(வி-ரை.) ஒற்றியூர் வளநகரத்து ஒளி மணி வீதிகள் - அந்நாளில் திருவொற்றியூர் அரசர்களது தலை நகரங்களுள் ஒன்றாயும் பெரு நகரமாயும் இருந்தது என்பர் சரித ஆராய்ச்சியாளர். ஒளி மணி வீதிகள் விளக்கி - முன்னமே ஒளியுடனும் அழகுடனும் இருந்த அவற்றை, மேலும் புதுக்கி விளக்கம் செய்து என்பதை ஒளி - மணி - என்ற அடைகளாற் குறித்தார். வீதிகள் விளக்குதலும், கொடி - மாலை - பூகம் - கதலி நாட்டுதலும், குடம் தூபம் தீபம் வைத்தலும் பெரியோர்களை எதிர்கொள்ளச் செய்யும் மங்கல வகைகள். வழித்தொண்டர் - திருத்தொண்டின் வழியிலே வந்த பெரியோர். அவர்களே பெருந் திருத்தொண்டராகிய நாயனாராது சிறப்பை யறிந்தவர்களும் எதிர் கொள்ளத் தக்கவர்களுமாம். வழிவழியடியார்கள் என்றலுமாம். கொடி மாலை - கொடிகளாகிய மாலை - வரிசைகள் - என்றலுமாம். மற்று அசை. நிரை நாட்டி - நிரைகளை நாட்டுவித்து. நிரையாக - வரிசைபெற - நாட்டு வித்து என்றலுமாம். பொற்குடங்கள் - மங்கல நீர் நிறைந்த பொற்குடங்கள். கொடுபுக்கார் - வினைமுற்று முன்னாக வைத்தோதினார். அன்பர்களின் ஆர்வத்தையும, வரவேற்ற தொழில் முற்றிய விரைவையும் குறித்தற்கு. 333 1599. | திருநாவுக் கரசருமத் திருவொற்றி யூரமர்ந்த பொருநாகத் திண்சிலையார் கோபுரத்தை யிறைஞ்சிப்புக் கொருஞானத் தொண்டருட னுருகிவலங் கொண்டடியார் கருநாமந் தவிர்ப்பாரைக் கைதொழுது முன்வீழ்ந்தார்; |
334 1600. | எழுதாத மறையளித்த வெழுத்தறியும் பெருமானைத் தொழுதார்வ முறநிலத்திற் றோய்ந்தெழுந்தே யங்கமெலா முழுதாய பரவசத்தின் முகிழ்த்தமயிர்க கான்மூழ்க விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்; |
335 1601. | "வண்டோங்கு செங்கமல"மெனவெடுத்து மனமுருகப் பண்டோய்ந்த சொற்றிருத்தாண் டகம்பாடிப் பரவுவார் விண்டோய்ந்த புனற்கங்கை வேணியார் திருவுருவங் கண்டோங்கு களிசிறப்பக் கைதொழுது புறத்தணைந்தார்; |
336 1602. | விளங்குபெருந் திருமுன்றின் மேவுதிருப் பணிசெய்தே உளங்கொடிரு விருத்தங்க ளோங்குதிருக் குறுந்தொகைகள் களக்கொடிரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது வளங்கொடிருப் பதியதனிற் பலநாள்கள் வைகினார். |
337 1599.(இ-ள்.) வெளிப்படை. திருநாவுக்கரசு நாயனாரும் அந்தத் திருவொற்றியூரில் விரும்பி எழுந்தருளிய, பொருதற்குரிய மலையாகிய திண்ணியவில்லையுடைய பெருமானது திருக்கோபுரத்தினை வணங்கி உள்ளே புகுந்து ஒருமைப்பட்ட ஞானத்தையுடைய அத்திருத்தொண்டர்களுடன் மனமுருகி வலமாக வந்து, அடியவர்களுடைய பிறவி என்ற நாமத்தைத் தவிர்க்கும் பெருமானைக் கைதொழுது திருமுன்பு வீழ்ந்து வணங்கினாராய்; 334 |