பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1011

 

உயர்நிலைபற்றியது; சாதிகுலம் சமூக ஒழுக்க வழக்கங்கள் வேறு; அவை ஒழுக்க உலக நிலைபெறக்கருதியனவாய் உடம்பைப் பற்றியன. முன்னையன உயிரினைப் பற்றியவை. அரசுகள் "புதல்வர்களும் நீரும் இங்கு அமுது செய்வீர்" என்று ஏவியதனாலே, அந்த ஏவல் செய்வாராய் மைந்தரும் அப்பூதியாரும் மருங்கிருந்து அமுது செய்தனர் என்றதனால், இது அந்நாளில் சமூக வழக்கன்று என்பது போதரும். சிவனன்புபற்றிய உயிரின் உயர்ந்த சமய வொழுக்கந் தலைப்பட்ட போது ஏனைய உலக வொழுக்கங்கள் முனைக்கமாட்டா. ஈண்டு அவற்றுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அந்நினைவுகள் தானும் எழாது உலக முன்னைச் சார்புகள் மறக்கப்படும். அவவ்வாறன்றி உலகச் சூழலில் முழுதும் உழன்றுபடும் ஏனையோர் இந்நிகழ்ச்சிகள் பற்றி உலக மக்கட் கூட்டங்களின் நிலைபேறுபற்றிய சமூக ஒழுக்கங்களை நீத்து விடுதல் செல்லாது. அரசுகளும் அப்பூதியாரும் உடனிருந் துண்டமை பற்றி வேளாளராவாரெவரும் வேதியராவாரெவரும் உடனுண்ணுதற் குரியார் என்று முடித்தல் சாதி வேற்றுமையை ஒழிக்க உதவாது உறுதிப்படுத்துவதற்கே துணை செய்வதாகும். நந்தனார் ஒருவர் அன்பு நிலைபற்றித் திருஅருளின் படியே தீயின் மஞ்சனஞ்செய்து இறைவர் திருமுன்பு நேரே சென்றருளினர் என்ற அதனால் அவர் குலத்தவராவார் எவரும் எத்திறத்தினரேனும் குலவொழுக்கங் கடந்து நேரே கோயிலினுள் திருமுன்பு புகுதற்குரியார் என்று கூறுவோரும் இவ்வாராய்ச்சியாளரும் ஒப்பர். இங்குச் "சிந்தை மிக்கு இல்ல மாதர் திருவமு தெடுத்து நல்க" என்று மேற் கூறுதலானும் இஃது அந்நாள் வழக்கின்மையும் சிவனன்பு மீக்கூர்தலால் உலகிறந்த நிலையின் நிகழ்ந்தது என்பதும் புலப்படும் "அடியாரோடும் அமுது செய்தருளினர்" என்றது மேலும் அதனை வற்புறுத்தும்.

இல்ல மாதர் - திருவமுது எடுத்துச் - சிந்தைக்கு - நல்கு - என்க. இவ்வாறு சிவன் அன்பு மேம்பாடில்லாத உலகநிலையில் இவ்வாறு இல்லமாதர் நல்குதல் நிகழ இயலாமையும் குறிப்பு. இல்லமாதர் - மனைவியார்; இல்லத்திற்குரியவர்.

அடியாரோடும் - அரசுகள், அங்கு அப்பூதியாரும் மக்களும் என்ற இவர்களேயன்றி ஏனை அடியார்களுடனும் இருந்து மாகேசுவர பூசைகொண்டருளித் திருவமுது செய்தருளினர். குங்குலியக்கலய நாயனாரும் அடியார்களும் ஒருங்கு திருவமுது செய்யும்படி அவர்தம் திருமனைவியார் பூசித்தளித்தமை இங்கு நினைவு கூர்தற்பாலது (851). இந்த அடியார்கள் அரசுகளுடன் சென்றவர்களும் அங்குக் கோயிலின் முன் இந்நிகழ்ச்சி கண்டு போற்றி வாழ்ந்தார்களும், பிறருமாவர் என்க. அடியார்களுடனன்றி அமுது செய்யலாகா வழக்குப்பற்றிச் சிறுத்தொண்ட நாயனார் புராணத்தினுள் உத்தராபதியார் கூறுதல் காண்க. (சிறுத் - 76)

மைந்தரும் மறையோரும் மருங்கிருந்து அமுது செய்யத் தமிழ் ஆளியார், அடியாரோடும் அமுது செய்தருளினார் என்ற கருத்தும் முன் உரைத்த கருத்துக்களை வலியுறுத்துவதாம்.

தமிழ் ஆளியார் - திருநாவுக்கரசர்; ஆளி - சிங்கம்; அது ஏனையவற்றுக்கரசாயிருக்கும் தன்மையும், பெருந்தன்மையும் குறித்தது. தமிழின் சிறப்பே அருள் வெளிப்பாட்டுக் கருவியானமை குறிப்பு. தமிழை ஆள்பவர் என்றலுமாம்.

அமுது செய்து அருளினார் - அருள் புரிந்தனர். அருள் புரிந்தது வரும்பாட்டிற் கூறுவார்.

41

1824.

மாதவ மறையோர் செல்வ மனையிடை யமுது செய்து
காதனண் பளித்துப் பன்னாள் கலந்துட னிருந்த பின்றை
மேதகு நாளின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து, நற்றமிழ்ப் பதிகஞ் செய்வார்,

42