1547. (வி-ரை.) பாடும் தமிழ் மாலைகள் கொண்டு - தொடர வந்து மறைந்த போது நாயனார் பாடியருளிய "எங்கே யென்னை" என்ற திருக்குறுந்தொகைப் பதிகமும், காட்சி கண்டு பிள்ளையார் பாடியருளிய "தளிரிள வளரென வுமைபாட" என்ற பண் - நட்டராகப் பதிகமும், அவர் காட்டக் காட்சி கண்டு நாயனார் பாடியருளிய "பாட அடியார் பரவக் கண்டேன்" என்ற திருத்தாண்டகப் பதிகமும் என்ற மூன்று பதிகங்களையும் கொண்டு என்க. பாடும் தமிழ் மாலைகள் என்று பன்மையாற் கூறிய கருத்தும் இது. பாடும் - இது பெருமக்களும் பாடிய. கொண்டு - கொள்ளுதல் - ஏற்று அணிந்துகொண் டருளுதல். நீடும் திருவாய்மூர் - திருவாய்மூர் என்ற நகர் எல்லைக்குள் அடங்காது, திருமறைக்காட்டில் நாயனார் உன்னித் துயின்ற துயிலினும், அணித்தே காட்சி கொடுப்பார்போலக் காட்டிப் புகுந்த பொற்கோயிலினும், பின்னர் அவர் முன்பு வழி முழுவதினும், பின்னர்க் காட்டிய காட்சியினும், அதன்பின் திருவாய் மூரினுமாக இத்துணையும் நீடிய தன்மை குறிப்பு. இச்சரிதப் பெருமையால் அடியார்களுள்ளத்தில் என்றும் நீடிய என்றதும் குறிப்பு. நிலவும் கோயில் - முன்னே கூட்டிவந்த வழியில் அணித்தே காட்சிகொடுப்பார்போலக் காட்டி மறைந்த பொற்கோயில்போலல்லாது, அடியவர்கள் என்றுங் கண்டுய்யும்படி விளங்கும் கோயிலென்பது குறிப்பு. நிலவுதல் - நிலைபெற்றிருத்தல். போற்றித் துதிசெய்து - இது பெருமக்களும் பாடித் துதித்து. இத்தலத்துப் பாடிய பதிகங்கள் கிடைத்தில! முன்னர் அருளியவை வழியில் காட்டி மறைந்த பொற்கோயிற் காட்சியிற் பாடியவை. நாடும் காதல் உயர்ந்தோங்க நயத்து உடன் உறைந்தார் - நாடும் காதல் - சிவபெருமானைருளையே சிந்திதுத் திளைக்கும் பேரன்பு. நயந்து - விரும்பி. உடன் உறைந்தார் - முன்னர்த் திருமறைக்காட்டில் திருமடத்தில், இறைவரது திருவுளச் செவ்வியறியாது பிழைத்துத் திருவருட்கு அயலானவர் என்று தம்மை எண்ணி, அதனால் அடியார்களுடன் உறையத் தகாதவர் என்று அஞ்சி, ஒருபுறம் ஒதுங்கி அணைந்த நாயனார், இப்போது திருவருட் குறிப்புக்களைப் பெற்று அருட்காட்சியும் பெறப் பெற்றமையால், தாம் கொண்ட பிழைப்பட்ட அச்சத்தினீங்கிக்,காதல் சிறந்தோங்கப் பிள்ளையாரோடு உடன் உறைந்தனர் என்க. அருட்குறிப்புக்களாவன: திருவாய்முர் நிகழ்ச்சிகளால் தாமும் பிள்ளையாரும் ஒப்பவே இறைவரது திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர்கள் என்று தெளிதல். உடன் உறைந்தார் - திருவாய்மூர் நோக்கி இரவில் தொடர்ந்து போந்த இருபெருமக்களும் திருமறைக்காட்டுக்கு மீண்டு சென்றருளும்வரை சிலகாலம் திருவாய்மூரில் உடனாக எழுந்தருளியிருந்தனர். 282 1548. | ஆண்ட வரசும் பிள்ளையா ருடனே யங்க ணினிதமர்ந்து, பூண்ட காதல் பொங்கியெழ வாய்மூ ரடிக ளடிபோற்றி, மூண்ட வன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக்காட் டெய்தி விமலர் தாள்பணிந்தார். |
283 (இ-ள்.) வெளிப்படை. ஆளுடைய அரசுகள் ஆளுடைய பிள்ளையாருடனே அந்நகரில் இனிதாக எழுந்தருளியிருந்து, பொருந்திய காதல் மேன்மேற் பொங்கி எழத், திருவாய்மூர்ப் பெருமானது பாதங்களை துதித்து, மிகுந்த அன்பினாலே திருப்பதிகத் தமிழ் மாலைகளையும் சாத்தி, ஞான முனிவராகிய பிள்ளையாரோடும் மீண்டருளிவந்து திருமறைக்காட்டினை அணைந்து விமலரது திருவடிகளைப் பணிந்தனர். |