(வி-ரை.) புனல் மடுத்த - என்க. மடுத்தல் - உள் அடக்குதல். புனல் ஈண்டு இட நோக்கிக் கங்கையை உணர்த்திற்று. மடுத்தலாவது பெரு வெள்ளத்தைச் சிறு பனிபோலாகச் செலுத்தல். அம்மை என மதுரமொழி கொடுத்தருளப் பெற்றமை - முன் 1774-ல் உரைக்கப்பட்டது. குலவிய தாண்டவம் - சூலவுதல் ஈண்டு - இடநோக்கி அண்டமுற நிமிர்ந்தநிலை குறித்தது. எடுத்தருளும் சேவடி - உயிர்களை ஆணவச் சேற்றிலிருந்தும் மேல் எடுத்துத் தன் கீழ் வைத்து இன்ப மருளும் திருவடி. "எடுத்த பொற்பாதம்" (தேவா); "எடுக்கு மாக்கதை" (3) முதலியவை காண்க. ஊன்றிய திருவடியின் வேறாய் எடுத்த திருவடி என்றலுமாம். "முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு" என்றபடி அருளைத் தருவது என்பார் அருளும் என்றார். இங்கு அம்மையாருக்கு அந்த மீளா நிலை தந்த திருவடி என்பது குறிப்பு. "சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றாரை என்றதும் காண்க. "என்னை யிப்பவத்திற் சேராவகை யெடுத்து" (சித்தி). சேவடிக்கீழ் என்று மிருக்கின்றார் - இந்நிலை திருவடிக்கீழ் அடைந்திருக்கும் எல்லாருக்கும் ஒப்ப நிகழ்வதாம்; எனினும். "ஆடும்போது உன் அடியின்கீழ் இருத்தல் வேண்டும்" என்று வேண்டிப் பெற்ற சிறப்புடையது அம்மையார் பெற்ற நிலையென்பது தோன்ற விதந்து கூறினார். "பூமல ரடிக்கீழ்ப் புராண பூதங்கள் பொறுப்பரென் புன்சொலின் பொருளே" என்ற திருவிசைப்ாவும் ஈண்டுக் கருதத்தக்கது. அடுத்தசீர் - பெருஞ்சீர் என்று தனித்தனி கூட்டி, அம்மை என மதுரமொழி கொடுத்தருளப் பெற்றதனை (இவரை வந்து) அடுத்தசீர் என்றும், சேவடிக்கீழ் என்று மிருக்கின்றமை பெருஞ்சீர் என்றும் நிரனிரையாகக் கூட்டுக. அடுத்தல் - தாம் வேண்டாது தானே வந்து பொருந்துதல். பெருமை - கேட்டது கேட்டவாறே பெறுதல். ஆர் அளவாயினது? - வினா இன்மை குறித்தது. நம்மளவின் அமையாதது மட்டுமன்று; எவர்க்கும் அமையாதது - அளவுபடாது; என்று முடித்துக் காட்டியவாறு. "எவர்க்கு முடியாதால்" என்று இசை ஞானியாரையும், "செப்புவதி யாமென்னறிந்து" என்று மங்கையர்க்கரசி யாரையும் கூறுவன ஈண்டுச் சிந்திக்கத் தக்கன. என்றும் இருக்கின்றார் - என்பது அம்மையாரது பெருஞ் சீராகும் என்பதனை மேலும் வலியுறுத்தவார், அடிக்கீழ் இருத்தல் மட்டுமன்று - ஆடும்போது கீதம் முன் பாடிக் கொண்டிருத்தலுமாம் என்று மேல்வரும் பாட்டில் விதந்துரைத்தலும் காண்க. 65 வேறு 1782. | ஆதியோ டந்த மில்லா னருணட மாடும் போது கீதமுன் பாடு "மம்மை" கிளரொளி மலர்த்தாள் போற்றிச் சீதநீர் வயல்சூழ் திங்க ளூரினப் பூதி யாராம் போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகல லுற்றேன். |
66 (இ-ள்.) ஆதியோடு......போற்றி - ஆதியோடு அந்தமும் இல்லாத இறைவன் அருட்கூத்து ஆடும்போது கீதத்தை முன்பாடும் அம்மையாரது ஒளி கிளரும்மலர் போன்ற பாதங்களைத் துதித்துக்கொண்டு (அத்துணையானே); சீதநீர்......புகலலுற்றேன் - குளிர்ந்த நீர்வளமுடைய வயல்கள் சூழ்ந்த திங்களூரில் வாழ்ந்த அப் |