அரவைக் கையினை உதறி வீழ்த்திவிட்டு; பதைப்புடன் - உளம் மிகு பதைப்புடனே; "பாந்தள்....கொடுப்பன்" என்று - "பாம்பு தீண்டியதாலுளதாகிய கொடிய வேகத்தினால் நான் விழுவதற்குமுன்பே மிக வேகத்தாற்சென்று, அரிந்த இந்தக்குருத்தினைச் சென்று, கொடுப்பேன்" என்று தீர்மானித்து; ஓடிவந்தான் - ஒடிவந்தனனாகி; 25 1808. (இ-ள்.) பொருந்திய....முந்த - சேர்ந்த விடத்தின் வேகத்தினும், முன் சொல்லியவாறு ஓடிச்செல்கின்ற அவனுடைய வேகம் முந்தும்படி; வருந்தியே அணையும் போழ்து - வருத்தத்துடனே அணைகின்றபோது; "மாசுணம்....அறையேன்" என்று - "பாம்பு தீண்டிய செய்தியினை அருந்தவராகிய திருநாவுக்கரசர் திருஅமுது செய்வதற்கு இடையூறாகும்படி, நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று உட்கொண்டு; திருந்திய...புக்கான் - திருத்தமுற்ற கருத்தினுடனே செழிப்புடைய மனையின் கண்ணே சென்று புகுந்தனனாகி; 26 1809. (இ-ள்.) எரிவிடம் முறையே ஏறி - அழிக்கும் விடமானது முறையிலே மேல் ஏறி; தலைக்கொண்ட ஏழாம் வேகம் தெரிவுற - தலைக்கெண்ட ஏழாம் வேகத்தை அடைந்த நிலையினைப் புறத்தோற்றத்தினும் தெரியும்படி; எயிறும்...தீந்து -பற்களும் கண்களும் மேனியும் கருகித் தீந்து; விரி வுரை குழறி - விரித்துக் கூறும் சொற்கள் தடுமாறி; ஆவி விடக்கொண்டு - உயிர் விடும் நிலை வரவும் அதைவிடாமற் றாங்கிக்கொண்டு; மயங்கி வீழ்வான்...வீழ்ந்தான் - மயங்கி வீழ்கின்ற மகன் பரிகலத்துக்காக அரிந்து கொணர்ந்த வாழைக் குருத்தினைத் தாயாரிடம் வைத்து நிலத்தில் வீழ்ந்தனன். 27 இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. செயலின் றொடர்பும் பொருளின் றொடர்பும் நோக்கி இவ்வாறுரைக்கப்பட்டது. தனித்தனி வினை முடிபு கொள்ளினு மிழுக்கில்லை. 1807. (வி-ரை.) கையினில்...வீழ்ந்து - கையினில் தீண்டிய பாம்பு அதனோடு அமையாது கையினைச் சுற்றிக்கொண்டு கண்களில் கோபத்தீக் காலும்படி இருந்தது; காந்துதல் - தீயின் வெப்ப உணர்ச்சி அணிமையில் உள்ளார்பால் தாக்கும்படி வீசுதல்; கண் எரி காந்துதலாவது - கண்ணினின்றும் கோபத்தீயின் வெப்பம் தீக்காற்றுப்போலக் கொழுந்துவிட்டு வெளிவீசுதல். அந்தப் பாம்பு தன்னை ஊறு செய்ய முயன்றான் என்று நினைந்து அக்கோபத்தால் தீண்டினதுடளில்லாது கையினையும் சுற்றிக்கொண்டது. அதனோடு அக்கோபம் தணியாது மிகுந்து கண் எரிவீச நின்றது. தற்காப்புப் பயத்தாற் கோபித்தாலன்றிப் பாம்புகள் தீண்டி ஊறு செய்யா. அவற்றின் நச்சுப்பற்கள் தம்மியல்பில் மேல்வாயுடன் மடங்கிக் கிடப்பனவாதலின் கடிக்கும் இயல்பில்லாதவை. அச்சமும் சினமும் வந்தபோது அவை நிமிர்ந்துவிடும்; அப்போது குழாய் போல உள்ள அவற்றின் உட்டுளையின் வழி அவற்றின் அடியில் இருக்கும் நச்சுப்பையினின்றும் விடத்தைக் கூரிய பல்லினால் கொத்தி, உடம்பில் ஊறுபடுத்தி, அந்த ஊற்றின் வழி உடம்பிலுள் இரத்தத்தினுள் புகுந்து கலக்கும்படி உகுத்துவிடும். இது விடப்பாம்பின் பொது இயல்பு. தீண்டிய மட்டில் அகலாது சுற்றிக்கொள்ளுதல் ஒருவகை நச்சுப் பாம்புகளின் சிறப்பு இயல்பு. பை அரவு - பையினை உடைய - நச்சுப் பாம்பு. பை - நச்சுப் பை. "பையஞ் சுடர்விடு நாகப்பள்ளி" (தேவா). உதறி வீழ்த்துதல் - சுற்றிக்கொண்ட பாம்பினால் மேலும் தீங்கு விளையாமல் அகற்றும் உபாயம். உதறுதலின் விசையினால் வழுவழுப்பான அதன் உடல் நழுவி விழும். |