பக்கம் எண் :


736திருத்தொண்டர் புராணம்

 

1690.

இந்நிலைமை யுலகேழு மெய்தவறிந் தியல்பேத்த
மன்னியவன் புறுபத்தி வடிவான வாகீசர்
மின்னிலவுஞ் சடையார்த மெய்ப்பொருடா னெய்தவரு
மந்நிலைமை யணித்தாகச் சிலநாளங் கமர்ந்திருந்தார்.

425

(இ-ள்.) இந்நிலைமை...ஏத்த - இந்த நிலைமையினை ஏழுலகங்களும் பொருந்த அறிந்து இவ்வியல்பினைத் துதிக்க; மன்னிய...வாகீசர் - நிலைபெற்ற அன்பு பொருந்திய பததியினது வடிமேயாகி நின்ற திருநாவுக்கரசு நாயனார்; மின் நிலவும்...அணித்தாக - ஒளியுடைய சடையினையுடையோராகிய சிவபெருமானது மெய்ப்பொருளினையே பொருந்த வருகின்ற அந்நிலைமை அணிமையுடையதாக; சில நாள் அங்கு அமர்ந்திருந்தார் - சில நாள்கள் அத்திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளி யிருந்தனர்.

(வி-ரை.) இந்நிலைமை - கல்லும் பொன்னும் வேறுபாடில்லாமை கண்டும், அரம்பையர்களை மாயப் பவத் தொடக்கா மிருவினைகளின் உருவாமாகக் கண்டும், தமது சித்த நிலை திரியாது செய்பணியின் றலைநின்ற இந்த நிலைமை. இகரச் சுட்டு அணிமையில் நிகழ்ந்த இவ்விரு செயல்களையும் குறித்தது.

உலகு ஏழும் - எய்த அறிந்து - ஏழுலகத்தவர்களும் இந்நிலைமையின் பெருமையை அறிந்து அதனைத் தாமும் குறிக்கோளாகக் கொண்டு அடைய. எய்த - எய்தும் பொருட்டு.

இயல்பு ஏத்த - அதன் இயல்பினைத் துதிக்க. தத்தம் இயல்பினாற் றுதிக்க என்றலுமாம்.

மன்னிய அன்பு உறு பக்தி வடிவான - இடையறாது நிலைபெற்ற அன்பினால் விளைந்த பத்தி. "பத்தி முதல் அன்பு நீரிற் பணைத்தோங்கி" (வெள் - சருக் - 2) பத்தி வடிவு ஆன - பத்தி என்ற குணமே ஒரு வடிவம் எடுத்தாற்போன்ற. "இந்தக் கருணை கண்டால்" (1406) என்ற நிலையின்மேல், அது முதிர்ந்து பத்தி உருவாயினது போல. இங்குப் பத்தி என்பது திருத்தொண்டு என்றதன் முழுமை நிலையின் உருவம் குறித்தது.

மெய்ப் பொருள்தான் - சிவத்துவ விளைவாகிய சிவபோகம். திருவாவருள் நிறைவில் ஒடுங்கி நிற்கும் மீளாத பேரின்ப நிலை. தான் - தன்னையே என்று உறுதிப் பொருள் தந்து நின்றது. மெய்யருள்தான் என்ற பாடம் சிறப்பின்று.

எய்தவரும் அந்நிலைமை - அடையும் அந்தத் தன்மையாவது சிவனடிக்கீழ் அமர்ந்து மீளா நிலையை அடையும் பருவம். "பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீது" (திருஞான - புரா - 1245).

அணித்தாக - நெருங்க; பருவம் அடையும் காலம் நெருங்கியதாக அதுவரை.

அமர்ந்து - விரும்பி.

425

1691.

 மன்னியவந் தக்கரண மருவுதலைப் பாட்டினாற்
"தன்னுடைய சரணான தமியேனைப் புகலூரன்
 என்னையினிச் சேவடிக்கீ ழிருத்திடு"மென் றெழுகின்ற
 முன்னுணர்வின் முயற்சியினாற் றிருவிருத்தம் பலமொழிந்தார்.

426

(இ-ள்.) மன்னிய...தலைப் பாட்டினால் - சிவபெருமானுடைய திருவடிகளில் நிலைபெற்ற அறிவு இச்சை செயல்கள் பொருந்திய சேர்வினாலே; "தன்னுடைய இருத்திடும்" என்று - தன்னைப் புகலாக அடைந்த தமியேனாகி என்னைப் புகலூர் இறைவர் இனித் தமது சேவடியின்கீழே இருக்கச்செய்வார்" என்ற கருத்துடன்;