பக்கம் எண் :


682திருத்தொண்டர் புராணம்

 

டருளிப் பிள்ளையார் சென்றமை "நாவினுக்கு வேந்தர் திருவுள்ள மேவவிடை கொண்டருளி" (திருஞான - புரா - 948) என்று அவர்தம் புராணத்துக்கூறும் தகுதியும், நாயனாரைச் சந்தித்துப்பிரிவது இதுவே இறுதி முறையாதலின் "திருவுள்ள மேவவிடை கொண்டருளி" என்று உறுதிக் குறிப்புப்படக் கூறும் தகைமையும் காண்க.

திருமகனார் - பால் உண்ட உரிமையால் மகனார் என்றதுபசாரம். "அப்பர்" பணிக்க, "மகனா"ராதலின் அதன்வழி ஒழுகும் கடப்பாடுடைமைபற்றி இசைந்தனர் என்பது குறிப்பு. "செப்புதலும், புல்குநூன் மார்பரும்போய்ப் போற்ற மனம் புரிந்தார்" (திருஞான - புரா - 945). "மகனார்" என்ற இத்துணை கொண்டு பிள்ளையாரை முருகப்பெருமான் அவதாரம் என்பாருமுண்டு. அவர் கூற்றுப் பொருந்தாமைப் பின்னர் பிள்ளையாரது புராணத்துள் விளக்கப்படும். "அடுத்த தாதை இனியுனக்கு நாம்" (54), "அரனார் மகனா ராயினார்" (59) என்ற சண்டீசர் புராணத் திருவாக்குக்களும் இங்கு வைத்துக் கருதத்தக்கன.

அரனமரும் - அரனுரையும் - பாடுவதற்கு - என்பனவும் பாடங்கள்.

401

1667.

ஆண்டவர சங்கணர்சீ ரருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும் பான்மையராய்த் தென்றிசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர் பணிந்தேத்திக் கதிர்மதியந்
தீண்டுகொடி மதின்மதுரைத் திருவால வாய்சேர்ந்தார்.

402

(இ-ள்.) அங்கணர் சீர் அருள் பெற்று - சிவபெருமானுடைய சிறந்த அருளைப் பெற்றுக்கொண்டு; ஆண்ட அரசு - ஆளுடைய அரசுகள்; அப்பதி நின்றும்.......பான்மையராய் - அந்தத் திருப்பூந்துருத்தித் தலத்தினின்றும் பாண்டி நாட்டில் எழுந்தருளும் திருவுள்ளமுடையவராகி; தென்திசை..........பணிந்தேத்தி - தெற்குத் திசை நோக்கிச் சென்று, காணும் தகைமைத்தாகிய திருப்புத்தூரினைப் பணிந்து துதித்து; கதிர்மதியம்......சேர்ந்தார் - சந்திரனுடைய கதிர்கள் தவழ்தற்கிடமாகிக் கொடிகள் கட்டி விளங்கும் மதிலையுடைய மதுரைத் திருவாலவாயினை அடைந்தனர்.

(வி-ரை.) அங்கணர் சீர் அருள் பெற்று - பிள்ளையார் முன்பே நாயனாரிடம் விடைகொண்டு புறப்பட்டமையால், பின் தங்கிய நாயனார் இறைவரிடம் அருள் விடை பெற்றுப் புறப்பட்டனர் என்பதும், "அங்குறையும் தன்மை வேண்டித் தங்கித் திருத்தொண்டு செய்வார் - அருள் பெற்றுத் - திருமடம் செய்தா" ராதலின் அங்கு நின்றும் அகலும்போதும் அவ்வாறே அருள்பெற்றுப் புறப்பட்டனர் என்பதும் குறிப்பு.

பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் - நாட்டின்கண் என ஏழனுருபு தொக்கது.

பான்மையராய் - மிக்க விருப்பமுடையவராகி என்ற குறிப்புப்பட நின்றது. மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் அன்பினை "எண் பெருக உரைத்தருளி" (1665) யமையாலும், முன்பு பிள்ளையாருடன் தாமும் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளப் புறப்பட்டபோது பிள்ளையாரால் தவிர்க்கப்பட்டுத் தங்கி விட்டமையாலும், தமது ஆன்மார்த்த நாயகாராகிய திருவாலவாயுடையாரைச் சென்று காணும் ஆவல் மிகுதிப்பட்டமையாலும், "சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயும் செல்வமே" (திருவா) என்றபடி மிக்க விருப்பத்துடன் போந்தருளினர் என்பதாம். "போமா துணிந்து நீரங்குப் போதப் போதா" (1554) என்றவிடத்துரைத்தவையும் பார்க்க.

தென்றிசை போய் - அங்கு நின்றும் தெற்கில் உள்ள பாண்டி நாட்டை நோக்கிச் சென்று. தென் மேற்காகச் செல்ல வேண்டியிருத்தலின் தெற்கென்னாது தென்திசை என்றார்.