளவில் இத்தலம் அடையத்தக்கது. திருக்செங்காட்டங்குடியினின்றும் வட கிழக்கில் 2 நாழிகை யளவில் உள்ளது.

1506.

அப்படி சின்னாள் சென்றபி னாரூர் நகராளுந்
துப்புறழ் வேணிக் கண்ணுத லாரைத் தொழுதிப்பான்
மெய்ப்பொருண் ஞானம் பெற்றவர் வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூன் மார்பரும் வந்தார் புகலூரில்.

241