பக்கம் எண் :


650திருத்தொண்டர் புராணம்

 

1654.

அங்குறை யுந்தன்மை வேண்டி "நாமடி போற்றுவ" தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார் தம்பிரா னாரருள் பெற்றுத்
திங்களு ஞாயிறுந் தோயுந் திருமட மங்கொன்று செய்தார்.

389

1652. (இ-ள்.) சேர்ந்து......புக்கு - அத்தலத்தைச் சேர்ந்து விருப்பத்தோடும் அதனுட் புகுந்து; திருநட மாளிகை......இறைஞ்சி - இறைவர் அருட்கூத்தியற்றி வெளிப்பட எழுந்தருளிய திருக்கோயிலினைச் சார்ந்து வலம் வந்து வணங்கி; தம் பெருமான்.....தாழ்ந்து - தமது பெருமானது திருமுன்னர்ப் பொருந்திய அன்பினோடும் தாழ்ந்து; நிறைந்து.......ஆனார் - உள் நிறைந்து நீங்காத அன்பு மேன்மேற் பெருக அதனால் நிறைந்து வெளிப்படும் கண்ணீராகிய மழை பொழிய தம் வசமிழந்த நிலை பெறுந் தன்மையை யடைந்தனராகி;

387

1653. (இ-ள்.) "திருப்பூந்துருத்தி........கண்டேன்" என்று - திருப்பூந்துருத்தியில் விரும்பி எழுந்தருளிய சிவந்த சடையுடையவரை, இடபமாகிய பெருமலையின்மேல் எழுந்தருளி வரும் பெருமானைப், பொய்யிலியைக் கண்டேன்" என்று; விருப்புறு தாண்டகத்தோடு - விருப்பம் பொருந்தும் திருத்தாண்டகத்துடனே; மேவிய காதல் விளைப்ப - பொருந்திய அன்பு மேன்மேல் விளையச் செய்ய; "இருப்போம்.......பாடி" - "சேவடிக்கீழ் நாம் இருப்பதே" என்ற மகுடமும் கருத்தும் கொண்டு போற்றும் திருக்குறுந்தொகைப் பதிகத்தைப் பாடி.

388

1654. (இ-ள்.) அங்கு.......வேண்டி - அத்தலத்தில் சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்னும் நிலைமையைப் பெறும் உட்குறிப்புடனே, நாமடி போற்றுவதென்று - நாமடி போற்றுவதே என்ற கருத்துடன்; பொங்கு......புரிந்து - பொங்கும் தமிழ்ச் சொற்களாலியன்ற திருவிருத்தம் என்கின்ற தோத்திரப் பாடல் புரிந்து; தங்கி.......பெற்று - அத்தலத்தில் தங்கித் திருத்தொண்டு செய்வாராகித், தமது பெருமானது நிறைந்த திருவருளினைப்பெற்று; திங்களும்........செய்தார் - சந்திரனும் சூரியனும் தோயும் தன்மையுடையதொரு திருமடத்தினை அங்குச் செய்தருளினார்.

389

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டுரைக்க நின்றன.

1652. (வி-ரை.) திருநடமாளிகை - அருட்கூத்து வெளிப்படக் கண்டருளுதற்கிடமாகிய திருக்கோயில். நடத்திருமாளிகை - என்க. மாளிகை - கோயில்.

திருமுன்பு - சந்நிதியில். பரிவு - அன்பினால் உளதாகும் மனநெகிழ்ச்சி.

அன்பு பொங்குதலினால் ஆர்ந்த என்பது கண்ணீர் மழைபொழிவதற்குக் காரணங் கூறியவாறு. ஆர்தல் - நிறைதல். பொங்க - பொங்குதலினால். காரணப் பொருட்டாய்வந்த வினையெச்சம்.

தூங்க - இடையறாது பெய்ய. அயர்வுறும் - தன்மை மறக்கும்; தம் வசமிழக்கும். அயர்தல் - ஓய்தல் என்றலுமாம். ஓய்தலாவது பொறிபுலன் வழிச் செல்லும் மனம் அதினின்றும் ஓய்வுறுதல்.

ஆனார் - ஆனாராய் - முற்றெச்சம். ஆக்கச் சொல் சிவானந்தானுபவமாகிய ஆக்கம் குறித்தது.

387

1653. (வி-ரை.) "திருப்பூந்துருத்தி....கண்டேன்" என்று - இது திருந்தாண்டகப் பதிகக்கருத்து. பதிகக் குறிப்புப் பார்க்க.

பொய்யிலி - திருப்பூந்துருத்தியின் இறைவர் பெயர்.

"இருப்போம் திருவடிக்கீழ் நாம்" - திருக்குறுந்தொகைப் பதிகக் கருத்து "சேவடிக்கீழ் நாமிருப்பதே" என்பது பதிகத்தின் மகுடம். பதிகக் குறிப்புப் பார்க்க.