IV திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி யாரையு மேலு ணரா வாண்மையான் மிக்கான் றன்னைப் பாரையும் விண்ணு மஞ்சப் பரந்ததோள் முடிய டர்த்துக் காரிகை யஞ்ச லென்பார் கலிமறைக் காடனாரே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மறைக்காடனாரே, அஞ்சாது கயிலைமலையினை எடுக்கப்புக்க இராவணனை ஒரு விரலால் ஊன்றி அடர்த்தார்; அதுகண்டு பூதம் எல்லாம் நக்கன; அவன் முன்கை மா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட அங்கைவாள் அருளினார். குறிப்பு :- இப்பதிக முழுமையும் இராவணன் கயிலை எடுத்ததொரு வரலாறு பற்றியே அருளப்பட்டது. "கூற்றாயின வாறு" என்ற பதிகப்பாட்டுக் குறிப்புக்கள் (10 பாட்டு - பக்கம் 90) பார்க்க. இங்குத் தரிசித்தபோது கயிலாயக் குறிப்பு நாயனார் திருவுள்ளத்துத் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது கருதப்படும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தெழித்து - அதட்டி. யாரையும் மேல் உணரா ஆண்மை - தனக்குமேல் எவரும் இருப்பதாக எண்ணாத வீரம். மிக்கான் - மிக்கு எழுந்த இராவணன். காரிகை - உமையே! விளி. "அரக்கனுணரா, தொருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்த விரலாற், கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்த கயிலாய மலையே" (பிள் - தேவா). - (2) தெக்குதல் - மிகுதல். - (5) பண்டம் - கையாற் றூக்கக்கூடிய சிறு பொருள். அடுக்க - அழிக்க. - (6) நாள் முடிக்கின்ற - தனது வாழ்நாளுக்கு முடிவு எல்லை கட்டுகின்ற. நடுங்கியே - அஞ்சியே. போகான் - போகானாகி. - (8) பக்க மேலிட்ட கையான் - பக்கங்களில் முளைத்த அனேகங் கைகளையுடைவன். போதுமாறு - வணங்கிச் செல்லுமாறு. பூதம் - கயிலையிற் சூழ்ந்துள்ள சிவபூதகணங்கள். "கோடி கோடி குறட்சிறு பூதங்கள், பாடி யாடும் பரப்பது பாங்கெலாம்" (திருமலைச்சிறப்பு). - (9) நாணஞ்சு - நாலஞ்சு என்பது நாணஞ்சு என மருவி நின்றது. பாணஞ்சு - பாண் - தாழ்ச்சி. "சிறகாற் புல்லிப் பணிந்து பாண் செய்ததன்றே" (சீவக - 1624). அஞ்சு - அச்சம். அஞ்சுதல் முதலிலைப்பெயர். பாணும் அஞ்சும் என்க. தாழ்வும் அச்சமும் இழந்தவனாய். நீள் அஞ்சு என்பது நீணஞ்சு என மரீஇயிற்று. "நீணுல கெலாம்" (கோயில் - குறுந் - 4). நீள் அஞ்சு - வேண்டுமாறு நீண்டு சென்று வீழ்த்துவனவாகிய ஐம்பொறிகளின் சேட்டை. பொறிகளுக்கு மூலமான ஆணவத்தால் என்பாருமுண்டு. ஏண் - அஞ்சுகைகள் - ஏண் - கர்வப்பேச்சு. "ஏண் பலபகர்ந்தனை" (கந்த பு. அவைபுகு. 153). அஞ்சுகைகள் - அஞ்சிய பேச்சுக்கள். கர்வப்பேச்சுப் பேசியஞான்றே அஞ்சிப் பேசச் செய்தார். "ஆர்த்தவா யலற வைத்தார்" (நேரிசை - அதிகை). ஏண் - நஞ்சுகை - என்று பிரித்து, கர்வம் நைந்து போதலை என்றலுமாம். V திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய்விரத மெல்லா மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன் றானே. 1 கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய் காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய் புள்ளி யுழைமானின் றோலான் கண்டாய் புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய். |
|