1825. | அப்பூதி யடிக ளார்தம் அடிமையைச் சிறப்பித் தான்ற மெய்ப்பூதி யணிந்தார் தம்மை விரும்பு"சொன் மாலை" வேய்ந்த இப்பூதி பெற்ற நல்லோ ரெல்லையி லன்பா லென்றுஞ் செப்பூதி யங்கைக் கொண்டார் திருநாவுக் கரசர் பாதம். |
43 1824. (இ-ள்.) மாதவ மறையோர்....அமுது செய்து - மாதவஞ் செய்த மறையோராகிய அப்பூதியாரது செல்வம் பொருந்திய திருமனையில் இவ்வாறு திரு அமுது செய்தருளி; காதல் நண்பு அளித்து - காதல் பெருகிய நட்பின் திறத்தை அளித்தருளி; பன்னாள் கலந்து உடன் இருந்த பின்றை - பல நாள்கள் மனங்கலந்த வொருமையோடு உடனாகி இருந்த பின்னர்; மேதகு....செய்வார் - மேன்மையுடைய திருநாவுக்கரசர் விளக்கமுடைய திருப்பழனம் என்னும் மூதூரில் அமர்ந்தருளி நாதருடைய திருவடிகளைச் சார்ந்து நல்ல தமிழ்ப் பதிகத்தை அருளிச் செய்வாராகி, 42 1825. (இ-ள்.) அப்பூதி யடிகளார்தம்...சிறப்பித்து - அப்பூதி யடிகளாருடைய திருத்தொண்டின் பெருமையினைச் சிறப்பித்து; ஆன்ற..... வேய்ந்த - பெருமையுடைய திருமேனியில் திருநீற்றை அணிந்த சிவபெருமானை விரும்பும் "சொன்மாலை" யினைத் தொடுத்துச் சாத்திய; இப்பூதி பெற்ற நல்லோர் - இந்தப் பெருஞ் செல்வத்தைப் பெறும் பேறு பெற்ற நல்லோராகிய அவ் அப்பூதியார்; திருநாவுக்கரசர் பாதம் எல்லையில் அன்பால் என்றும் செப்புஊதியம் கைக் கொண்டார் - திருநாவுக்கரசரின் திருவடிகளே பொருள் கொண்டு எல்லையில்லாத அன்பினாலே எப்போதும் எந்நாளும் சொல்லித் துதிக்கின்றதாகிய இந்த ஊதியத்தினைக் கைவரப் பெற்றனர். 43 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1824. (வி-ரை.) மாதவ மறையோர் - முன்னர்ப் பெருந்தவங்கள் செய்த தன் பயனாகக் குருவருள் பெறும் இப்பெரும்பேறு பெற்றனர் என்பது குறிப்பு. செல்வமனை - செல்வம் - முத்தித்திரு; "செல்வன் கழலேத்தும் செல்வ" முடையசெல்லராய்த் "திருநின்றசெம்மையே செம்மையாக்கொண்ட திருநாவுக்கரசர்" பெருமான்றாமே எழுந்தருளிக் கருணைசெய்தற்கிடமாய் நிகழ்ந்தசெல்வம். காதல் நண்பு அளித்து - காதலாய் விளைந்த நண்பு. ஈண்டுக் காதல் என்றது அரசுகளிடத்து "அறியா முன்னே, காண்டகு காதல் கூரக் கலந்தவன் பினராயிருந்த" (1783) அப்பூதியாரது மனக் காதல் குறித்தது. அக்காதலின் பொருளாவார் தமது நட்பினை அளித்து. அளித்தல் - கருணையுடன் தருதல். கலந்து உடனிருந்த - கலத்தல் - மன வொருமைப்பாடு பெற்றுச் சேர்தல் - மனங் கலந்து என்க. உடனிருத்தலாவது இருவரும் ஒரு தன்மை பெற நிகழ்தல்; "உடனுறைவின் பயன் பெற்றார்" (1509) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. பாதம் சேர்ந்து - அத்தலத்தை அடைந்து நாதருடைய திருவடிகளைச் சார்ந்து - பணிந்து என்ற பொருளில் வந்தது. பதிகம் செய்வார் - பதிகத்தை அருளிச் செய்வாராகி: முற்றெச்சம். செய்வார் - வேய்ந்த - என்று வரும் பாட்டுடன் கூட்டுக. நாவின் மன்னர் - பழனநாதர்தம் பாதம் சேர்ந்து - பதிகம் செய்வார் (1824), அப்பூதியார் - அடிமையைச் சிறப்பித்துப் பூதியணிந்தார் தம்மைச் - "சொன் மாலை" வேய்ந்த(தாகிய) - இப்பூதி (1825) என்று கூட்டி வினை முடிபு கொள்க. |