பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்989

 

கொய்யமாட்டார். இங்கு அப்பூதியார் அவ்வாறு முதல்வாழை இலை அரியச் சொன்னமை அது பெற்ற பயனடைகிறோமென்ற கருத்து. இத்தன்மைகளை ஈண்டு விரிக்கவைக்காது முன் விரித்தது என்னையோ? எனின், மகனுக்கு இத்தன்மையுள்ள குருத்து அரிந்து வருக என அறிவுறுத்தி ஏவுதல் ஆண்டுக்கூறும் அமைதி பற்றி என்க.

விரைந்து வாவென விட்டார் என்க. ஆவல்மிகுதியால், தாயாரும் தந்தையாரும் மகனை ஏவிவிடுதலினும், அவன் மீண்டு வருதலினும், இருபாலும், விரைவு காணும் அமைதிபற்றி, "விரைந்து" என்பதனை விரைந்துவா என்றும், விரைந்துவிட்டார் என்றும் இருபாலும் கூட்டி யுரைக்குமாறு வைத்தார். வரும் பாட்டிலும் "விரைந்து புக்கு" என்பது காண்க.

23

1806.

"நல்லதாய் தந்தை யேவ நானிது செயப்பெற் றே"னென்
 றொல்லையில் விரைந்து தோட்டத் துள்புக்குப் பெரிய வாழை
 மல்லலங் குருத்தை யீரும் பொழுதினில் வாள ராவொன்
 றல்லலுற் றழுங்கிச் சோர வங்கையிற் றீண்டிற் றன்றே.

24

(இ-ள்.) நல்ல..என்று - "நல்ல தாயும் தந்தையுமாகிய இருவரும் ஏவ, அதன்படி நான் இந்தத் திருப்பணியைச் செய்யும் பேறுபெற்றேன்" என்று மூத்த திருநாவுக்கரசு உள் மகிழ்ந்து; ஒல்லையில்....புக்கு - மிக விரைவில் சென்று தோட்டத்தினுள்ளே புகுந்து; பெரிய...பொழுதினில் - பெரிய வாழையின் செழிப்பாகிய அழகிய குருத்தினை அரியும்போது; வாளரா...அன்றே - ஒளியுடைய பாம்பு ஒன்று துயரமுற்று மயங்கி வீழும்படி அவனது அங்கையில் அப்போதே தீண்டிற்று.

(வி-ரை.) நல்ல....என்று - இது மூத்த திருநாவுக்கரசு தனக்குள் எண்ணி மகிழ்ந்துகொண்டு பணியிற் புகுந்த நிலை. நல்ல - நன்மை தருகின்ற - செய்கின்ற; நன்மை செய்கின்றவர்களாதலின் என்னை இப்பணியில் ஏவி வழிப்படுத்தினர் என்பது குறிப்பு. தாய் தந்தை - மக்களை நல்வழிப்படுத்தும் கடமை தாய் தந்தையாரிடத்து முதலில் முன்னிற்பது; அவருள் தாய் முதற்கண் நிற்பவர் என்பது. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது நீதி நூல்; ஏவ - "ஏவா மக்கள் மூவா மருந்து" என்பது நீதி நூலாயினும் அது பொது விதி. ஈண்டு மக்கள் பலருள்ளும் காலமும் இடமும் தகுதியும் பிறவும் அறிந்து அவ்வவர்க்கேற்றபடி பணித்தல் தாய் தந்தையர் பாலதே யாதலும் அவர் ஏவலை எதிர்நோக்கி அவ்வழி நிற்றல் மக்கள் கடனாதலும் குறிக்க ஏவ என்றார்; நான் - மக்கள் பலருள்ளும் நானே இப்பணி பெற்றேன்; "அத்தனெனக் கருளியவா றார்பெறுவாரச்சோவே" என்றபடி உயர்வுடைய இறுமாப்பு; இது "நான்" என்றெழும் ஆணவ இறுமாப்பன்று; அவ்வாறன்றி அடிமையிற் சிறப்புடைமைபற்றி இறுமாத்தல் ஆணவத்தை வலியற்றதாகச் செய்யும்; இது - திருஅமுதுக்குப் பரிகலம் தேடிக் கொணர்தல் என்ற இப்பெரும் பணி; திருவமுது வகை எத்துணை உயர்வேயாயினும் அதற்கு ஏற்ற ஆசனமாகவும் ஆதாரமாகவும் உதவுவது பரிகலமேயாம். பூசைமுறையில் ஆசனமந்திரம் முதலில் வரும் கருத்தும் காண்க. "அமுது செய்தருள" (1805), (1469), (1470) என்பனவும் இதன் இன்றியமையாமையினையும் ஏற்றத்தையும் குறிப்பன. செயப் பெற்றேன் - பெரும்பேறு என்பது. - என்றிவை பலவும் கருதித் தன்னையே மகிழ்ந்து பணியிற் புகுந்தனன் என்ற நயமும், இதனால் அப்பூதியாரே யன்றி அவர் மக்களும் சுற்றமும் நின்ற அன்பு நிலையும் கருதுக.

ஒல்லையில் விரைந்து - ஒருபொருட் பன்மொழி மிகுதி குறித்தது.