பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்705

 

மார்க்கண்டர்; நெடுமூக்கு - துதிக்கை; - (9) இப்பாட்டுத் தக்க யாக அழிவு பற்றி இறைவரது வீரங்களை எடுத்துக் கூறுவது. எச்சன் - யாகதேவதை - யாகஞ் செய்வோன். பகன் - 12 சூரியர்களுள் ஒருவன்; இரவி - அவர்களுள் மற்றுமொருவனாகிய பூஷன். "பகநேத்ரபிதே நம: பூஷதந்தபிதே நம."சிவாஷ் டோத்திர சதம். வியாத்திரன் - தொழினடத்துவோன். மெச்சன் - விரும்பி வைக்கப் பட்டவனாகிய; அங்கி - தீக்கடவுள். அருளும் - அழித்ததனுடன் அருளும் என உம்மை இறந்தது தழுவியது. அருளாவது யாகத்தை அழித்தபின் அவ்வவர்க்கும் செய்த அருளிப்பாடுகள்.-(10) ஒருக்கி - தம்பால் ஒருமுகப்படுத்தி; - (11) அராவும் மதியமும்; குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார் - வாசகன் - மாணிக்கவாசகர். நந்தி பெருமான் பின்னர் மணிவாசகராக அவதரித்தார் என்ற வரலாறு குறித்தது. 1திருந்த - முன்னர் கிழக்கு நோக்கியிருந்தவர் சோழனும் உலகமும் கண்டு திருந்தும் பொருட்டு மேற்கு நோக்கி என்பது. சிராமலைத் தலவரலாற்றுக் குறிப்பு. தென்றல் நெடுந்தேரோன் - மன்மதன். பொன்றக் கொண்டார் - முன்னர்ப் பொன்றவும் பின்னர் உயிர் பெறவும் வைத்தார். "முடிநெரி தர, விருவகை விரனிறுவியவர்" (வியாழக்குறி - இடைமருது - (8). பேர் இயம்பக் கொண்டார்; அதனோடு, அதன் பொருட்டுத் தமக்குக் கிடைத்த பிறவியாகிய இடரும் சூலை நோயும் என்ற நாயனாரது முன் வரலாற்றுக் குறிப்பும்பட நின்றது. கூற்றாயினவாறு என்ற பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க. (பக் - 87).

பொது - க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்

IVதிருச்சிற்றம்பலம்

தாண்டகம்

தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவ முருகன் பூண்டி முளையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத்தியுங் கயிலாய நாதனையே காண லாமே.

1

ஆரூர்மூ லட்டான மானைக் காவு மாக்கூரிற் றான்றோன்றி மாட மாவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங் கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங் கயிலாய நாதனையே காண லாமே.

2

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவல மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சிய மருகல் வன்னி
நிலமலிநெய்த்தானத்தோ டெத்தானத்து நிலவுபெருங்கோயில்பல கண்டாற்றொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலாற் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- சிவபெருமான் வெளிப்பட எழுந்தருளியுள்ள தலங்களை வாழ்த்தியது. தலங்களை வாழ்த்துதலாவது அத்தலங்களின் கோயில்களையே சிவனெனக்கண்டு வணங்குதல். "ஆலயந் தானு மரனெத் தொழுமே" (சிவஞான போதம் - 12 - சூத்). "எத்தானத்தும் நிலவுபல கோயில் கண்டால் - கயிலாய நாதனையே காணலாமே" என்று பதிகத்தை முடித்துக் காட்டியருளியது இக்கருத்து. "மன்றுறைவார் வாழ்பதிகள் வழுத்து திருத்தாண்டகமும்" என்று இப்பதிகக் கருத்தினை ஆசிரியர் காட்டியருளியதும் காண்க. "ஆலயந் தொழு" ஒளவை).

 1.

இதனை மகாமகோபாத்யாயர் சாமிநாதையர் திருப்பெருந்துறைப் புராண முகவுரையில் எடுத்துக் குறித்திருக்கின்றனர்.