இயல்புடை இருவர் - "இயல்பினா லில்வாழ்கை" என்ற திருக்குறள் காண்க. இயல்பாவது சிவனடிமைத் திறத்தை அடிப்படையாகக் கொள்ளுதல். நீறு நல்கி - அடியார்கள் மாகேசுவர பூசை கொண்ட ருளுமுன்பு இவ்வாறு நீறு நல்குதல் சைவ மரபின் நல்வழக்கு இதுவே இங்குச் சரித மேல் நிகழ்ச்சிக்குக் காரணமாயினமை காண்க. இந்த நல்வழக்குக் கையாளப்படுதல் நலம் தரும். இல்லுடை இருவருக்கும் - என்பதும் பாடம். 31 1814. (வி-ரை.) ஆதி நான்மறை நூல் - எல்லாவற்றுக்கும் ஆதியாகிய மறை என்றும், ஆதியாற் றோற்றுவிக்கப்பட்ட மறை என்றும் உரைக்க நின்றது. மறை நூல் - மறைகளும் அவற்றின் வழிவந்த மிகுதி முதலிய நூல்களும். வாய்மை - வேதத்தினுள் சிறந்த அறமாகச் "சத்யம் வத" என்று விதிக்கப்பட்டது வாய்மை. வாய்மை அப்பூதியார் - சிவனடிமைத் திறமாகிய அன்பு நெறியிற் பிறழாமை போல, வேத வாய்மையினும் பிறழாத பெருமை விளங்கும் இடம் இதுவாதலின் இங்கு இத்தன்மையாற் கூறினார். காதலால் - சாத்த என்க. காதலால் - மூத்த சேய் - என்று கூட்டி உமது காதல் செல்லும் வகையால் மூத்தவன் என்றலுமாம். முன்னே மேதகு பூதி சாத்த - சிறுவர்களுக்குப் பெரியோர் தாமே கரத்தால் நீறு சாத்தி ஆசிபுரிதல் மரபு. முன்னே - ஏனை இளைய பிள்ளைகளுக்கு அளிக்கும் முன்பு. சேயையும் - இவர்களைக் காட்டியதுபோல அவனையும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. மேதகு - மேன்மையுடைய. மேம்பாடாவது உயிர்க்கும் உடலுக்கும் ஒருங்கே உறுதி செய்யும் பெற்றி. பூதி - திருநீறு. சாத்த - அளித்துச் சாத்துவிக்க - அணியச் செய்ய என்றலுமாம். யாதும் ஒன்று உரையார் - நிகழ்ந்தனவும் மேல் விளைந்தனவுமாகியவற்றுள் எப்பகுதியும் ஒரு சிறிதும் விரித்துச் சொல்லாதவராகி: ஒன்று - ஒன்றும் - ஒரு சிறிதும். உம்மை தொக்கது. உரையார் - உரையாராகி: முற்றெச்சம். உரையார் - என்றார் என்று கூட்டி முடிக்க. உரைத்தல் - ஈண்டு விரித்துக் கூறுதல் என்ற பொருளில் வந்தது. வரும் பாட்டில் "விரித்துரையும்" (1815) என்பது காண்க. இப்போது இங்கு அவன் உதவான் - இஃது உண்மைக் கூற்றேயாதலை உணர்க. இங்கு அப்பூதியார் மெய் சொல்லாது மறைத்தது தகுதியாமோ? என்று ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளருமுண்டு, இதனை நோக்கியே "களவு பொய்க் காமங் கோப முதலிய குற்றங் காய்ந்தார்" (1784) என்றும், "ஆதி நான் மறைநூல் வாய்மை யப்பூதியார்" (1814) என்றும் ஆசிரியர் காட்டி, உலகர் அபசாரப்படா வண்ணம் எச்சரித்தமை காண்க. இஃது உரைத்தபோது உண்மையாதல் மட்டுமன்றி இப்போது - உதவான் என்றமையால் பின்னர் உதவுவான் என்று, இங்கு என்றமையால் இவ்விடத்தன்றிப் பின்னர்த் திருக்கோயிலில் உதவவுள்ளானன் என்றும், மேல்வரும் விளைவுபற்றிய உண்மையும் குறிப்பிற்பெற வந்த அழகும் அமைதியும் காண்க. இப்போது உதவான் என்றமையால் அழைக்க வந்து உதவும் நிலையில் அவன் இல்லை என்ற உண்மை தானே போதருதலும் காண்க. "மெய் விரித்துரையும்" (1815) என்றமையால் அரசுகள் இதனை "மெய்" என்றே கொண்டமையும் காண்க. காதலரிவர்க்கு - என்பதும் பாடம். 32 |