இறைவனாணையால் மலைக்கீழ்ச் சிக்கிப் பலகாலம் அழுது இராவணனென்ற நாமமும், வழிபட்டு வரங்களும் பெற்றான். திருநாவுக்கரசு நாயனார் இங்குச் சென்று; ஆணையின்படி ஒரு வாவியில் முழுகித், திருவையாற்றில் வந்து எழுந்து, இறைவர் கயிலைக் காட்சியைக் காட்டக் கண்ட செய்தி மேலே கூறியவாறு அவர்தம் சரித்திரத்திற் காண்க. ஆளுடைய பிள்ளையார் திருக்காளத்தி தொழுது அங்கு நின்று இதனை நோக்கி நின்று பதிகம் பாடியருளினர். ஆளுடைய நம்பிகளும் சேரமான் பெருமாணாயனாரும் முறையே யானை - குதிரைகள் மீது இங்கு வந்து வழிபட்டுக் கணநாதர்களாய் எழுந்தருளியுள்ளார்கள். சேரமான் பெருமாள் நாயனார் ஞானவுலாவை இங்கு அரங்கேற்றினர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள எல்லாத் தலங்கட்கும் நாயகமாய் உள்ளது. திருமலைச் சிறப்புப் பார்க்க. "நிலவு மெண்ணில் தலங்களு நீடொளி, யிலகு தண்டளி ராக வெழுந்ததோர் உலக மென்னு மொளிமணி வல்லிமேன், மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை" (13) சுவாமி - பரமசிவன்; அம்மை - பார்வதியம்மை; தீர்த்தங்கள் - கங்கை முதலிய ஏழு பெருந் தீர்த்தங்கள்; பதிகம் - 7. இத்தலம் இமயமலைச் சிகரத்தில் உள்ளது. 1647. | ஆய வாறுமற் றவர்மனங் களிப்புறக் கயிலை மேய நாதர்தந் துணையொடும் வீற்றிருந் தருளித் தூய தொண்டனார் தொழுதெதிர் நிற்க, வக் கோலஞ் சேய தாக்கினார் திருவையா றமர்ந்தமை திகழ. |
382 (இ-ள்.) ஆயவாறு...வீற்றிருந்தருளி - அவ்வாறாகியபடி நாயனாரது மனம் மகிழும்படி கயிலாயத்தில் பொருந்திய இறைவர் தமது துணைவியாருடனே வீற்றிருந்தருளிச் செய்து; தூய...நிற்க - தூயவராகிய திருத்தொண்டனார் தொழுதுகொண்டு எதிரில் நின்றுகொண்டிருக்க; திரு ஐயாறு அமர்ந்தமை திகழ - திருவையாற்றில் எழுந்தருளி யிருக்கும் தன்மை வெளிப்பட விளங்கும் படியாக; அக்கோலம் சேயது ஆக்கினார் - முன்பு காட்டியருளிய அந்தக் கயிலாயத் திருக்கோலத்தைக் சேய்மையாம்படி மறைந்தருளினார். (வி-ரை.) ஆயவாறு - முன் 1645 - 1646-ல் விரித்தபடி. கயிலை மேய நாதர் - கயிலை என்பது ஈண்டு, இங்குக் காட்டிய இந்தக் கயிலையினையும், என்றும் உள்ள அந்தக் கயிலையினையும் குறித்து நின்றது. வடகயிலைக் காட்சியினை இங்குக் காணத் தந்ததாதலின்இவ்வாறு கூறினார். துணை - துணையவியாராகிய அம்மையார். துணைவி என்னாது துணை யெனப் பொதுப்படக் கூறியவதனால் "சத்தியும் சிவமுமாம் சரிதைப் பன்மை யோனிகள் யாவையும்", "புடையமர்ந்த தந் துணையொடும் பொலி" வுறும்படி காணச்செய்து நின்ற அத்தன்மையும் குறித்தது. தூய தொண்டனார் - "தொண்டனார்க்கு" (1645) என்றவிடத் துரைத்தவை பார்க்க. தொழுது - தொழுதபடியே; எதிர்நிற்க - நிற்கும்போது, நின்று கொண்டிருப்பவும். எதிர் நிற்கச் சேயதாக்கினார் - என்று கூட்டுக. கண்டு நிற்பதும் காணாது நிற்பதும் உயிர்களின் செயலில் அடங்காது காட்டியும் மறைத்தும் நிற்கும் இறைவரது செயலினால் ஆவது என்று குறிக்க நிற்க - என்றார். "காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்ற நாயனார் திருவாக்கின் உள்ளுறையும், "காண் எனப் பணித்தார்" (1634) என்றதும் இங்குக் கருதத்தக்கன. |