பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்529

 

பதிகக் குறிப்பு :- அட்டமூர்த்தி, வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார், பாணி நட்டங்களாடும் பரமனார், காலனாருயிர் கால்கொடு பாய்ந்தவர், அந்திவாயொளியார் என்றிவை முதலிய தன்மைகளாலறியப்படும் இறைவர் தொல்புகழாளொடும் வீற்றிருக்கும் அண்ணாமலை கைதொழுவார் வினை கொடும்; நல்ல வாயின அடையும்; நற்றவத்தொடு ஞானத்திருப்பர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு ;- (1) இலம் - இல்லம்; வீடுகள். - (2) தொல்புகழாள் - சிவனுடனே இருக்கும் தொன்மைப் புகழுடையவள்; உண்ணாமுலையம்மை. ‘தொன்மைக் கோலமே' (திருவா). அற்றம் - கேடு. - (3) உணங்கல் - சோறு - பலி. - (4) தலைவி கூற்றாகிய அகத்துறை. - (6) கரும்பினிடைக் கட்டி யொக்கும் - என்க. துணிவெட்டி வீணைகள் பாடும் - வீணைத்தந்திகளைத் தெறித்துப் பாடும் முறை. - (7) கோணிக் கொண்டை - முன்புறம் ஒருபாற் கோணலாக முடித்த கொண்டை; பாணி - கையினால் இடும் தாளத்துக்கிசைய. ஆணி - உரை ஆணி; பேணி - விடாது பற்றி என்ற பொருளில் வந்தது. - (8) விண்டு - தொடர்ச்சியற்று; பற்றுவிட்டு. - (10) மறையினானொடு மாலவன் காண்கிலா - தல சரிதம். பறையும் - நீங்கும்.

312

1578.

அண்ணா மலைமே லணிமலையை, யாரா வன்பி னடியவர்தங்
கண்ணா ரமுதை, விண்ணோரைக் காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்ச முண்டானைக், கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தார்.

(இ-ள்.) அண்ணாமலை அணிமலையை - அண்ணாமலையின்மேல் விளங்கும் அணிமலையினை; ஆரா...கண்ணரமுதை - அடங்காத அன்பினையுடைய அடியவர்கள் கண்ணால் நுகரும் அமுதுபோல்பவரை; விண்ணோரை...உண்டானை - தேவர்களைக் காக்கும் பொருட்டுப், பாற்கடலில் வந்து எழுந்த, யாவராலும் உண்ணத்தகாத, விடத்தை அமுதுசெய்த பெருமானை; கும்பிட்டு...பணி செய்தார் - கும்பிட்டு உருகுகின்ற சிந்தையோடும், பண்ணிறைந்த தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து துதிசெய்து திருப்பணிகள் செய்தனர்.

(வி-ரை.) அண்ணாமலைமேல் அணி மலையை - அண்ணா மலைமேல் அணிமலை என்று முரண் அணிச் சுவைபடக் கூறிய வகையால் "அணியணா மலையுளான்" என்ற தேவாரத்தை விரித்துரைத்தவாறு. அண்ணா - தேவர்களுக்கும் மனத்தாலும் அணுக முடியாத; அணி - அடியவர்க்கு அண்ணிய. "தொண்டர் தொழும்புக் கெதிர் நிற்கும்." மலைமேல் - மலை என்றதும் ஒரு சுவை. மலையை - உவமையாகுபெயர்.

அடியவர்...அமுதை - அடியவர் தமது கண்களால் முகந்து நிறைய உண்ணும் அமுது போல்பவரை என்றதும், அமுது என்றதும் "கண்ணா ரமுதமுமாய் நின்றான்" (திருவெம் - 18) என்ற திருவாசகத்தை விரித்தபடி. அமுதுபோல் பவரை அமுது என்ற துபசாரம். பார்வையால் விடம் தரும் நச்சுப்பிராணிகள் (திருஷ்டிவிடம் என்பர் வடவர்) போல, இது, பார்த்தால் சாவு போக்கும் அமுதம் என்பது கண்ணாரமுது என்றதன் குறிப்பு. அன்பு மிக்க அடிமைத்திறமுள்ளபோதே இவ்வாறு பயனாம் என்பார் ஆரா அன்பின் என்று உடம்பொடு புணர்த்தி ஓதினார்.

உண்ணா - பிறர் எவர்க்கும் உண்ணலாகாத.

உண்ணா நஞ்சமுண்டான் - சிவனது இறைமைத் தன்மை குறித்தது.

பண்ணார் பதிகத் தமிழ் - இத்தலத் திருநேரிசைத் திருப்பதிகம்.

பரவி - மற்றும் பலவகையாலும் தோத்திரம் செய்து. பணி - கைத் திருப்பணி.

மணிமலையை - என்பதும் பாடம்.

313