பக்கம் எண் :


680திருத்தொண்டர் புராணம்

 

தூயபுகழ் வாகீசர் - தூய புகழினராதலின் உவந்தனர் என்பது.
வழுதியுடல் - சொல்லுவது - என்பனவும் பாடங்கள்.

399

1665.

பண்புடைய பாண்டிமா தேவியார் தம்பரிவும்
நண்புடைய குலச்சிறையார் பெருமையுஞா னத்தலைவர்
எண்பெருக வுரைத்தருள வெல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்.

400

(இ-ள்.) பண்புடைய..........பரிவும் - கற்பின் பண்பும், சிவன்பாலன்பின் பண்பும் உடைய மங்கையர்க்கரசி யம்மையாருடைய அன்பின் திறத்தையும்; நண்புடைய.........பெருமையும் - அடியார்களிடம் அன்பினையுடைய குலச்சிறை நாயனாரது பெருமையினையும்; ஞானத்தலைவர் - ஞானத்தலைவராகிய பிள்ளையார்; எண் பெருக உரைத்தருள - விருப்பம் மிகும்படி சொல்லியருள; எல்லையில்......மனங்கொண்டார் - அளவற்ற சிறப்புடைய திருநாவுக்கரசர் உலகில் விளக்கம் பொருந்திய தமிழ்நாடு என்று சொல்லப்படும் பாண்டிய நாட்டைச் சென்று காண்பதற்கு விருப்பமுடையவராயினர்.

(வி-ரை.) பண்பு - உலக மக்கட்பண்பும், தெய்வப் பண்பும் இவை கற்பு நிலையும் அன்பின்றிறமுமாம்.

பரிவு - சைவத்தினைவிட்டுச் சமணத்திற்றாழ்ந்த பாண்டி நாட்டின் மேலும், தமது நாயகன் மேலும் வைத்த இரக்கமுடைய அன்பு. "யானுமென் பதியும் செய்த தவமென்கொல்" (திருஞான - புரா - 672) என்றதனாலும், "மங்கையர்க்கரசி" என்று தொடங்கும் திருவாலவாய்த் திருப்பதிகத்தில் பிள்ளையார் அருளியவாற்றாலும் இதன்றிறம் உணரப்படும்.

நண்பு - அடியார்களிடம் வைத்த அன்பின் அழுத்தம். பெருமை - இதுவும் பிள்ளையாரது அத்திருப்பதிகத்தாலறியப்படும்.

எண் பெருக உரைத்தருள - எண் பெருகுதலாவது விருப்பமிகுதல். விருப்பம் பெருகுதலால் என்றும், விருப்பம் பெருகும்படி என்றும் இரு வழியும்கொண்டு உரைக்க நின்றது. நினைவுப் பெருக்கால் விரித்துக்கூற என்று கூறுவாருமுண்டு. சைவம் வளர அருளிய ஆலவாயுடையார் அருளினைக்கேட்டு உவந்த நாயனார், பாண்டிமாதேவியார் - குலச்சிறையார் எனும் இவர்களுடைய அன்பினைக் கேட்டவுடன் பாண்டிநாடு சென்று அவர்களைக் காண மனங்கொள்ளுமாறு இருந்தது ஞானத்தலைவரது உரை என்க. "உமைக்காண வந்தனம்" - (திருஞான - புரா - 673) என்ற கருத்தும் காண்க.

தமிழ் நாடு - ஏனைத் தொண்டை நாடு, சோழநாடு, சேரநாடு முதலியனவும் தமிழ்நாடுகளாயிருப்பவும் பாண்டி நாடே தமிழ் நாடு என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படும். இறைவர் சங்கமிருந்து, தலைவராகித், தமிழாராய்ந்து இலக்கணமும் செய்த சிறப்புப்பற்றி இவ்வாறு வழங்கப்படுமென்க. மூர்த்திநாயனார் புராணத்துள் உரைத்தனவும், "திருந்திய நூற் சங்கத்துள், அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்" (1668), "சாலு மேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் திருமுன்" (திருஞான - புரா - 667) "சங்கப்புலவர் திருமுகம்" (கழறிற் - புரா - 29), முதலியவையும் காண்க.

மண்குலவு தமிழ் என்றும், மண்குலவு நாடு என்றும் கூட்டி உரைக்க நின்றது. மண்குலவு தமிழ் - உலகை விளங்க வைப்பதும், பயில்வோரைப் பிறவிப் பயன்பெற