பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1013

 

செய்தார் - என்ற பாடம் பிழை.

1825. (வி-ரை.) அப்பூதி - அடிமையைத் சிறப்பித்துச் "சொன் மாலை" வேய்ந்த - சொன் மாலை - இத் தொடக்கமுடைய திருப்பதிக முதற் குறிப்பு. "சொன் மாலை" என்று தொடங்கும் பதிகம் என்க. முன்னரும் இக் கருத்தே பற்றித் "தீந்தமிழின் தொடை மாலைச் "சொன்மாலை" பாடினார்" (1476) என்றமை காண்க. சொன்மாலை - பதிகத் தொடக்கத்துக்கும் பதிகத்துக்கும் இரட்டுற மொழிந்து கொள்க.

சொன் மாலை வேய்ந்த - பதிகத்தைத் தொடுத்துச் சாத்திய, மாலை என்றதற் கேற்ப வேய்ந்த என்றார்.

வேய்ந்த இப்பூதி - வேய்ந்ததாகிய இப்பெருஞ் செல்வம்.

நல்லோர் - அப்பூதியடிகள்.

பூதிபெற்ற நல்லோர் - பாதம் செப்பும் ஊதியம் கைக் கொண்டார் என்க. பூதி பெற்ற - பெற்றமையால் என்று காரணப் பொருட்டாகக் கொள்ள நின்றது. அரசுகள் திருப்பதிகத்தினுள் அடிமையைச் சிறப்பிக்கும் அருட் பூதியாகிய ஆசிபெற்றதனால் குருவருளை மறவாது சிந்திக்கும் ஊதியம் பெறலாயினர். "அவனருளாலே அவன்றாள் வணங்கி" என்றநிலை குருவினுக்கும் ஒக்கும். ஊதியம் - பெருஞ் செல்வம்பெற்ற பயன். இப்பாட்டிற்குப் பிறர் எல்லாம் தத்தமக்கு வேண்டியவாறே யுரைத்தனர். செப்புதல் - போற்றுதல்; "ஏத்தி" (1826) என்பது காண்க.

கை கொள்ளுதல் - திண்ணமாக - உறுதியாகப் - பிடித்தல்; விடாது பற்றி ஒழுகுதல். பாதம் - கைக்கொண்டார் - என்ற நயமும் காண்க.

43

1826.

இவ்வகை யரசி னாம மேத்தி,"யெப் பொருளு நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே" யெனவுணர்ந் தடைவார், செல்லுஞ்
செவ்விய நெறிய தாகத், திருத்தில்லை மன்று ளாடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர் நற்கழ னண்ணி னாரே.

44

(இ-ள்.) இவ்வகை...ஏத்தி - இவ்வகையாகத் திருநாவுக்கரசரது திருநாமத்தையே துதித்துக்கொண்டு; எப்பொருளும்....அடைவார் - "அடைய வேண்டிய உறுதிப்பொருள் எல்லாம் எந்நாளும் அந்த அருந்தவரின் பொற்பாதங்களேயாம்" என்று உணர்ந்து அவற்றையே அடைவாராகி; செல்லும் செவ்விய நெறி அது ஆக - செல்கின்ற செம்மையாகிய வழி அதுவேயாகக் கொண்டு, திருத்தில்லை.....நண்ணினார் - திருத்தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற, மான் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியாரது பாகத்தை யுடையவரின் நல்ல பாதங்களை அடைந்தனர்.

(வி-ரை.) அரசின் நாமம் இவ்வகை ஏத்தி என்க; இவ்வகை - எல்லையில்...பாதம் என்று முன்பாட்டிற் கூறியபடி; முன்பாட்டில் பாதம் செப்பும் ஊதியம் கைக் கொண்டார் என்றதனை ஏத்தி என்று விளக்கம் செய்தார்.

எப்பொருளும் - இறைவர் வழிபாடும், பாச நீக்கமும், சிவப்பேறுமாகிய வீடுபேறும் முதலிய எல்லா உறுதிப் பொருள்களும். நாளூம் - எந்நாளும். இன்பிலும் துன்பிலும், வாழ்விலும் சாவிலும், முதலிய எக் காலத்தும்; விழிப்பு - உறக்கம் முதலிய எந்நிலையிலும்.

தாளே எப்பொருளும் - ஆவன - என்று ஆக்கச் சொல் வருவிக்க.