கள்பாடி" (1575) என்று மேல் வரும்பாட்டிற் கூறும் பதிகங்களுள் ஒன்று என்று கருதத்தக்கது. பதிகக் குறிப்புப் பார்க்க. பாடல் புரிதல் - வீழ்தல் - எழுதல் - கண்ணீர் பயிலுதல் - இவை இறைவனார் தம்பாற் செய்த கருணையினை அறிந்தபோது நிகழும் மெய்ப்பாடுகள். இவை சிவானந்தப் பெருவாழ்விற் றிளைக்கும் மெய்த்தவத்தார்பாலே நிகழ்வன. ஆடல் புரிந்தார் - வெளிப்பட வேடங்காட்டி நின்றபோது அறிய வாராது, மறைந்தபோது அறிய வருவது திருக்கூத்தின் பெருமை என்பதும் குறிப்பு. மெய்ம்மைத் தவத்து மேலவனார் ஆதலின் இறைவர் இவ்வாறு வெளிப்படவந்து கருணை அளித்தனர் என அதற்குக் காரணம் குறிப்பிட்டவாறு. 309 1575. | பைஞ்ஞீ லியினி லமர்ந்தருளும் பரமர் கோயில் சென்றெய்தி மைஞ்ஞீ லத்து மணிகண்டர் தம்மை வணங்கி மகிழ்சிறந்து மெய்ஞ்ஞீ மையினி லன்புருக விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக் கைஞ்ஞீ டியதந் திருந்தொண் செய்து காத லுடனிருந்தார். |
(இ-ள்.) வெளிப்படை. திருப்பைஞ்ஞீலியில் விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருக்கோயிலினைச் சென்றடைந்து, கரிய அழகிய திருநீல கண்டராகிய இறைவரை வணங்கி, மிக்க களிப்படைந்து, உண்மைப் பண்பின் நீடிய அன்பு உள்ளுருக, விரும்பும் தமிழ்மாலைகளாகிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடி, நீடிய கைத்திருத் தொண்டு செய்து காதலோடும் (நாயனார்) அங்கு எழுந்தருளியிருந்தனர். (வி-ரை.) கோயில் சென்று எய்தி - தலம் குறுகியிட நகர்ப்புறத்தே மறையவனார் மறைந்திட்ட அங்குநின்றும் திருக்கோயிலினை வந்தடைந்து. ஞீலம் - ஞீர்மை - ஞீடிய - எதுகை நோக்கி நகரம் ஞாகரமாக வந்த எழுத்துப்போலி. விரும்பும் - தாம் விரும்பும், இறைவர் மகிழும், அடியார்கள் விரும்பும் என்று பலவும் உரைக்க நின்றது. நீடிய கைத் திருத்தொண்டு என்க - நீடுதல் என்றும் விடாதுபற்றிச் செய்தல். அன்பின் நீடுதலுமாம். தம் - நாயனார்க்குச் சிறப்பாய் உரிய என்றபடி. தமிழ்மாலைகள் பாடி - இவற்றுள் ஒருபதிகமே கிடைத்துள்ளது. அதனிற் காணும் சில குறிப்புக்களால், அது இத்தலத்தினின்றும் நாயனார் புறப்படும்போது அருளப்பட்ட தென்று கருதவும் இடமுண்டு. 310 திருப்பைஞ்ஞீலி திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| உடையர் கோவண மொன்றுங் குறைவிலார், படைகொள் பாரிடஞ்சூழ்ந்தபைஞ் ஞீலியார் சடையிற் கங்கை தரித்த சதுரரை, அடைய வல்லவர்க்கில்லை யவலமே. தருக்கிச் சென்று தடவரை பற்றலு, நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே, அரக்கன் பாட வருளும்மெம் மானிடம், இருக்கை ஞீலியென் பார்க்கிடரில்லையே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருப்பைஞ்ஞீலி யிறைவர் கோவண உடையர்; ஆயினும் ஒன்றுங் குறைவிலர்; சித்தராய்த்திரிவார் வினைதீர்ப்பர்; யாழின் பாட்டை உகந்த அடிகள்; அவரை அடைய வல்லவர்க்கு அல்லல்லில்லை; அவரைத் தொழ வல்லவர் நல்லர்; அவரைத் தொழுது செல்பவர் வினை துளியே; ஆதலின் அவரைத் தொழுது உய்ம்மின்; தொழுவார்கள் போய் வானவரோடினிதாக இருப்பர்; நான் சமண்மிண்டரினின்றும் போந்து அவர் அடியடைந்துய்ந்தேன். |