யோனிகள் எல்லாம் உள்நிறைந்த பெருமகிழ்ச்சி தான் நிறைந்த(ன) என்றது, நீர் நிறைந்த வாவிக்குள் பல உயிர்களும் வாழ்வனவாக, அந்நீர் நிலையினுள் ஒருமுட்டை வெடிக்குமாயின், அதனால் நீர் அசைவுபெற, அந்த அசைவு கலந்து, அலை உருவமாக நீர்பரப்பு முழுமையும் உழக்க, அதனால் அங்குத் தங்கும் ஏனை உயிர்கள் யாவும் தாக்கப்படுதல் போல, நாயனார் சிவ நிறைவுக்குள் எய்த, அதனால் அந்நிறைவினுட் கிடந்த எல்லா யோனிகளும் தாக்கப்பட்டு ஆனந்த மடைந்தன என்பதாம். சித்திரையில் சதயமாம் திருநாள் - நாயனார் இறைவரது திருவடியடைந்த மாதமும் நாளும் குறித்தார் - இவ்வாறு நாட்குறித்து நாயனாரை யன்றி வேறொரு வருக்கு ஆசிரியர் கூறாமை காண்க. இதுபோன்று, "புண்ணியப் பதினா றாண்டு பேர் பெறும் புகலி வேந்தர்" என்று வயது குறித்து ஆளுடைய பிள்ளையார்க்குக் கூறிய சிறப்பும் கருதுக. 428 1694. | அடியனே னாதரவா லாண்டவர சின்சரிதப் படியையா னறிந்தபடி பகர்ந்தேனப் பரமுனிவன் கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் முடிவில்புகழ்த் திருத்தொண்டின்முயற்சியினைமொழிகின்றேன். |
(இ-ள்.) ஆண்ட அரசின் சரிதப் படியை - ஆண்ட அரசுகளுடைய சரித வரலாற்றினை; அப்பரமுனிவன்...கைதொழுது - அந்த பரமுனிவருடைய மணமுடைய மலர்போன்ற மெல்லிய சிவந்த திருவடிகளைத் கையாரத் தொழுது; ஆதரவால் - அத்துணையினால்; அடியனேன் - அவரது அடியேன்; அறிந்தபடி பகர்ந்தேன் - அறிந்த வகையி னளவுட்படச் சொன்னேன்; அப்பர முனிவன்....கைதொழுது - அந்தப் பரமுனிவருடைய மணமுடைய மலர்போன்ற மெல்லிய சிவந்த திருவடிகளைக் கையாரத் தொழுது; அடியனேன் ஆதரவால் - அடியேன் அத்துணையானே; குலச்சிறையார்....மொழிகின்றேன் - குலச்சிறையாரது முடிவில்லாத புகழுடைய திருத்தொண்டின் முயற்சித் திறத்தினைச் சொல்லப் புகுகின்றேன். (வி-ரை.) ஆதரவு - துணை - பற்றுக்கோடு. அப்பர முனிவன் கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது - என்றதை முன்னர்ப் பகர்ந்தேன் என்றதுடனும், பின்னர் மொழிகின்றேன் என்றதுடனும் இருவழியும் கூட்டியுரைக்க இடைநிலைத் தீபமாக நடுவில் வைத்தார். அவ்வாறே அடியனேன் ஆதரவால் என்றதனை அந்த இரண்டு வினைமுற்றுக்களுடனும் கூட்டி ஆதரவால் பகர்ந்தேன் - ஆதரவால் மொழிகின்றேன் என்றுரைக்க முதனிலைத் தீபமாக முதலில் வைத்தோதினார். ஆளுறுடைய பிள்ளையார் புராண முடிவில் இவ்வாறே "அருந்தமிழா கரர்சரிதை யடியேனுக் கவர்பாதந், தரும் பரிசா லுரைசெய்தேன்" என்று கூறுவதும் இங்கு வைத்துக் கருதத் தக்கது. சரிதப்படி - சரிதம் போந்தபடி. படி - வகை. பரமுனிவன் - பரம் - அப்பாற்பட்டது - கடந்தது; நமது நினைவுக்கும் சொல்லுக்கும் எட்டாது அப்பாற்பட்டவர். முன்னரும் முனியாகி யிருந்தவர் என்ற முற்சரிதக் குறிப்புமாம். "முன்னமே முனியாகி" (1313). இக்குறிப்பே கொண்டு "வருஞானத் தவமுனிவர் வாகீசர்" (1266) என்று தொடங்கிக் காட்டிய அக் கருத்தினையே பற்றி முடித்துக் காட்டியவாறும் கண்டுகொள்க. பரனுக் குகந்த முனிவன் என்றும், "இருநிலனாய்" என்பது முதலாகப் பதார்த்தங்கள் பாராது பரமே பார்த்திருக்கும் முனிவன் என்றும் உரைத்தலுமாம். |