பக்கம் எண் :


516திருத்தொண்டர் புராணம்

 

திருச்சிராப்பள்ளிமலை

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

மட்டு வார்குழ லாளொடு மால்விடை, யிட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ், சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே,


தாயுமா யெனக் கேதலை கண்ணுமாய்ப், பேய னேனையு மாண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய, நாய னாரென நம்வினை நாசமே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருச்சிராப்பள்ளி இறைவர் கட்டு நீத்தவர்க்கு இனிய அருளே செய்வர்; அவரது ஊரைச் சொன்ன அளவில் தீவினை நரிச்சிருக்கமாட்டாது நடக்கும்; அவர் எனக்குத் தாயுமாகித் தலையும் கண்ணுமாவார்; அவரைச் சொல்லவே வினை நாசமாம்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மட்டுவார் குழலாள் - தல அம்மை பெயர். கட்டு - பாசம்; உலக ஆசை; பற்று. இன் அருளே இனிய அருளையே. நீத்தவர்க்குத் துன்பமன்றி இன்பமே. ஏகாரம் பிரித்துக் கூட்டி, நீத்தவர்க்கே யருள் செயும் என்றலுமாம். - (2) வட்டாடினார் - செண்டாடினார். - (3) அரிச்சு - அரித்து. சுரிச்சு - சுழித்து - சுழன்று. நரிச்சும் - ஒளிந்தும், நரிச்சு - துன்பஞ்செய்து என்றலுமாம். உம்மை தொக்கது. - (4) தாயுமாய் - தலச்சுவாமி பெயர் தாயுமானார் என்பது. நயனார் - தலைவர்.

குறிப்பு :- இப்பதிகத்துள் கிடைத்துள்ள 4 பாசுரங்கள் தவிர ஏனையவை ஆறும் சிதலரித்தொழிந்தன!. இப்பதிகம் சில பிரதிகளில் இல்லை.

தலவிசேடம் :- திருச்சிராப்பள்ளி - இது உலக வழக்கில் திருச்சினாப்பள்ளி என வழங்குகின்றது. திரிசிரன் பூசித்த காரணத்தால் இப்பெயர் போந்தது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நேர்ந்த போரில், வாயுவினால் தகர்க்கப்பட்ட, மகாமேருவின் மூன்று சிகரங்களுள் ஒன்று. (ஏனை இரண்டு - திரிகோண மலையும் திருக்காளத்தியும் என்ப.) தட்சிண கயிலாயம் என்பர். பிரமதேவர், இராமன், நாக கன்னியர் இந்நாள் முதலியோர் பூசித்த தலம். அநுமான் பூசித்த அநும முத்தியை மலையிற் பொறிக்கப்பட்டுள்ளது. அகத்தியர் தாம் பூசித்த இதனோடு ஒப்ப உயர்ந்த மற்றொரு மலையைப் பாதலத்தழுத்தினர் என்பதும் வரலாறு ஒருவணிகப் பெண்ணின் தாய்போல் வந்து இறைவர் பிரசவம் பார்த்ததனால் தாயுமானார் என்று தேற்றமாக வழங்கப்பெறுவர். "தாயுமாய்" என்ற தேவாரம் இக்குறிப்புடையது. சாரமாமுனிவர் சுவாமிக்காக நாகலோகத்திலிருந்து கொணர்ந்த செவ்வந்தி மலரை உறையூர்ப் பராந்தகச் சோழன் தன் மனைவிக்குக் கொடுக்கக் கவர்ந்த சிவாபராதத்திறகாக, இறைவர் மேற்கு நோக்கித் திரும்பி உறையூரில் மண் மழை பெய்யச் செய்தனர்; திருநந்தி தேவர்துவார மூர்த்திகள், ஏனைய பரிவார மூர்த்திகள் எல்லாம் ஆலயத்தின் கிழக்கே உள்ளன; சுவாமி அது முதல் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மலைச் சிகரத்தில் உச்சிப் பிள்ளையார் கோயில் பிரசித்தம். மலை வாயிலும் படிகளும் கோயிற் கற்றிருப்பணிகளும் பல அருமைகளை யுடையன. இத்தலத்தில் பெரியாராய் விளங்கிய மௌன சுவாமிகளிடம் தாயுமான சுவாமிகள் அருளுபதேசம் பெற்றனர். மௌன மடாலய விசாரணைகள் இன்றும் சிறக்கத் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனகர்த்தர் அவர்களால் நடைபெற்றுவருவது. பூர்வச் சோழர் காலமுதல் கோயிலும் குடியும் சிறக்க விளங்குவது. சுவாமி - தாயுமானவர்; அம்மை - மட்டுவார் குழலி; தீர்த்தம் - நன்றுடையான் குளம், தீயதில்லான் குளம் முதலியவை; பதிகம் - 2.