பக்கம் எண் :


526திருத்தொண்டர் புராணம்

 

இவற்றை அடைந்து வழிபட்டபின் ஆளுடைய பிள்ளையார் காவிரி கடந்து கொங்கு நாட்டில் திருக்கொடிமாடச் செங்குன்றூரையும், ஆளுடையநம்பிகள் திருப்பாண்டிக் கொடுமுடியையும் அடைந்த வரலாறுகளை அவ்வவர் புராணங்களுட் காண்க. (திருஞான - புரா - 324; ஏயர்கோன் - புரா - 85).

திருவானைக்கவினின்றும் வடமேற்கே மட்சாலை வழி ஏழு நாழிகையளவில் மணச்ச நல்லூரினின்றும் மேற்கே ஒன்றரை நாழிகையளவில் இதனை அடைவது ஒரு வழி; திருச்சி - விழுப்புறம் கிளை இருப்புப்பாதையில் பிட்சாண்டார் கோயிலினின்றும் மேற்கே மட்சாலை வழி ஒன்றரை நாழிகையளவில் திருப்பாச்சிலாச் சிராமத்தை யடைந்து அங்குநின்றும் மட்சாலை வழி வடமேற்கே நான்கு நாழிகையளவில் அடைவது மற்றொரு வழி. திருவானைக்காவிலிருந்து பாலத்தின் வழி காவிரி கடக்கப்படுவதனால் இருவழியும் சிரமமில்லை.

1576.

நாதர் மருவுந் திருமலைக ணாடும் பதிகள் பலமிகவுங்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக், கலந்த விசைவண் டமிழ்பாடித்;
மாதொர் பாக ரருளாலே வடபானோக்கி வாகீசர்
ஆதி தேவ ரமர்ந்ததிரு வண்ணா மலையை நண்ணினார்.

311

(இ-ள்.) வெளிப்படை. நாதர் பொருந்த எழுந்தருளியிருக்கும் திருமலைகளும் நாடுகின்ற மிகப் பல பதிகளும் மிக்க அன்பு பொருந்தப்போய் வணங்கி, இசைகலந்த வளப்ப மிகுந்த தமிழ்ப் பதிகங்களைப் பாடி, உமை பாகரது திருவருளாலே வடக்குத் திசைநோக்கிச் சென்று, வாகீசர், முதற்றேவராகிய சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்தார்.

(வி-ரை.) திருமலைகளும், பல பதிகளும், சென்று, காதல் கூர, இறைஞ்சிப், பாடிப்போய் என்று கூட்டி உரைத்துக் கொள்க.

நாடும் மிகப் பல பதிகளும் என்று கூட்டுக. நாடும் - நாடப்படும். வழிபடுவோர் கருதி நேடி யடையும் என்பதாம். நாடும் - நாடுகளும் என்றுரைத்தலுமாம்.

இசை கலந்த - என்க. உளங்கலந்த - சிவம் கலந்த - என்றும் உரைக்க நின்றது.

திருமலைகள் - மலைகள் பலவுள்ள நாடாதலின் அங்கங்கும் மலைமேல் இறைவரை வணங்கினர். மலைக்கோயில்களாவன - திருஈங்கோய்மலை, கொல்லி மலையில் அறப்பள்ளி, நயினார்மலை, கஞ்சமலை, பச்சைமலையில் இருக்குவேளூர், தீர்த்தமலை முதலியன.

நாடும் - என்றதனால் நாடுகள் என்ற பொருளில் நடுநாட்டில் உள் நாடுகளும் கொள்ளப்படும். இவை கொங்குநாடு, திருமுனைப்பாடி நாடு முதலியன.

பதிகள் பல மிக - இவை புலிவலம், திருத்தலையூர், நெற்குன்றம், தோழூர், ஏழூர், முதலானவை என்று கருதப்படும்.

காதல் கூர - மேன்மேற் செல்லச் செல்ல அன்புமிக்கூர்தர. கயிலைக்காட்சி காணும் ஆர்வம் முளைக்க என்பதும் குறிப்பு.

கலந்த விசை வண் தமிழ் - சிவங்கலந்த - சிவத்துடன் ஒன்றுபட்ட - இசையினையுடைய வணதமிழ்ப் பதிகங்கள். இவை வைப்புத்தலங்களாதலின் ஏனைத் தலங்களின் துதிகளுடன் கலந்த என்றதும் குறிப்பு.

அருளாலே - இந்த யாத்திரையின் தொடர்ச்சியாய்த் திருத்தொண்டை நன்னாட்டு யாத்திரையும், அதன் தொடர்பில் திருக்கயிலாய யாத்திரையும், கயிலாயத் திருக்காட்சியும் திருவருளால் மேல் நிகழவுள்ளனவாதலின் அருளாலே என்றார்.

வடபால் நோக்கி - வடக்குத் திசையில் உள்ள நாடுகள் - பதிகளை நோக்கிச் சென்று என்க.