1851. (வி-ரை.) நீடுசீர் - என்றது ஆளுடைய பிள்ளையாரைக் கண்டு உடன் பணிசெய்து ஒழுகுதற்கு முன்னும் சிறப்புடையவராய், அதன்பின்னும் மேலும் பெருஞ்சிறப்புப்பெற உள்ளவராய் நின்ற சிறப்பு. நீடு - முன்னும் பின்னும் நீடும். தோடுலாங்குழல் - தோடு - இதழ் - இதழ்களையுடைய மலருக்காயிற்று. உலாம் - விளங்கும்; குழல் - கூந்தல். விறலியார் - பாணியார். விறலி - பாணர் மரபுப் பெண் என்று சாதிப் பெயராய் வருவது அகப்பொருள்களுட் காண்க. இங்கு விறலியார் என்றது திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய மனைவியாராகிய மதங்கசூளாமணியாரை. பாணர் - பாணர் மரபில் வந்தவர் என்று மரபுபற்றி யுணர்த்தியது. பரணி - அதன் பெண்பால். பாடினி என்பது வழக்கு. பாணர் விறலியாருடன் வர - பிள்ளையாரது திருப்பதிகங்களைக் கண்டத்திலும் கலத்திலுமாக இயற்றி வாசித்துக்கொண்டு, நாயக நாயகியாகக்கூடி, அத்திருக்கூட்டத்தில் முன்வருவோர்கள் இவர்களாதலின் இவர்களை முன் ஒருசேர வைத்து உடன் வர என்று பிரித்தோதினார். பாடற்றிறமும் அடிமைப் பண்பும் கூடாதவழி இவர்கள் அத்திருத் கூட்டத்தினுட் சேர்ந்து உடன்வரும் இயைபின்மையும் கருதுக. தொண்டர் கூடும் அப்பெருங்குழாம் - என்ற கருத்தும் காண்க. தொண்டர் கூடும் அப்பெருங்குழாம் - பிள்ளையாரது எண்ணிறந்த பரிசனங்களும் உடன்வரும் தொண்டர்களும் அங்கங்கும் கூடும் அடியார்களுமாகிப் பெருந் திருக்கூட்டமாயிற்று. புகலியர் பெருமான் - சீகாழித்தலைவராகிய திருஞானசம்பந்த நாயனார். புகலி சீகாழியின் 12 திருப்பெயர்களுள் மூன்றாவது பெயர். மாடு வந்தனனை:- -தமது சந்நமங்கை நகரத்தின் பக்கதில் வந்த செய்தியினை நீலநக்கர் (1851); கிளர்ந்து - புனைந்து - நாட்டி - இட்டு - கொடு - எழுந்தார் - (1852), ஒன்றி - எதிர்கொண்டு - ஆடியும் பாடியும் தொழுதெழுந்து - அணைவார் - உடன்கொடு புகுந்தர் (1853) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க. கேட்டபொழுது முதல் உடன்கொடு புகுந்த வரையில் திருநீலநக்கர் தம் செயல்களை இடையீடின்றித் தொடர்ந்து செய்வாராய்ப், புகுந்தபோது வினைமுடிபு கொண்டனர் என்று குறிக்கத் தொடர்ந்து வினையெச்சங்களாற் கூறி ஒன்றாக முடித்த நயம் காண்க. 24 1852. (வி-ரை.) கேட்ட அப்பொழுதே கிளர்ந்து - பலநாள் எதிர்பார்த்துத் தியானித்திருந்த பொருள் தானேவந்து கைகூடியதனால் கேட்டபொழுதே ஒரு கணமும் தாழாமல் எதிர்கொள்ளும் சிறந்த செயல்களிற்றலைப்பட்டு, அதன் பயன்பெற முயன்றனர். கேட்டசெய்தியில் அவர்கொண்ட அன்பின் உறைப்பு வெளிப்பட்டது என்க. "உரைப்பக் கேட்டார்" (1442), "விருப்பு வாய்ப்ப" (1443), "அப்பொழுதே யம்பலத்து ளாடுகின்ற கழல் வணங்கி அருள்முன் பெற்று (1444) என்ற விடத்து அப்பர் சுவாமிகள்பால் நிகழ்ந்த செயலின் தன்மை இங்கு வைத்துக் காணத்தக்கது. கிளர்தல் - உருப்பெற்று வெளிப்பாடு பெறுதல். தோட்டலங்கல் - தோடு - இங்குத் தோடுகளையுடைய மலர்களைக் குறித்தது. ஆகுபெயர். தோடு - மலரிதழ்; அலங்கல் - மாலை. அலங்களும் கொடிகளும் புனைந்து தோரணங்களும் நாட்டி - என்றது தோரணங்களில் இடையிடையே மலர்மாலைகளையும் கொடிகளையும் புனைந்து நாற்றுதல் குறித்தது. |