நோக்கிச் (சென்று) - நண்ணினார் என்று கூட்டுக. சென்று என்பது விரிக்க. ஆதிதேவர் - ஆதி - மூல முதல்வர். தம்முள் இகலிய பெருந்தேவர்களான பிரம விட்டுணுக்களுக்கு ஆதியான மூல முதல்வராகிய. தேவர் - சிவபெருமான். இத்தலத்தில் பிரம விட்டுணுக்கள் முறையே மேலும் கீழும் தேட அவர்களறியாத வண்ணம் நீண்டு சென்ற வரலாற்றுக் குறிப்பு. அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல். திருவண்ணாமலையைப் நாடிப் பதிபலவும் - என்பதும் பாடம். 311 1577. | செங்கண் விடையார் திருவண்ணாமலையத் தொழுது வலங்கொண்டு துங்க வரையின் மிசையேறித் தொண்டர்தொழும்புக்கெதிர்நிற்கும் அங்க ணரசைத் தொழுதெழுந்து திளைத்துத் திருநா வுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார். |
312 (இ-ள்.) திருநாவுக்கரசர் - வாகீசர்; செங்கண்...தொழுது - சிவந்த கண்களையுடைய விடையினை உடைய பெருமானது இடமாகிய திருவண்ணாமலையினை வணங்கி; துங்க....மிசை ஏறி - பெரிய மலையின்மீதேறி; தொண்டர்.....திளைத்து - தொண்டர்கள் அன்புகூர்ந்து செய்யும் அடிமைத்திறத்திற்கு முன்னின்றருளும் அங்கண்மையுடைய அரசராகிய சிவபெருமானைத் தொழுது எழுந்து ஆனைந்தத்தில் மூழ்கி; தங்கு.....சாதித்தார் - இவ்வாறு வழிபட்டுத் திளைத்து - உலகில் தங்கும் பிறவியே இவ்வுலகை நீங்கித் தங்கும் வீட்டுலகத்துக்கு மேலானது என்ற பெருமையை அனுபூதியாகக் கொண்டார். (வி-ரை.) அண்ணாமலையைத் தொழுது - வலங்கொண்டு - அண்ணாமலையினைத் தூரத்தே தொழுதலும் அதனை வலங்கொள்ளுதலும் முறை. இவை இன்றும் பற் பல்லாயிர மக்களாற் செய்யப்படுதல் இதன் சிறப்புக் காட்டுவது. பிரம விட்டுணுக்களின் இகல் தீர்க்கும்பொருட்டுப் பேரழற் றூணேயாக நின்ற சிவபெருமான், பின்னர் அவர்கள் வேண்டுதலுக்கிரங்கி, மன்னுயிர்களின்மேல் வைத்த கருணையினால் மலையுருவாய் நின்றார் என்பதும், பின்னர் அதன்மேல் இலிங்க உருவாய் நின்றார் என்பதும் வரலாறுகளாதலின் இவ்வழிபாடுகள் இத்தலத்துச் சிறப்பாகச் செய்யப்படுவன. மலையைத் தொழுதல் பதிகத்துக் காண்க. துங்கவரை - துங்கம் - பெருமை. பெருமையாவது பெருந்தேவர்களாலும் முன் அறியப்படாமையும், பின்னர் இப்போது மக்களாலும் அறியப்பட்டு அருள் பெருகத் தந்து நிற்பதுமாம். "தொண்டர்தொழும்புக் கெதிர்நிற்கும்" என்ற கருத்துமிது. இதனையே "அங்கண்மை" என்று பின்னும் கூறினார். தொழும்பு - அடிமைத்திறம். எதிர்நிற்றலாவது - வெளிப்பட இருந்து அருள் புரிதல். தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் - நாயனாரது அடிமைத்திறத்தின் பொருட்டு எதிர் தோன்றியருளும் என்ற குறிப்புமாம். அங்கணரசு - சிவபெருமான். அங்கண்மையாவது - சிற்றுயிர்களின் மேல்வைத்த பொருள். "அங்கணரசை யடியோங்கட் காரமுதை" (திருவெம்பாவை - 17). என்று இத்தலத்தே அருளிச் செய்யப்பட்ட மணிவாசகப் பெருமானாரது திருவாசகச் சொல்லும் பொருளுமாகிய ஆட்சி போற்றப்பட்டது காண்க. மேற்சொல்லிய கருத்துரைகள் "செங்கணவன்பாற் றிசைமுகன்பாற் தேவர்கள்பா, லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதா" என்ற அத்திருப்பாட்டின் கருத்துக்களின் துணைகொண்டு எழுதப்பட்டன. மேல் வரும்பாட்டில் "அண்ணா மலைமேல்...கண்ணாரமுதை" என்ற சிறப்பும், திருவெம்பாவை, "அண்ணாமலையான்....கண்ணாரமுதமுமாய் (18) என்ற திருவாக்கினை நினைவூட்டுவதாம். இங்கு |