பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்675

 

(இ-ள்.) வெளிப்படை. சீகாழியில் அவதரித்த தமிழ் விரகராகிய ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளி வர, அதனை உலகம் போற்றும் பெரிய கீர்த்தியினை யுடைய திருநாவுக்கரசர் தாம் கேட்டு மனமகிழ்ச்சி யடைந்து, கண்களால் பெருகுகின்ற களிப்புப் பொருந்த நேரே கண்டு கும்பிட வேண்டுமென்னும் காதலினாலே, மனத்திற் பெருகுகின்ற விருப்பம் பொருந்த எழுந்தருளி எதிரே சென்றனர்.

(வி-ரை.) மண் பரவும் பெருங்கீர்த்தி - முன்னர் நிகழ்ந்தவற்றோடு, இப்போது செய்தருள உள்ள அருள் நிகழ்ச்சியினால் உலகம் பரவும் பெருங் கீர்த்தியாயிற்று என்பது.

கண் பெருகும்........காதலினால் - மனத்தினுள் பெற்ற மகிழ்ச்சியுடன் அமையாது கண்களால் நேரே கண்டு களிப்படைய வேண்டுமென்னும் ஆசை மேலோங்கியதனால். இவ்வடி முற்றுமோனை.

எண் - மனம். மகிழ்ச்சி - காதல் - விருப்பு - என்பன ஒரு பொருளவாயினும் ஒன்றன்மே லொன்றாக அதிகரிக்கும் ஆர்வங்குறித்தன.

எதிர் சென்றார் - வரவு எதிர்கொண்டு அழைப்பதற்காகவன்றிக், கண்குளிரக் கண்டு கும்பிடும் ஆசையே மிக்குச் சென்றனர் என்பது பின்னிகழ்ச்சியால் விளங்கும். "நந்தமையா ளுடையவரை நாமெதிர்சென் றிறைஞ்சுவது, முந்தை வினைப்பயன் என்று" (திருஞான - புரா - 931) என்பது காண்க.

விருப்பெய்தி - என்பதும் பாடம்.

393

1659.

 காழியர்கோன் வருமெல்லை கலந்தெய்திக் காதலித்தார்
 சூழுமிடைந் திடுநெருக்கிற் காணாமே தொழுதருளி
"வாழியவர் தமைத்தாங்கு மணிமுத்தின் சிவிகையினைத்
 தாழுமுட லிதுகொண்டு தாங்குவன்யா"னெனத்தரித்தார்,


1660.

வந்தொருவ ரறியாமே மறைந்தவடி வொடும்புகலி
யந்தணனா ரேறியெழுந் தருளிவரு மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவா ருடன்றாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார் தமையாருந் தெளிந்திலரால்.

395

1659. (இ-ள்.) காழியர்கோன் வரும் எல்லை - சீகாழித் தலைவர் வருகின்ற அவ்விடத்து; கலந்து எய்தி - திருக்கூட்டத்தினுள்ளே கூடிச் சேர்ந்து; காதலித்தார் - காதல் உடையவராகி; சூழும் மிடைந்திடு நெருக்கில் காணாமே தொழுதருளி - சூழ்ந்து நெருங்கியுள்ள கூட்டத்தின் நெருக்கத்தினுள்ளே பிள்ளையார், தம்மைக் காணாத வகையினால் அவரைத் தொழுது கொண்டு; "வாழியவர்.......தாங்குவன்யான்" என - "வாழ்வு தரவந்த பிள்ளையாரைத் தாங்கும் அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கி வருபவர்களோடு தாழ்ந்த இவ்வுடம்பைக்கொண்டுயானும் சுமப்பேன்" என்று மனத்துட் கொண்டவராய்;

394

1660. (இ-ள்.) வெளிப்படை. வந்து வேறு ஒருவரும் தம்மை அறிந்து கொள்ளாதபடி மறைவாகிய திருவடிவத்தோடும், சீகாழி அந்தணர் பெருமானார் ஏறி எழுந்தருளி வருகின்ற அழகிய மணிச்சிவிகையினைத் தாங்குபவர்களோடு தாமும் ஒருவராகத் தாங்கித், தமது மனம் மிக மகிழ்ச்சி பொருந்த வருவாராகிய நாயனாரை ஒருவரும் அறிந்து கொண்டாரிலர்.

395

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டுரைக்க நின்றன.