பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்439

 

விகுதி - வலிந்து கொள்ளப்படுதல் குறிக்க வழங்குவதாயிற்று. -(10) கறு - சினம். நெறுக்கு - ஒலிக்குறிப்பு, இறக்கின்று - சாகும் நாள். "அஞ்செழுத்தும் சாமன்றுரைக்க" (தேவா - நாகை - விருத்).

குறிப்பு :- உயிர்கள் சிவனை எப்போதும் மறவாமலிருத்தல் வேண்டும். மறக்கச் செய்வன நோய் - பசிப்பிணி - உணடி - பிறவிச்சூழல் - மரணகால வேதனை முதலியன. அக்காலத்தும் சிவனை மறத்தலாகாது. "நான் அவற்றின் வசமாகி மறக்கநேரினும் நீர் மறவாது என்னைக் குறிக்கொண்டருள வேண்டும்" என்று இறைவனை எப்போதும் பிரார்த்தித்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது இப்பதிகத்தால் உலகர்க்கு வற்புறுத்தி உபதேசிக்கப்பட்டது.

IV திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கரைந்து கைதொழு வாரையுங் காதலன்;
வரைந்து வைதெழு வாரையும் வாடலான்;
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்,
விரைந்து போவது வீழி மிழலைக்கே.

1

குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்,
உழலை யாக்கையை யூணு முணர்விலீர்!
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்,
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.

6

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வீழிமிழலை இறைவர் பணிந்தார்க்கும் பணியார்க்கும் எல்லா உயிர்களுக்கும் ஒப்ப அருள்பவர்; அவர் வினைகெடுப்பர்; தம் பிறப்பொடு சாதலை விரியினாரும் வானவரும் அந்தணரும் திருவேடத்தார்களும் வினையிலாரும் அவரைத் தொழுவர்; அவரைக் சார்பவர் விண்ணாள்வர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கரைந்து - மனம் கரைந்து உருகி; கரைதல் - சொல்லுதல் என்று கொண்டு, துதித்து என்றலுமாம். வரைந்து - விலக்கி; வைதெழுவார் - உலகாயதர் முதலிய புறச்சமயிகள் பாரிடம் - பூதகணம். -(4) குருக்கேத்திரம் - குருக்ஷேத்திரம். பாடத்தார் - கூட்டத்தாராகிய. பாடத்தாராகிய வேடத்தார். பழிப்பார் பழிப்பல்லதோர் - பழிப்பவர்களாலும் பழிக்கப்படாததாகிய. மூன்றுறனுருபும் சிறப்பும்மையும் தொக்கன. வேடம் - சிவனடியார் திருவேடம்.-(5) விடுத்து - வினைகளின் நீங்கி. -(6) குழலை யாழ் மொழியார் - குழலையும் யாழினையும் ஒத்த மொழியுடைய பெண்கள். ஐகாரம் சாரியை. உழலையாக்கையை - உழலும் உடலை. ஊணும் - பேணுகின்ற என்ற பொருளில் வந்தது. "தழலை மடிக்கொள்ளன்மின்" பழமொழி. தீயை மடியில் வைத்தால் எரித்துவிடும் என் றறியாது வைக்கும் அறிவின்மைபோல. உடலை ஓம்பி நாட்கழித்து மடிதல். -(7) ஆடிய - மஞ்சனம் ஆடியதுபோன்று முழுதும் விரவிய. இப்பாட்டுச் சிவனது வண்ணமும் தன்மையும் கோலமும் அழகுபடக்கூறிற்று. -(8) தம்பிறப்பொடு சாதலை விரியினார் - இறைவனை அடைந்து தமது பிறப்பையும் சாதலையும் நீக்கிககொண்டவர். -(9) காண்டு - காணத்தக்க. -(10) பாலையாழ் - யாழ்வகை; செவ்வழி - பண். மாலை - மாலை சூடிய. மாலைக்காலம் என்றலுமாம். மாலைக்காலம் தேவர் பூசைக்காலம் என்ப. அந்தணர் ஆகுதி - வீழிமிழலை பெரும் மறையோர் வாழ்பதி. -(11) வாழ்கென விட்டதே - வாழ்க. என்று போற்றியவுடன் விரல் ஊன்றுதலை விட்டனர்.