| அறிவரும் பெருமை யன்ப ரமுதுசெய் தருளு தற்குச் சிறிதிடை யூறு செய்தா னிவ"னென்று சிந்தை நொந்தார்; |
37 (இ-ள்.) பிரிவு உறும்....வாழ்ந்தார் - பிரிந்த உயிரை மீளப்பெற்ற பிள்ளையைக் காண்பார்கள் எல்லாம் தெய்வத்திருத்தொண்டினது செந்நெறிச் சிறப்பினைப் போற்றி வாழ்வடைந்தனர்; நின்ற...நொந்தார் - அங்கு நின்ற, அப்பெற்றோர்கள் "தாங்கள் அறிதற்கரிய பெருமையுடைய அன்பர் திருவமுது செய்வதற்கு இவன் சிறிது இடையூறு செய்தான்" என்று மனம் நொந்தார்கள். (வி-ரை.) பிள்ளையைக் காண்பார் - தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார்! பயந்தார் - சித்தை நொந்தார் - பிரியும் உயிரை மீளப் பெற்ற மகனை அந்நிலையிற் காண்பாராகிய பிற அடியார்களும் பெற்றோரும் என்றிரு திறத்தினருடைய மனங்கள் ஒரு தன்மையான நிலையாமையாது வெவ்வேறு நிலைகளை அடைந்தன; பிள்ளை உயிர்பெற்றெழுந்தது கண்டு மகிழவேண்டிய பெற்றோர் அதற்குமாறாக, வருந்தினர்; இவ்விருவேறு நிலைகளும் இப்பாட்டால் உணர்த்தப்பட்டன. காண்பார் - கண்டார் என்னாது காண்பார் என்று எதிர்கால வினைப்பெயரால் கூறியதென்னையெனின்? காணுந்தொழில் முற்றுமுன் தொண்டினெறி போற்றுந் தொழில் முற்றியவிரைவு குறித்தற்கும், அங்கு அன்று கண்ணாற் காப்பரரேயான்றி இனிக் கருத்திற்காண்பாரும் இவ்வாறே வாழ்ந்தாராவர் என்று குறித்தற்குமென்க. தொண்டின் நெறி - திருத்தொண்டின் நிலையும் அதற்குச் சிவன் அருளும் முறையும். 606 பார்க்க. போற்றி வாழ்ந்தார் - போற்றுதலால் வாழ்வடைந்தனர். வாழ்வாவது சிவனருள் பெறுதல். காண்பார் - வாழ்ந்தார் - இறந்தகாலம் உறுதியும் விரைவும் குறித்தது. பயந்தார் - (பிள்ளையைப்) பெற்றோர்கள். பயனை அடைந்தவர்கள் என்ற குறிப்பும் காண்க. பிள்ளையினால் அடியவர் அமுது செய்தற்குத் தாம் மறைத்தும் மறைக்கலாகாது நேர்ந்த இடையூறு கருதிப் பயமடைந்து நின்றவர்கள் என்ற குறிப்பும் தருவதாம். தாங்கள் அறிவரும் பெருமை அன்பர் - தாம் மறைத்தாலும் அறிந்துகொள்ளவும் இடையூறு நீக்கவும் அருளாற்றற் பெருமை படைத்தவர் அரசுகளாவார் என்றுணரா திருந்ததனை எண்ணினர். சிறிது இடையூறு - காலந் தாழ்க்கக் காரணமாயிருந்ததனை இடையூறு என்றார். செய்தான் இவன் - இடையூறாக அப்புதல்வன் ஒன்றுஞ் செய்தானலன; அதுவன்றிக் காலந்தாழ்க்கலாகாதென்று உட்கொண்டு விடவேகம் பரவுமுன் ஓடிவந்து (1807) பரிகலக்குருத்தையும் சேர்ப்பித்தனன்; அதுவேயுமன்றி, அருந்தவர் அமுது செய்யத் தாழ்க்க இதனை யார்க்கும் அறையேன் என்று திருந்திய மனத்துடன் வந்து அவ்வாறே அமைந்தனன்; இவ்வாறாகவும், இவன் இடையூறு செய்தான் என்றது அவன்வழியாக நிகழ்ந்ததனைஅவனால் நிகழ்ந்ததாக அப்பெற்றோர் அன்பு மேலீட்டினால் உபசரித்துக்கொண்டு வருந்தினபடி. உலகில் ஒரு குழந்தை பிறந்தபோது தாய் தந்தையோ அன்றி நெருங்கிய உறவினரோ இறந்துபட நேர்ந்தால் அவரிழக்கும்படி அக்குழந்தை ஒன்றுஞ் செய்யாதிருப்பவும், இவன் தாயைத் தொலைத்தவன், பிறக்கும்போதே தகப்பனை தொலைத்தவன் என்றிவ்வாறு கூறுவதும் அக்கருத்தோடு பின்னாளினும் அவனைக் காண்பதும் உலக வழக்கில் நிகழ்வது. இது அவ்விறந்தார்பால் வைத்த அன்பினால் ஆவதுபோல, இங்கு அருந்தவரை அமுதூட்டுதலில் வைத்த தீவிரதர அன்பினால் இவ்வாறு கூறியதும், |