சிவநெறி - இங்கு, உலகில் வழங்கும் எல்லாச் சமயநெறிகளும் அருள்நெறிகளே என்றும், பெயரால் மட்டும் வேற்றுமைப்படுவன என்றும், முடிபில் எல்லாம் ஒன்றே என்றும், நாயனார் முதலில் தமது பெற்றோர் ஒழுகிய உலக வழக்குச் சைவநெறியில் நின்று அதனில் அருள் விளங்காமையால் சமணம் புகுந்தனர் என்றும், அப்போது அவர்க்குச் சமயங்கள் பல என்ற உணர்வே மிக்கிருந்ததென்றும், பின்னர் அருள்கூட எல்லாச் சமயமும் ஒன்றே எனவும், இறைவன் ஒருவனே எனவும், முன்னர்த் தமது பெற்றோர் வழிநின்று சிவன் என்ற பெயரால் வழிபட்டதும் பின்னர்ச் சமணத்தில் நின்று அருகன் என்ற பெயரால் வழிபட்டதும் ஒரு பரம்பொருளையே சாரும் எனவும் உணர்ந்தனர் என்றும், சமயங்களுள் மெய்ச்சமயம் பொய்ச்சமயம் என்பதும் அதுபற்றிச் சமயம் மாறுதலும் அறியாமை என்றுணர்ந்தனர் என்றும், அதுபற்றியே நாயனாரது, "சலம்பூ வொடுதூப மறந்தறியேன்", "ஆறென் றியசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள் வேறொன் றிலாதன", "ஆறுசமயத் தவரவரைத் தேற்றுந் தகையன" என்பனவாதி தேவாரங்கள் எழுந்தன என்றும், மற்றும் பலவாறும் விசேட ஆராய்ச்சியுரை காண்பாருமுண்டு. இது சைவ சமயத்தின் உண்மைச் சமரச நிலையினை மயங்கிக்கொண்ட பொய்த் தோற்றங்களாகும். நாயனாரின் பெற்றோர் கொண்டொழுகிய சமயம் அருள் விளக்க மில்லாது அறிவு விளக்க மட்டும் பெற்ற உலக வழக்குச் சைவம் என்றொதுக்கப்படுவதன்று. அந்தச் சைவநெறிதான் திலகவதியம்மையார் கைக்கொண்டு ஒழுகி அருள் பெற்ற நெறி; அந்நெறியே பின்னர் நாயனார் அடைந்து அருள்பெற்ற நெறி. அதுவே நமது உண்மை ஞானநூல்களால் உரைக்கப்பட்டு இற்றைக்கும் நாம் கடைப்பிடித் தொழுகி அருள்பெற வழி காட்டும் சைவ சித்தாந்தநெறி. சமயங்களின் ஏற்றத்தாழ்வும், சமண சமயத்தின் பொய்ம்மையும் கண்டதனாலன்றோ நாயனார் பின்னர் அச் சமயத்தினின்றும் மாறிச் சிவநெறியினை அடைந்து அதிலே நின்றொழுகினார்? அவ்வாறொழுகியது மட்டுமேயன்றித், "துன்னாகத் தேனாகித் துற்சனவர் சொற்கேட்டு" (காந்தாரம் - ஆரூர் - 5) "கதியொன்று மறியாதே" (மேற்படி 7) அமணர்கட மறவுரைகேட்டலமந்தேன்" (பழந்தக்கராகம் - ஐயாறு - 1), "குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்டமாலைத், துண்டனே" (திருநேரிசை - ஐயாறு 1), "மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்த நோய், துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி" (திருவிருத்தம் - ஐயாறு - 8), "திருந்தாவமணர்தந்தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி, தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன்" (மேற்படி பாதிரிப்புலியூர் - 10), "அமணர்சொற் றிடா மென்று துரிச பட்டேன்" (மேற்படி ஆரூர் - 2), "பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்டு" (மேற்படி - மேற்படி 7), "சமணரைவிட்டு டுய்யு நெறிகண்டிங் குய்யப் போந்தேன்" (மேற்படி - மேற்படி - 9), "அடியிணையே யணைந்து வாழா, திருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட், டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே" (ஏழைத்திருத்தாண்டகம் - திருவதிகை - 5) என்பனவாதி தோவாரங்களால் பொய்ச்சமய நிலையும், மெய்ச்சமய நிலையும், மெய்யினை அடைந்து தாம் பெற்ற பேற்றினையும் அறிவித்தருளி உண்மையினைப் புகட்டுகின்றார். சமயங்கள் பலவும் உயிர்களின் பக்குவ வேறுபாடு கருதி வெவ்வேறாக வகுக்கப்பட்டன. அவை ஒன்றாகா. உயிர்கள் யாவும் பக்குவபேதமின்றி ஒரு தன்மைப்பட்டன வாயின் அன்றோ அவர்க்காக வகுக்கப்பட்ட சமயங்களும் ஒன்றாகும்?"சைவ முதலாமளவில் சமயம் வகுத்து" என்றனர் தாயுமானவர். "அவ்வவர்க்கு அப்பொருள்கள் வேறொன் றிலாதன", "அவரவரைத் தேற்றுந் தகையன" என்றற் றொடக்கத்த தேவாரங்கள் உயிர்களின் பக்குவபேதம் நோக்கி அவ்வர்க்கும் |