தொழிலையும் போக்குவன்; இனி, வேறு நாம் என்ன செய்வோம்?" என்று வஞ்சனை தேர்ந்து புனைவார்களாகி, 82 1348.(இ-ள்.) வெளிப்படை. "தமக்கையார் சைவத்தில் இருத்தலினாலே, தருமசேனரும் தாம் பொய்யாக உண்டாக்கிக் கொண்டதொரு சூலை நோய் இங்குத் தீர்ந்திலது என்று இங்குக் கெடுதி யுண்டாக அங்குச் சென்று அதனால் நமது சமயலங்கனமும் நம் தெய்வ நிந்தையும் செய்தார்" என்று சொல்வோ - மென்று தெளிந்து கொண்டார்கள். 83 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. 1347. (வி-ரை.) இவ்வகை - முன் இரண்டு பாட்டுக்களிலும் கூறியபடி. அமணர்கள் பலரும் - என்க. அமணர்கள் - சமணகுருமார். "அடிகண்மார் எல்லாரும்" (1351) என்பது காண்க. முற்றும்மை தொக்கது. துயருடன் ஈண்டி - இச்செய்தியினைக் கேட்டவுடன் சமணகுருமார் ஒவ்வொருவரும் தாம் தாம் துன்பமுற்றனர் என்பதும், அத்தகைய துன்பத்துடனே வந்து கூடினார் என்பதும் கொள்ளப்படும். மெய்வகைத் திறம் - நிகழ்ந்த செய்தியினையும், அதனால் உணரப்படும் உள்ளுறையினையும். திறம் - உள்ளுறை. உள்ளுறையாவது சமணம் பொய் யென்பதும் சைவம் மெய் என்பதுமாகிய இரண்டுமாம். வெகுண்டு - நமது சமயத்துக்கு இல்லாத திறத்தை உள்ளதென்று காட்டிப் பொய்ம்மைசெய்து இதுவரை ஏமாற்றி மயக்கினதன் பொருட்டு வெகுள்வான் என்பது. மக்களைப் பொய்சொல்லி ஏமாற்றுதல் குற்றமென்பது அரசநீதயாதலின்அரசன் அதுபற்றி வெகுள்வான் என்றஞ்சினர்."பொய்யினால் மெய்யையாக்கப் பகுந்த நீர் போமின்" (திருஞான - புரா - 792) என்று கூன் பாண்டியர் வெகுண்டது காண்க. சைவனாகி நம் விருத்தியும் தவிர்ப்பன - மெய்வகை தெரிந்துகொள்வதனால் இதுவரை தான் மெய் என்று நம்பியிருந்த பொய்ச்சமயத்தை விட்டு, உண்மை என்று கண்ட சைவத்திற் சார்ந்து, சைவனாவது அரசன் செய்யக்கூடிய முதற்செயல் எனவும், அதனை அடுத்து, அவ்வாறு பொய் சொல்லி மயக்கிய தொழிலால் அவனது ஆதரவு பெற்று இதுவரை வாழ்ந்த நமது விருத்தியைத் தவிர்த்தல் அவன் செய்யும் இரண்டாவது செயல் எனவும் துணிந்தனர் என்பது. விருத்தி - சீவனோபாயம். கொடுத்து வந்த பொருள் என்றலுமாம். "உடல் விருத்தி தாரீரேல்" என்ற நம்பிகள் தேவாரம் காண்க. மற்று இனி நாம் செய்வது என்? என மருள்வார் - அவ்வாறு இரண்டும் நிகழ்ந்தால் நமக்குப் பிழைப்புக்கு வேறுவழி யாது? ஒன்றுமில்லை என்பதுபற்றி மயக்கமடைந்தனர் என்க. அரசன் உண்மை அறிந்து தம்மினின்று மாறிவிட்டால் அந்நாடு முற்றிலும் தாம் துறக்கநேரிடும் என்றுணர்ந்து மருண்டனர். தண்டியடிகள் புராணவரலாறுங் காண்க. வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் - தெரிதலாவது - வஞ்சிக்கும் வகை பலவற்றுள்ளும் எது தக்கதென்று தேர்தல்; ஆராய்தல். வஞ்சனை - உண்மையை அறிந்து கொள்ள முடியாதவாறு உபாயம் செய்தல். சித்திரித்தல் - இல்லதை உள்ளது போலவும், உள்ளதை இல்லதுபோலவும் காட்டவல்ல சாதனம் பலவற்றுள்ளும் சிறந்தது சித்திரம் என்ப. "ஓவியப்புலவன் சாயல்பெற வெழுதிய, சிற்பவிகற்ப மெல்லா மொன்றித், தவிராது தடவினர் தமக்குச், சுவராய்த் தோன்றும் துணிவு" என்ற பட்டினத்துச் சுவாமிகள் திருவாக்கும் காண்க. |