னர் - மிகச் சிறிய எம்மையும் ஒரு பொருளாக வைத்து ஆட்கொண்ட பெருங் கருணைத்திறத்தினைப்போல் இங்கு வேறு யாவர் பெற்றனர்?; என்ன இறைஞ்சினர் - என்று எண்ணித் துதித்து வணங்கினர். (வி-ரை.) மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் - விருப்பு - மனம்; மெய்ம்மை - காயம்; பணிசெய்த - வாக்கு முதலிய புறக்கரணப் பணிகள் என முக்கரணங்களும் ஒன்றித்து நிகழும்படி திலகவதியார் செய்த தவம் குறித்தது. இவை 1308 - 1311 பாட்டுக்களில் உரைக்கப்பட்டன. விருப்பு மெய்ம்மைப் பணி செய்த அதனால் என்க. அதனால் - வரம் பெறும் - தாபதியார் என்று கூட்டுக. கழலில் - இடைநிலைத்தீபகமாய் நின்று கழலின்கண்ணே பணி செய்த என்றும, கழலில் வரம்பெறும் என்றும் முன்னும் பின்னும் சென்றியைந்து பொருளுரைக்க நின்றது. தம் இச்சை நிரம்ப வரம் பெறும் - தம் இச்சையாவது, தமக்காகக் கொண்டதும் உலகுக்காகக் கொண்டதும் என இரண்டாம். தமக்காகக் கொண்ட இச்சை "பேராத பாசப் பிணிப்பொழியப் விஞ்ஞகன்பால், ஆராத அன்புபெற ஆதரித்த" (1307) என்றதனாலும், உலகுக்காக மேற்கொண்ட இச்சை, "அடியேன்பின் வந்தவனை - எடுத்தாள வேண்டும்" (1311) என்றதனாலும் உணர்த்தப்பட்டன. தம்பியாரைத் தமது உடற்சார்பு பற்றியே எண்ணியவரன்று; சமயச்சார்புபற்றியும் எண்ணி இறைவரிடத்து வேண்டினார் என்பது முன் உரைக்கப்பட்டது. 1311 பார்க்க. அதனால் அது சமயநலம் விளங்கும் பயன் தந்ததாகலின் உலகின் பொருட்டுக் கொண்ட இச்சையாமென்க. இந்த இரண்டும் நிரம்பும் வகையில் அம்மையார் வரம் பெற்றனர். வரம் பெறும் - தாபதியார் - என்றதனால் தமது பாசப்பிணிப் பொழிய இறைவரை வழிபட்டுச் சிவநெறியில் நின்று தவம்செய்து சிவத்தை மேவினார் என்று அம்மையாரது சரிதத்தை நிறைவாக்கிக் காட்டிய குறிப்பும் காண்க. நாயனாரது சரிதவிரிவுக்கு வேண்டிய அளவே விரித்தும், பின்னர்க் குறிப்பாலுணர்த்தியும் செல்லும் முறையினையும் ஓர்க. அம்மையாரது சரிதத்தை முற்றும் நிறைவாக்கிக் கூறினாரிலர் ஆசிரியர் என்பாருமுளர். அவர்கள் இதனைக் கருதித் தெளிவாராக. இச்சை நிரம்ப - தம்பியார் திறத்துத் தாம் கேட்டவரம் கேட்ட அளவுக்கு மேலாகப் பெருமான் அருள என்பது குறிப்பு. "யார் பெற்றனர்?" என்ற கருத்துமிது. வரம்பெற்ற வகையினை அம்மையார் தமது வாக்கினாலே "பொய்மைச்சமய...யார் பெற்றனர்"? என்ன எடுத்துக் கூறி ஏத்துதல் காண்க. பிணிவிட்டவர்....பிணிவிட்டு - சொற்பின் வருநிலை. சமயப்பிணி விட்டவர் வாகீசர். பிணி - பிணிப்பு - தொடக்கு. "பேராத பாசப் பிணிப்பு ஒழிய" (1307) பார்க்க. பிணிவிடுதல் - பிணிப்பினின்றும் விடுபடுதல். தப்புதல். போதும் பிணிவிட்டு அருளி - பிணி - நோய். சூலை. போதுகின்ற சூலையினை விடுத்தருளிச் செய்து,"சூலை மடுத்தாள்வம்" (1313) என்றது காண்க. பொருளா - ஒரு பொருளாக - பொருட்டாக. கடைக்குறை. போதும் - அவ்வளவில் நீங்குகின்ற. எம்மைப் பணிகொள் - எம்மை - தம்மையும் தம்பியாரையும் உளப்படுத்திய தன்மைப் பன்மை. பிணி விட்டருளியவதனால் தாம் வேண்டியவாறு வரங்கொடுத்து, "என்னை ஆண்டருளு நீராகில்" என்றபடி தம்மையும் அடிமை கொண்டு, அச்செயலாற்றானே தம்பியாரையும் பணிகொண்டனர் என்பது கருத்து. இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினர் - இவ்வாறு அருள் பெற்றவர், தாம் தாம் பெற்ற அருளின் பெருஞ் சிறப்பை எண்ணிப் பாராட்டி அருளிற்றிளைத்தலும் |