பூந்தண்புனல் - பூ - அழகு. நீருக்கு அழகாவது காண இனிமையும், பேணுமினிமையும், மென்மையாய் அலைத்தோடும் இயல்பும் முதலாயின. "பூந்தண்பொன்னி" (1206) பார்க்க. வாழ் - நிலைத்து வீற்றிருக்கும். அடைந்தாரை வாழ்விக்கும் என்று பிற வினையாக்கி உரைத்தலுமாம். ஏய்ந்த அன்பினால் - ஏய்தல் - நிறையப் பொருந்துதல். அன்பு ஏய்ந்த அதனால். இசைவண் தமிழ் - வண்மையாவது வேண்டிய வேண்டியாங்குதவும் தன்மை. இசை - தமிழிசை. தேவாரங்களின் வண்மை பலபடியானும் முன்சரிதங்களாலறியப்படுதலன்றி, இன்றும் அவற்றை மந்திரமாக்கொண்டு பயில்வார் பெறும் பயன்களாலு மறியப்படும். தமிழ்கள் - தமிழ்ப்பதிகங்கள். பூந்தண்பொழில் - வாஞ்சியத்திற்றங்கி - என்பனவும் பாடங்கள். 263 திருவாஞ்சியம் -பதிகம் - தலவிசேடம் முதலியவை 1481-ன் கீழ் உரைக்கப்பட்டன. புனிதர்வாழ் பதிகள் - (இறைஞ்சிப் போய்) - இவை திருவாஞ்சியத்திற்கும் திருமறைக்காட்டுக்கும் இடையில் உள்ளன. திருத்தலையாலங்காடு, திருப்பெருவேளூர், திருச்சாத்தங்குடி, திருக்கரவீரம், திருவிளமர், திருவாரூர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை - இவையும், மற்றும் பற் பலவும், திருத்தண்டலை நீணெறியும், திருக்களரும், பிறபதிகளுமாம் என்பது திருஞானசம்பந்தநாயனார் புராணம் 573 - 574 - 575-வது திருப்பாட்டுக்களாலறியப்படும். இவற்றை விரிவாய்ப் பின்னர் ஆங்குக் கூறவேண்டி யிருத்தலானும், இவற்றுட் டலையாலங்காடு, பெருவேளூர் என்பவற்றைத் தவிர ஏனையவற்றுக்கும் நாயனார் பதிகங்களை கிடைத்தில ஆதலானும், இங்கு விரித்துக் கூறாது இறைஞ்சித் தமிழ்மாலைகளும் புனைந்து என்று பொதுப்படக்கூறிப் போந்தனர் ஆசிரியர். பிள்ளையாரும் நாயனாரும் ஒருங்குசேர்ந்தே இந்த யாத்திரை செய்தருளினார்களாதலானும், முன்னர் நாயனார் சென்றவழியே பின்பற்றி ஆளுடைய பிள்ளையார் சென்று சேர்ந்தனராதலானும் இவற்றை நயனாரும் சென்று வணங்கிப் பாடினர் என்பது துணிபு. திருத்தலையாலங்காடு திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை யண்டத்துக் கப்பாலைக் கப்பாலானை யாதிரைநா ளாதரித்த வம்மான் றன்னை முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- தலையாலங்காட்டில் விளங்கி எழுந்தருளியுள்ள இறைவர் தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான், அண்டத்துக்கப்பாலைக்கப்பாலான், |