பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்107

 

சித்திரித்தல் என்பது இங்குப் பொய்யுரை புனைதல் என்ற பொருளில் வந்தது. குறிப்புருவகம். "சித்திரம் பேசேல்" என்பது காண்க.

சித்திரிப்பார் - சித்திரிப்பாராகி. எதிர்கால முற்றெச்சம். சித்திரிப்பார் - சொலத்தெளிந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

82

1348.(வி-ரை.) தவ்வை - தமக்கை - முன்பிறந்தவள். தருமசேனரும் - அமணர் தமது சமயத்து வழங்கிய பெயராற் கூறும் அமைதி காண்க. 1345-ம், 1352-ம் பார்க்க. உம்மை அவருடன் தாமும் என எண்ணும்மை. சிறப்பும்மை என்றலுமாம்.

தாம் பொய்வகுத்ததோர் சூலை - பொய்யாகத் தாமாக வகுத்துக்கொண்டதாகிய ஒரு சூலை; ஓர் - ஒரு காரணத்தின் பொருட்டுப் புனைந்ததொரு என்பது குறிப்பு. ஓர் - நினைத்த - எண்ணிய - என்ற குறிப்பும்பட நின்றது.

இங்குத் தீர்ந்திலது என - இங்கு - நமது சமயத்திற்கொண்ட மணி, மந்திரம், மருந்து என்பவற்றால், என -என்று பாவனை காட்டி. எவ்வம் - கபடம் என்பாரு முண்டு.

இங்கு - அங்கு - சமணர் தமது சமயத்தை இங்கு என அண்மைச் சுட்டினாலும், தமக்கு வேறாகிய சைவத்தை அங்கு எனச் சேய்மைக் சுட்டினாலும் கூறிய இயைபும் குறிப்பும் காண்க. இங்கு - பாடலிபுத்திரத்தையும், அங்கு - திருவதி கையினையும் என இடங்குறித்த சுட்டுக்களாக வைத்த இயையும் காண்க.

இங்கு எவ்வமாக - இவ்விடம் நமது சமய நிலைகள் கேடுறும்படி என அவர்கள் வாக்கிலேயே வருவதாகிப் பிற்சரிதக் குறிப்பாகிய அவச்சொல்லாவதும் கருதுக. "சமயம் வீழ்ந்தது" (1345), "அழிந்தது" (1346) என்றவையும் காண்க.

சமயலங்கனம் - தெய்வநிந்தை - லங்கனம் - விடுத்தல். சமயலங்கனம் - சமயவரம்பைத் துறத்தல். நம் என்பதனைத் தெய்வநிந்தை என்பதுடனும் கூட்டுக. இவையிரண்டினையும் அரச தண்டனைக்கும் உரிய பெரும்பாதகமாகக் கொள்வதும், இவற்றுக்காகக் கொலைபுரிதல் முதலியனவும் அறச்செயலாகக் கொள்வதும் சமணர்களது சமயமரபு. இந்நாளில் அரசாங்க நீதிமுறையில், விலக்கிய குற்றஞ் செய்தோரை, அவர் செய்த செயலைக்கூறிச், சட்டப்படி அது இன்னவகையிற் குற்றமாவது என்று எடுத்துக் கூறுவதுபோலத் தருமசேனர் சைவத்திற் போயின செயல் இந்த இரண்டு வகையிற் குற்றமாவன என்று வகுத்துச் சொல்லத் தெளிந்து கொண்டனர்.

தெளிந்தார் - வஞ்சனைகளுள் எது செய்யத்தகுவது என்று தெரிந்து தேர்ந்த அவர் இது செய்வோம் எனத் தெளிந்தனர். தேர்தல் - ஆராய்ச்சி. தெளிதல் - முடிபு. பொய்புரிவோர் தமது பொய்ம்மையைப் பிறர்மேற் சார்த்திப் புனைதல் உலகியல்பிற் பலமாக்களிடம் காணலாம்.

வந்தெய்தி - என்பதும் பாடம்.

83

1349.

 சொன்ன வண்ணமே செய்வது துணிந்ததுன் மதியோர்
"முன்ன நாஞ்சென்று முறைப்படு வோ"மென முயன்றே,
 இன்ன தன்மையி லிருட்குழாஞ் செல்வது போல
 மன்ன னாகிய பல்லவ னகரில்வந் தணைந்தார்.

84

(இ-ள்.) வெளிப்படை. சொல்லியபடியே செய்வோம் என்று துணிந்த துன்மதியவர்களாகிய அந்தச் சமணர்கள், "நாம் முன்னர்ச்சென்று அரசனிடம் முறை கூறுவோம்" என்று முயற்சித்து, இத்தன்மையில் இருட்கூட்டம் செல்வது போலச் சென்று, அரசனாகிய பல்லவனது நகரத்தில் வந்து சேர்ந்தனர்.