கொள்ள, வந்து அடைந்த, தெருளும் உணர்வில்லாத அந்தச் சிறுமையுடையவன்யான்!" என்றனர். இது கேட்டதும் அப்பூதியடிகளின் கைகள் சிரமேற் குவிந்தன; கண்ணீரவி பொழிந்தது; உரை குழறிற்று; உடம்பெல்லாம் மயிர்க்கூச் செறிந்தது; அவர் தரையில் வீழ்ந்து அரசுகளது சரண கலம் பூண்டனர், அவரை அரசுகள் எடுத்தருளினர். அற்றவர்கள் அருநிதியம் பெற்றாற்போல அப்பூதியார் மனமுற்றும் களிப்படைந்து அவரது திருமுன்பு நின்று கூத்தாடினார்; சூழ ஓடினார்; பாடினார்; மூண்ட மகிழ்ச்சியினால் முன்செய்யத்தக்கது இன்னதென்று அறியாதே திருமனையினுட் சென்று மனைவியார் - மக்கள் - சுற்றத்தார் முதலிய எல்லாருக்கும் அரசுகள் எழுந்தருளும் மகிழ்ச்சியைச் சொல்லினர்; எல்லாரையும் உடன்கொண்டு வந்து அரசுகளை இறைஞ்சுவித்து மிக்க காதலுடன் அவரை உள்ளே எழுந்தருளுவித்தனர்; அவருடைய பாதங்களை விளக்கி அத்தீர்தத்தினை மேல் தெளித்து உள்ளும் கொண்டனர். ஆசனத்தமர்த்தினர்; உரிய பூசனைகள் எல்லாம் விரும்பிச் செய்தனர்; திருவமுது செய்தருளும்படி அவரிடம் விண்ணப்பிக்க அவரும் இசைந்தருளினர். அவர் இசைந்ததனைச் சிவபெருமான் றிருவருளாற் பெற்ற பெரும்பேறு என மிக மகிழ்ந்து அப்பூதியார், திருமனைவியாரும் தாமும் திருவமுது ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்; அறுவகைச் சுவையாலான தூய நற்கறிகளையும் திருவமுதையும் ஆக்கினர். அரசுகள் திருவமுது செய்தற்கு ஏற்ற பெரிய வாழைக்குருத்தைக் கொண்டு வரும்படி தம் மக்களுள்ளே மூத்த திருநாவுக்கரசை ஏவினார். "நல்ல தாய் தந்தையர்கள் என்னை இக்காரியத்தில் ஏவப்பெற்றேன்" என்று மகிழ்ந்து கொண்டு, அவன், தோட்டத்தினுட் புகுந்து செழிப்புடையதொரு குருத்தை அரியும்போது ஒரு பாம்பு அவன் வருந்திச் சோர்வடையும்படி அங்கையிற் றீண்டிக் கையினிற் சுற்றிக் கொண்டது. அவன் அதனை உதறி வீழ்த்திவீட்டுப் பதைப்புடனே, "இத்தீய விடத்தின் வேகத்தால் நான் வீழா முன்னர், அரிந்த இக்குருத்தைச் சென்று கொடுப்பன்; பெரியவர் திருவமுது செய்யத் தாழ்க்கும்படி நான் இச் செய்தியை யார்க்கும் சொல்ல மாட்டேன்" என்று திருந்திய மனத்தினுடன் செழுமனையிற் சென்று புக்கான்: விடம் முறையே ஏறி ஏழாம் வேகம் தலைக்கேறிற்று; பல் - கண் - மேனி - கருகின; உரை குழறிற்று; ஆவி விடும்நிலை வந்ததும் அதனை விடாமற் கொண்டு குருத்தைத் தாயர் கையில் நீட்டி நிலத்தினில் வைத்தான்; கீழே வீழ்ந்தான். பெற்றோர்கள் உளம்பதைத்து உற்று நோக்கினர்; உதிரம் சோரும் வடுவும் மேனியின் குறிகளும் கண்டு விடத்தினால் வீந்தான் என்று துணிந்தனர். அதனாற் சிந்தை சிறிதும் துளங்காதவர்களாகித் தொண்டர் அமுது செய்வதற் குரிய உபாயத்தை எண்ணினர். பெறலரும் புதல்வனைப் பாயினுட் பெய்து மூடினர். புறமனை முன்றிலில் ஒரு புடையில் மறைத்து வைத்தனர். "இது சிறிதும் தெரியா வண்ணம் அமுது செய்விப்போம்" என்று கொண்டு காலந் தாழ்க்காமல் அமுதும் கறிகளும் முதலியவை எல்லாம் அழகுற அணைய வைத்துத் தொண்டர் முன்வந்து பணிந்து "தேவரீர் திருவமுது செய்து எங்குடி முழுதும் உய்யக்கொள்வீர்" என்று வேண்டினர். அரசுகள் எழுந்து அடியிணை விளக்கி வேறோர் ஆசனத்தேறிப் பரிகலம் திருத்தும் முன்பு இல்லுடை யிருவருக்கும் திருநீறு நல்கி, ஏனைப் புதல்வர்க்கும் அளிக்கும்போதில், "இவர்க்கு மூத்த பிள்ளையையும் நீறு காத்த அழையுங்கள் என்றனர் அதுகேட்ட அப்பூதியார் விளைந்த தன்மை ஒன்றும் உரையாமல் "இப்போது இங்கு உதவான்" என்றனர்; அவ்வுரை கேட்டபோதே சிவபெருமான் றிருவருளால் அரசுகளது செவ்விய திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் சேர்ந்தது; அது கருதி அவர் அப்பூதியாரை |