பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1051

 

வென்பா ராகுதிகள்" (1064); "இப்பரிசா யிருக்கவெனக் கெய்தலரிது" (1065) என்று நகரத்தினுட் புகாமல் மதிற்புறத்தில் வலங்கொண்ட திருநாளைப்போவார் செய்தி இங்கு நினைவு கூர்தற்பாலது. களநிலவு நஞ்சணிந்தார் பாலணையுங் கவுணியனார் பாணனாரை அவர் மரபுக்கேற்றவாறு கோயிலினிற் புறமுன்றிற் கொடுபுக்குக் கும்பிடுவித்தருளினர் (2031 - 2032) என்புழிப்போல வருமிடங்களும் ஈண்டுக் கருதற்பாலன.

திருமறையோர் - மரபினும் அன்பின் பெருமை சிறந்தது என்று கூறும் மறையின் கருத்தை உணந்தவர் என்பது குறிப்பு.

யாழ்ப்பாணர் - என்பதும் பாடம்.

30

1858. (வி-ரை.) அறாத செந்தீ...ஒளிர - இடையறாது வளர்ந்து வரும் தீ, தனது நித்திய நிலையினின்றும் பலவகையாலும் மேலும் ஓங்கிவிளங்க. தீ - ஒளிர்தல் மேல் ஓங்கிச் சுடர்விட்டு எரிதல். ஒருபடித்து அன்றியே ஒருவகையா னன்றிப் பலபடியாலும் பலபடிகளாவன - உயர்ந்து - எரிதல் பரிந்து எரிதல் கழித்து எரிதல் - மிக்கு எரிதல் முதலாயின. அறாதசெந்தீ - என்றும் அவியாது காத்து வளர்க்கப்படும் தீ. நித்தியரக்கினி என்பது இவை அக்வனீயம் காருகபத்தியம் - தட்சிணாக்கினி என மூன்றாம். "மூன்றெரி புறப்போர்" மறையவர் மணவேள்வியில் ஏற்ற தீயைச் சாங்காறும் அவியாது காத்துவருதல் வேண்டும் என்பதும் இறந்தபோது அதனாலே எரிக்கப்படுதல் வேண்டுமென்பது விதிகள்,. பிற ஊர்களுக்குச் செல்லும்போது தீயையும் உடன்கொண்டு காத்துச் செல்வர். "புகைவிடும் வேள்விச்செந்தீயிலல் லுடன் கொண்டு போவார்" (திருஞான - புரா - 1202) என்று, ஆளுடைய பிள்ளையார் திருமணங் காண உடன்செல்லும் மறையவர்கள் மனைவியார்களுடன் தாம் வளர்க்கும் தீயினையும் கொண்டு செல்வர் என்பது காண்க.

ஒளிர - அறாத செந்தீ இவ்வாறு முன்னையினும் ஒளிர்தல் பாணரது அடிமைத்திறமும் பாணியாரது கற்பின்றிறமும் என்றிவற்றின் மிகுதிப்பாட்டின் தொடர்பாலாகியது.

தீ வலஞ் சுழிவுற்று எழுதல் - நன்மையைக் குறிக்கும் என்ப. இடஞ்சுழித்தெழுதல் தீ நாற்றமுண்டாதல் முதலியவை தீமைகுறிக்கு மென்றும் கூறுப. ஓங்குதல் - மேலெழுதல்.

தாங்கு நூலவர் - திருநீலநக்கர். மறையவர்கள் என்று பொதுமை குறித்ததெனினுமாம். மகிழ்வுறுதல் ஓங்கி வலஞ்சுழித் தெழுந்ததனால் இச்செயல் திருவருள் வழியே நிகழ்ந்ததென்று அறிந்த மனமகிழ்தல். அருளால் பள்ளிகொள்கின்றார் - என்ற குறிப்புங் காண்க. நூலவர் - நூல்வழியே உணர்ந்தார் என்ற குறிப்புமாம்.

சகோடயாழ்த் தலைவர் திருநீலகண்டப்பாணர் சகோடயாழ் என்பது நால்வகை யாழினுள் ஒன்று; அவை பேரியாழ், மகரயாழ், சகோடயாழ் செங்கோட்டியாழ் என்பன. சகோடயாழ் பதினான்கு நரம்புகளுடையது. இதனையே திருநீலகண்டப்பாணர் கைக்கொண்டு இதில் இசைவல்லவராய் விளங்கினர். அவ்வியல்யெல்லாம் அவர் புராணத்துள்ளும், ஆளுடைய பிள்ளையார் புராணத்துள்ளும், பிறாண்டும் கண்டுகொள்க. தலைவர் - வல்லவர் என்ற பொருளில் வந்தது.

பாங்கு - நீலநக்கர் இடம்கொடுத்த நடுமனை வேதியின்பாங்கர். பாங்கு தமது பக்கத்தில் என்றலுமாம். அமரும்பாங்கில் பள்ளிகொண்டார் என்று கூட்டியுரைத்தலும் பொருந்தும்.

அருளாற் பள்ளிகொண்டார் - இந்நிகழ்ச்சிக்குத் திருவருளே காரணமாம் என்றது. "வேண்டி நீயா தருள்செய்தா யானு மதுவே வேண்டினல்லால்" (திருவா). பள்ளிகொள்ளுதல் - துயிலுதல்.

31