பக்கம் எண் :


108திருத்தொண்டர் புராணம்

 

(வி-ரை.) சொன்ன வண்ணமே செய்வது துணிந்த - சொன்ன - கெடுமதி தமக்குப் புகட்டிய - தெளிவு படுத்திய. துன்மதியோர் என்ற குறிப்புமது. ஏகாரம் தேற்றம். செய்வது துணிந்த - என்றதனால் அவ்வாறு செய்யத் துணிதல் தகுதியற்ற பெருங்கொடுமை என்பதும், மிகக் கொடியவர்களேயன்றிப் பிறர் துணியார் என்பதும்குறிப்பு. துணிதற் கருமையுணர்த்திற்று. மனந்துணிபு பெற்றாலும் அதன்படி சொல்லுதற்கும் செய்வதற்கும் மிக்க முயற்சி வேண்டப்படுமென்பார் முயன்றே எனப் பின்னரும் ஏகாரம் தந்து கூறினார்.

துன்மதியோர் - கெடுமதியா லிதுசெயத் துணிந்தார் என்பது. "துற்சனவர் சொல்லே கேட்டு" என்ற நாயனார் திருவாக்குங் காண்க.

இன்னா...போல - உவமைநயம் கருதுக. உருவம்பற்றி எழுந்த உவமம். "காரிருண்ட குழாம்போலும் உருவுடைய காரமணர்" (1365) என்பது காண்க. "அமணென்னும் வல்லிருள்" (திருஞான - புரா - 652), "இழுது மெய்யிருட்கிருளென வீண்டினர்" (மேற்படி 678) என்பனவும் கருதுக. பொருள்களின் உண்மைநிலைகாணவொட்டாது மறைத்தலால் வினையும் உருவம்பற்றி விரவிவந்த உவமமென்றலுமாம். "ஒருபொருளுங் காட்டா திருள்" என்ற ஞானசாத்திரமும் காண்க. இருட்குழாம் செல்வது - தற்குறிப்பேற்ற அணி. வஞ்சனையினை உள்ளே கொண்டு வெளியே விளங்கத் திருநீறு முதலிய சிவசாதனம் பூண்ட முத்தநாதனுக்கு இருளும் விளக்கமும் கொண்ட "மைபொதி விளக்கினை" உவமித்ததனையும், இங்கு, வஞ்சனை யொன்றே கொண்ட சமணர்க்கு இருள் ஒன்றனை உவமித்ததனையும்
உன்னுக.

பல்லவன் நகர் - பாடலிபுத்திரத்தில் தங்கும் இடம். அந்நகர் பெரிதாக அமைக்கப்பட்டிருந்தமையால், அரசனது அரண்மனை முதலிய அமைப்புக்கள் வகுத்த இடம் வேறு; சமணர்களின் பாழி பள்ளிகள் உள்ள இடம் வேறு; குடிகள் முதலியோர் தங்கும் இடம் வேறு - என இருந்தமையால், அந்நகர்ப் புறத்துப் பள்ளிகளில் இருந்த அமண குருமார் அந்நகரில் மன்னவனது உள்நகரில் வந்தணைந்தனர் என்றறிக. "பதியணைந்து சமண்பள்ளி" (1303), "பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு" (1411) என்றவை காண்க. நகர் - அரண்மனை என்பர் நச்சினார்க்கினியர்.

84

1350.

உடையொ ழிந்தொரு பேச்சிடை யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயல்கா வலருக்கு "நாங்கள்
அடைய வந்தவை யரசனுக் கறிவியு" மென்ன,
இடைய றிந்துபுக் கவருந்தம் மிறைவனுக் கிசைப்பார்.

85

வேறு

1351.

"அடிகண்மா ரெல்லாரு மாகுலமாய் மிகவழிந்து
 கொடிநுடங்கு திருவாயிற் புறத்தணைந்தா" ரெனக்கூற,
 வடிநெடுவேன் மன்னுவனு மற்றவர்சார் பாதலினாற்
 கடிதணைவா னவர்க்குற்ற தென்கொ"லெனக் கவன்றுரைத்தான்.

86

1350. (இ-ள்.) வெளிப்படை. உடையில்லாதவர்களாயும், உண்ணும்போது ஒன்றும் பேசாது நின்றுண்பவார்களாயும் உள்ள அச் சமணகுருமார், அரசனது அரண்மனைவாயிலை யடைந்து, அவனுடைய வாயில்காவலருக்கு, "நாங்கள் ஒன்று கூடி வந்த செய்தியை அரசனுக்கு அறிவியும்" என்று சொல்ல, அவ் வாயில் காவலர்களும் ஏற்ற சமயம் அறிந்து உட்புக்குத் தம் அரசனுக்குச் சொல்வார்களாகி,

85