பிறவும் பார்க்க. ஆலவாய்ப் பெருமானைத் தமிழ்ச்சங்கப் புலவராகவே கொண்டு ஆசிரியர் உணர்த்தும் முறைமையினைக் கருதுக. திருந்திய நூற் சங்கம் - திருந்திய - இறைவர் புலவராக எழுந்தருளியிருந்து உணர்த்தித் திருத்தியருளியமையால் திருந்திய என்பது குறிப்பு. இவற்றால் உலகம் திருந்திய என்றலுமாம். நூல் - இங்கு நூற்புலவரைக் குறித்தது. ஆகுபெயர். அன்று - தலைச்சங்க காலத்து. நக்கீரர் சரிதமும் காண்க. முன் இறைஞ்சி - முன் - திருக்கோயிலின் முன்பு. மால்விடையான் - மால் - விட்டுணுவாகிய என்றலுமாம். மகிழ்வொடு - ஒடு - உருபு மயக்கம். திளைத்தல் - ஆனந்த அனுபவத்தில் மூழ்குதல். 403 1669. | எய்திய பேரானந்த வின்பத்தி னிடையழுந்தி மொய்திகழுஞ் சடையானை "முளைத்தானை" யென்றெடுத்துச் செய்தவத்தோர் தாண்டகச்செந் தமிழ்பாடிப் புறத்தணைவார் கைதொழுது பணிந்தேத்தித் திருவுள்ளங் களிசிறந்தார். |
404 (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு தாம் பொருந்திய ஆனந்த அனுபவமாகிய இன்பத்தினுள்ளே மூழ்கிக், கற்றையாக மொய்த்து விளங்கும் சடையினை உடைய பெருமானை, "முளைத்தானை" என்று தொடங்கும் திருத்தாண்டகச் செந்தமிழ்த் திருப்பதிகத்தினாற் றுதித்துப் புறத்தில் அணைவாராகிச், செய்யும் தவத்தினையுடையோராகிய நாயனார், கைகளால் தொழுது வணங்கித் துதித்துத் திருவுள்ளத்தில் பெரு மகிழ்ச்சியிற் சிறந்தனர். (விரை.) பேரானந்த இன்பத்தினிடை அழுந்தலாவது - சிவானந்தமாகிய பேரின்ப வெள்ளத்துள் அதுவாகி யறிந்து நுகர்ந்து நிற்றல். இதனைத் திளைத்தார் என முன்பாட்டிற் கூறினார். மொய்திகழும் சடை - கற்றையாகக்கூடிய சடை. "மாலையின் றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற் - அந்). மொய் - அரும்பு என்று கொண்டு, கொன்றை - தும்பை - எருக்கு - ஆத்தி முதலிய பூக்கள் விளங்கும் என்றலுமாம். முளைத்தானை - இது திருத்தாண்டகப் பதிகத்தின் தொடக்கம். பதிகம் பார்க்க. எடுத்தல் - தொடங்குதல். செய்தவத்தோர் - தவம் - சிவபூசை. "தவமுயல்வோர் மலர் பறிப்ப" (பிள்ளை - தேவா - கழுமலம் - மேகரா.) திருவாலவாயுடையாரை நாயனார் தினமும் ஆன்மார்த்தமாகப் பூசித்த குறிப்புப் போலும். திளைத்தார் - என முன் பாட்டிலும், ஆனந்த இன்பத்தினிடை மூழ்கித் - திருவுள்ளங் களிசிறந்தார் - என இப்பாட்டிலும் விதந்தோதிய மனநிலைகள் இக்குறிப்புப்பட நின்றன. ஆனந்தம் - இன்பம் - களி - என்பன ஒரு பொருள் மேனின்று மிகுதிப் பொருள் தந்தன. "சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே" என்ற தேவார மகுடமும் இக்குறிப்பு. களி சிறத்தல் - பெருமகிழ்ச்சி கூர்தல்; மிகுதல். அழுந்தி - களி சிறந்தார் என்பனவும் இன்பானுபவ முதிர்ச்சி குறித்தன. 404 திருவாலவாய் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேன் முகிழ்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கண் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் |
|