பக்கம் எண் :


104திருத்தொண்டர் புராணம்

 

தக்கவாறு வெவ்வேறாக நின்று தாம் ஒருவரே அங்கங்கும் உணர்த்துவார் என்ற பொருள் தருவனவன்றி எல்லாச் சமயங்களின் தோற்றமும் ஒன்றே என்ற பொருள் தருவன வல்ல. இவைபற்றி முன்னர் "நம்பரரு ளாமையினால்" (1302) என்றவிடத்தும், 1335-ல் "கூற்றா யினவாறு" என்ற தேவாரக் குறிப்புக்களிலும், பிறாண்டும் உரைத்தவை பார்க்க. "எண்ணரிய சமணர்களுமிழி தொழில்சேர் சாக்கியரு மென்றுந் தன்னை, நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார் கருள்புரியு நாதன்" முதலிய திருவாக்குக்களும் காண்க.

பன்னு தொன்மையிற் பாடலிபுத்திர நகர் - கௌதமபுத்தன் காலத்தில் அமைக்கப்பட்டு அசோகன் முதலிய பௌத்த மன்னர்களின் தலைநகராகியது வடநாட்டுப் பாடலிபுத்திரமென்னும் பௌத்தரது பெருநகரம்.அதன் நினைவின்படி இங்குத் தாபிக்கப்பட்டதனால் பன்னுதொன்மை என்றார். பன்னுதொன்மையாவது தொன்மையுடைய அதுபோல இதுவுமாம் என்று பேசப்படுதல். தொன்மை பன்னு - நகர் என்க.

புன்மையே புரி - புன்மை - இழிசெயல். புரிதல் - செய்தல். இடைவிடாது சொல்லுதல் என்றலுமாம். புன்மை சொல்லுதல் பின்சரித நிகழ்ச்சிகளாலறிக. 1348, 1352, 1354, 1360, 1367, 1368, 1372, 1373, 1386, 1387 பார்க்க.

பொறாராய் - அகிம்சை, பொறுமை முதலிய அறங்களை உரைத்தாரேனும், அப்பொறுமையைத் தாம் கைக்கொள்ளாராகி என்பதாம். தமது சமயத்தில் எவ்வாகையாலும் நீங்காத இடரினைத் தருமசேனர் சைவத்திற்சென்று தீரப்பெற்றனர் என அறிந்தபோது, பிற உயிர்களின் சேமநலங்கண்டு மகிழவேண்டிய சமயக் கோட்பாடு உடைய அவர், அதற்குமாறகப் பொறாமை கொண்டனர் என்று குறிக்க அமணர் தாம் கேட்டு அது பொறாகி என்றார். "முந்தைய வுரையிற் கொண்ட பொறைமுத லவையும், விட்டுச், சிந்தையிற் செற்ற முன்னாந் தீக்குணந் தலைநின் றார்கள்" என்ற திருஞான - புரா - 634 - பார்க்க. "குணம் பிறிதாதல் கெடுவது காட்டுங் குறி" என அவர்கள் கேடுபட்டொழியும் காலமாதலால் அவ்வாறு மாறுபட்டுப் பொறாமை கொண்டனர் எனவும், "கொல்லாமை" எனும் போர்வையினுள் மறைந்து நின்று அவமே புரிவோர் எனவும் கொள்ள நின்றது. 1346 பார்க்க.

79

1345. (வி-ரை.) தருமசேனர் - சமணர்கள் தங்களுடைய கூட்டத்தில் அவர்க்கு வழங்கிய பெயரால் நினைக்கின்ற இயல்பில் உரைத்தது காண்க.

அத் தடுப்பரும் சூலை - அகரம் - முன்னறிசுட்டு. தடுப்பரும் - 1319 பார்க்க. "போவார்க ளிதுநம்மாற் போக்கரிதா மெனப்புகன்று" என்று கைவிட்டாராதலால் இங்கு ஒருவராலும் ஒழிந்திடாமையின் என்றனர்.

உய அவர் போய் என்க. தாம் உய்வதன்றி அரசனும் உலகமும் உய்ய என்ற குறிப்பும் காண்க.

போய்ச் சைவராய்ப் பெயர்ந்து - போதல் - சமணத்தைவிட்ட நிலையினையும், பெயர்தல் - சைவராகமாறித் தொடர்ந்த நிலையினையும் உணர்த்தின.

பிணி ஒழித்து - பிணி நோய், பிணிப்பு - தொடங்கு என்றலுமாம். "பேராத பாசப் பிணிப்பொழிய" (1307) என்றது காண்க.

பெருகுசைவர் - என்றும் தாழ்வுறாது ஓங்கும். மேல்வருஞ் சரிதக்குறிப்பு. பெயர்தல் - இங்கு மீண்டும் முன்போலவே சைவராயின தன்மை குறித்ததுடன் பெருகு என்றதனால் முன்போ லன்றி அதனிற் பெருகி மிக்க தன்மையுடன் சமய ஆசாரியத் தன்மை வாய்ந்தவராய் என்றது குறிப்பு.