அளந்து காட்டும் உரை ஆணிபோல இயல்பாற் பெருமையுடைய அடியார்களின் தொண்டின் றிறங்களை அளந்து காட்டுபவர் என்பது. "நமிநந்தி யடியார்க்கு மடியேன்" என்று தொகை நூலுட் கூறியது மிக்கருத்து. "ஆணியை" (கோயில் - குறுந்.) | "ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரு ரகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்தரம் பாற்படுத்தான் நாரூர் நறுமலர் நாத னடித்தொண்ட னம்பிநந்தி நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே" | (தேவாரம்) நாயனாரது சரித வரலாற்றுக்கு இத்தேவாரம் பேராதரவு தருவது காண்க. திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமை - இறைவரைப் போற்றும் தேவாரத்தினுள் எந்தம் பரமாசரியர்களால் வைத்துப் பாராட்டப்படுதல் மிகப் பெரும் பேறாகும்; இறைவரது பெருமைகளை யன்றி வேறொன்றும் போற்றாத மெய்த்திருவாக்குக்கள் அவையாதலின். "அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (திருஞான - புரா. 1088); "பிள்ளையார்தந் திருவாக்கிற் பிறந்தலாலே சிவமே கூடின"(திருஞான-புரா983) முதலியவையும், பிறவும் கருதுக. இந்நாயனாரைத் திருநாவுக்கரசர்போலவே, ஆளுடையபிள்ளையாரும் தமது தேவாரத்தினுட் பாராட்டி யருளியமையும் இங்குக் கருதத்தக்கது. "தாவியவ னுடனிருந்தும் காணாத தற்பானை யாவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே" என்றதனுள் இவருடைய சீலமும் அன்பின் உரைப்பும் பேசப்பட்டன காண்க. "உணர்வொழியா வின்பமெய்தினார்" (1870); "விண்ணோர் பெருமான் கழனினைந்து, தூயவன்பர் துயில்கொண்டார்" (1891); முதலியவை இத்தேவாரக் கருத்தின் விரிவாகுமென்க. ஏறு சிறப்பின் - என்பதும் பாடம். 31 1897. (வி-ரை.) எல்லாவுலகும் தொழ - உலகமெல்லாந் தெரிந்து பின்பற்றித் தொழுது உய்ய. திருவீதி வருவார் திருவாரூர் மன்னர் - வீதிவிடங்கப் பெருமாளாகிய தியாகேசர். பாதநீழல் வளர் பொற்சோதி மன்னினார் - "மன்ன"ரைத் தமது ஆன்மநாயகராகக் கொண்டு வழிபட்டாராதலின் அவர் திருவடியிற் சிவவொளியில் கூடினார். அவரை ஆன்ம நாயகராகக் கொண்டு நியதியாக வழிபட்டடமை "பூசனைக்கு வருவார்போல" (1892) என்றதனாற் காண்க. நீழல் - சோதி - பிறவி வெம்மையினை மாற்றுதலின் நீழல் என்றும், அறியாமையைச் செய்யும் மூலமாகிய ஆணவ இருளை மாற்றுதலின் சோதியென்றும் உருவகித்து உபசரிப்பது மரபு. "சுழலால் துயர்வெயிற் சுட்டிடும் போதரடித் தொண்டர் துன்னு, நிழலாவன" (தேவா). இவை வெவ்வேறு தன்மை குறித்தலின் தம்முள் முரண்படாமை உணர்க. மன்னுதல் - மீளாது நிலை பெற்று நிற்றல். 32 |