யார் அவர் திருத்தொண்டின் திண்மையிற் சிறந்து அந்நெறியினின்று ஒழுகியவர். அவர் சிவன் அடியார்கள் வரின் அவர்கள் நான்கு குலத்தவ ராயினும் அக்குலமிலாராயினும், உலக நலமுடைய ராயனும் அந்நலமில ராயினும், பலராய்வரினும் தனித்து வரினும், அவர்களை இறைஞ்சி அன்புடன் அமுதூட்டி வழிபடும் ஒழுக்கத்தினின்றார். அவர் நின்றசீர் நெடுமாற பாண்டியர்க்கு மந்திரிகளுட் சிறந்த முதல்மந்திரியாராக இருந்து பகைவரைப் போக்கி நாட்டை இனிது காத்தனர். சிவனடிகளை நாளும் நவில்பவர் பாண்டிமாதேவியராகிய மங்கையர்க்கரசியம்மையாரது திருத்தொண்டுக்குத் தொண்டராகிப், பாண்டிநாடு சமணீங்கித் திருநீற்று நெறியில் வாழும் பொருட்டுத் திருஞ னசம்பந்த நாயனாருடைய பொன்னடிகளைச் சார்ந்து மகிழ்ந்தனர். வாதில் தோற்ற அமணர்களை வனகழுவில் ஏற்றுவித்தார். ________கற்பனை :- 1. பழைய புகழுடைமை நாட்டின் சிறப்புக்களுள் ஒன்று (1695) 2. வாளன்மையுடையோர் வாழ்தற் கிடமாவது நகரச் சிறப்புக்களுள் ஒன்று. (1695) 3. திருத்தொண்டின் நெறியில் வழாமையியற்றுதல் திண்மை வைப்பினால் ஆவது (1696) 4. சிவனடியார்களே உயிர்களை உய்தி பெறுதற்குக் காரணமாவார் (1697) 5. குறியில் நான்கு குலத்தினராயினும் அக்குல நெறியின் நீக்கியவராயினும் அன்றி உலக நலமுடையவராயினும் அவையின்றித் தீமைகளுடையோராயினும்; அமுதுண்ண வேண்டிப் பலராய்வரினும் தமியராய்வரினும் பூதிகோவணம் - சாதனங்களாற் பொலிந்து சிவன் திருவைத்தொழுத்தை நாவணகியல்பாலுரைக்கும் அடியாராகில் அவர்களை வணங்கி அமுதூட்டி வழிபடுவது திருத்தொண்டினியல்பு.(1667-1701) 6. குருவருள் கைகூடினால் பாச நீக்கமும் சிவப்பேறு வாய்க்கும் (1704). 7. தீமைபுரிந்து வாதிலும் தோல்வியுற்ற தீயோர்களை உரியபடி முறை செய்து ஒறுத்தல் அரசநீதி காரியஞ் செய்யும் மந்திரிகளின் கடமைகளுட் சிறந்தது (1705). தலவிசேடம் :- மணமேற்குடி - முன்பு பாண்டி நாடாயிருந்து இப்போது புதுக்கோட்டை சில்லாவில் சேர்ந்திருக்கும் அறந்தாங்கி தாலுகாவில் உள்ளது. இன்றும் அப்பெயராலே வழங்குவது. திருஞானசம்பந்த நாயனார், பாண்டிநாட்டு யாத்திரையில் நெடுமறர் பாண்டிமாதேவியார் குலச்சிறையார் இவர்களுடனே சென்று தங்கி வழிபட்ட பெருமையுடைய பழவூர். (திருக்கோயில் மிகுந்த குலமாகியுள்ளது; இப்போது முகமதியர்கள் மிகுதியாய்க் குடியேறி யுள்ளனர்) இஃது ஆவுடையார் கோயிலிலிருந்து தென் கிழக்கில் மட்சாலை வழியாக 16 நாழிகை யளவில் அடையத்தக்கது; திருப்புனவாயிலிலிருந்து வட கிழக்கில் 8 நாழிகையளவில் மீன்பசல் போய் அங்கு நின்றும் வட கிழக்கில் 7 நாழிகை யளவிலும் இதனை அடையலாம். வெள்ளாறு முன்னாளிற் பாண்டி நாட்டின் வட வெல்லை யாதலின் இது பாண்டிநாட்டுத் தலமாம் என முன்னாளிற் கணிக்கப்பட்டது. குலச்சிறை நாயனார் புராணம் முற்றும்___________ |