1816. (வி-ரை.) பெரியவர்....உரையாரேனும் - விரித்துரையும் என்ற அரசுகளுக்கு, அவ்வாறு விரித்துரைப்பின் பெரியவர் அமுது செய்யார்; இறந்த மகனைப் பற்றிச் செய்ய வேண்டுவனவற்றின் முயல விடுப்பர்; அவரை அமுது செய்விக்கக் கிடைத்த இப்பேறு பிழைக்குமாதலின் விரித்துரையார் ஆயினும்; மாதவர்....சீலத்தால் - பெருந்தவர் விரித்துரைக்க வினவும்போது அவ்வாறே உண்மையினை அவர் தெரியும்படி விளங்க உரைத்தல் வேண்டும் என்பது சீலம் - செம்மை ஒழுக்கவிதி - ஆதலினால்; இங்கு இரண்டு கடமைகள் அப்பூதியார் முன் நின்றன; பெரியவர் அமுது செய்தல் பிழைக்கும்படியாக விளங்கச் சொல்லாதிருத்தல் ஒன்று; அவர் கேட்க உண்மையே சொல்லும் சீல நெறி நிற்றல் மற்றொன்று; இவையிரண்டினும் சங்கடமுண்டாயினும் பிந்திய நெறி நிற்றலே இங்குச் செய்தக்கது; அவ்வாற்றினில்லாமை பாவம் எனத் துணிந்து என்க. இவ்வாறே இரண்டு தருமங்களினும் சங்கடங்களிடையே நின்ற நிலையில் காரைக் காலம்மையார் "செய்தபடி சொல்லுவதே கடனென்னுஞ் சீலத்தால்" (1744) நிகழ்ந்தபடியே கணவனிடம் மொழிந்த சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. உண்மைக்கு மாறு சொல்லாவிடினும், இவ்வாறு நிகழ்ச்சியை மறைவு செய்தலும், உண்மை தெரிந்தால் அமுது செய்யமாட்டார் என்றறிந்த அருந்தவரை உண்மை தெரிவிக்காமல் அமுது செய்விக்கத் துணிதலும், தாம் மனமறிந்தபடி மகன் இறந்த ஆசௌசமுடைய மனையில் அமுது செய்வித்தலும் அப்பூதியார் பால் தகுதியாமோ? இவை, தாம் வழிபடு கடவுளாகக்கொண்ட பெரியவரை வஞ்சித்த செயல்களாகவோ? என்றின்ன பலவாறும் இங்கு ஆராய்வாருமுண்டு. அன்று அப்பூதியாரிருந்த சிவனடிமைத் திறத்தின் உறைப்பு நிலையினை உணர்ந்தால் இக்கேள்விகள்நிகழா; சிறந்த அடியவரை அமுது செய்வித்தல் சிவனை அமுதூட்டுதலாம். அது உயிர்க்குறுதி செய்யும் சிறந்த பதி புண்ணியச் செயல் ஆசௌசம் என்பது உடலைப்பற்றிது; மாயாசம்பந்தமானது. "யாவையும் சூனியஞ் சத்தெதிராதலின்" (போதம்); "முனைத்திடா தசத்துக் சத்தின் முன்னிருளிரவி முன்போல்" (சித்தி 7-1); "சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது" என்ற இலக்கணத்தின்படி பதிபண்ணியத் தன்மையே நிறைந்தூய உள்ளத்தினிடையே தாழ்ந்த பாசத்தன்மை பற்றிய நிகழ்ச்சிகள் எழா என்க; அஃதொக்கும்; ஆயின் அப்பூதியார் இதனை அரசுகள் அறியாது மறைத்த தென்னை? எனின், அப்பூதியார் உலகிறந்த ஞானநிலை பெற்ற மறையவர். "ஞானத்திருமறையோர்" (1469); ஆயினும் தாம் உலகிறந்த நிலையினைப் பெற்றவர் என்பதனைத் தாம் உணர்ந்தாரில்லை; அதுவே அவரது மேம்பாடு; அதனை அரசுகள் திருவருள் காட்ட உணர்ந்தனர். தம் பெருமை உணராமையும், அரசுகள் உணர்வார் என்பதனை உணராமையுமே மறைத்ததனுக்குக் காரணம் என்க. "அறிவரும் பெருமை யன்பர்" (1819) என்று, பின்னர் இதனை உணர்ந்து போற்றியமையும் காண்க. உலகநிலையில் தாமதகுணம் பற்றி வரும் வஞ்சனை, ஏமாற்றம் முதலில் தாழ்ந்த மனவெழுச்சிகளுக்கெல்லாம் இப்புண்ணிய சரித்திரங்களுள் இடமேயில்லை ஏன்றொழிக. இங்கு உலகர் தத்தம் தாழ்ந்த நிலையினையே பற்றுக்கோடாகக்கொண்டு செய்யும் ஆராய்ச்சிகளால் அபசாரமே விளையுமன்றி உண்மை விளங்காது. இவற்றின் இயல்பெல்லாம் அனுபவமுடைய தேசிகர்கள்பால் அடங்கிக் கேட்டறிந்து கொள்ளற்பாலன. ஈண்டு விரிப்பிற் பெருகும். வாய்மை தெரிவுற உரைக்கவேண்டும் - முன்னர் உரைத்ததும் வாய்மையே இப்போது உரைப்பது அதனை விளங்க உரைத்தலேயாம். |