நன்னாள் - நல்ல நாளில்; மீட்டார் - மீட்டவராகிய ஆளுடைய நம்பிகளுடைய; கழல்கள் - திருப்பாதங்களே; நினைவாரை...மீட்பனவே - தம்மை நினைவார்களை மீளாவழியினின்று மீட்பனவாம். (வி-ரை.) நாட்டாரறிய என்பது நாட்டார் அறிய - உலந்த என்றும், நாட்டாரறிய - மீட்டார் என்றும், நாட்டாரறிய - மீட்பன என்றும் தனித்தனி கூட்டி உரைக்க நின்ற முதனிலைத்தீவகம். நாட்டார் - அருள் நாட்டமுடையவர்கள் என்றலுமாம். நன்னாளின் - மீட்டார் - என்று கூட்டுக. இவ்வாறன்றி, நன்னாளுலந்த என்று வைப்பு முறையின்படியே கொண்டு, இறந்தது இறந்தபடியே ஒழியாது முன்போல மீள நன்கு வந்து வாழ்தற்கேது வாயினமையாலும், ஏனையோர்போலப் பிரமனாற் படைக்கப்படாது சிவனருள் வழியே சிவசிருட்டியாய் வந்தமையாலும், சிவனருள் விளைவுக்குக் கருவியாய் நின்றமையாலும் அவன் உலந்தநாள் நன்னாள் எனப்பட்டது என்றலுமாம். ஐம்படையின் பூட்டு ஆர் - ஐம்படை - ஐம்படைத்தாலி - "ஐம்படைச் சதங்கை சாத்தி" (150); பூட்டு - பூணுதற்குரிய அணி. பூட்டு - பூட்டப்படுவது. ஆர் - பொருந்திய. சிறியமறைப் புதல்வன் - ஐந்து வயதுடைய வேதியச் சிறுவன். புக்கொளியூர் - திரு அவிநாசி என வழங்குவது; புக்கொளியூர் - ஊர்ப்பெயர், அவிநாசி என்பது அங்கு எழுந்தருளிய இறைவர் பெயர். "புக்கொளியூர் அவிநாசியே!" (தேவா.) மீட்டாரது கழல்கள் தம்மை நினைவாரை மீட்பன என்க. மீளா வழியின் மீட்பன - மீளாவழி - மீளாப் பிறவி வழி - மீளா என்பது தொலைக்க முடியாத - மீளுதல் எளிதில் அமையாத என்க. நெறியினின்றும் மீட்பன - இன் - நீக்கப்பொருளில் வந்த ஐந்தனுருபு. முதலை வாயின் மறைச் சிறுவனை மீட்டாராதலின் அதுபோல முதலையைப் போன்று விடாது பற்றிக்கொண்டிருக்கும் பிறவி வாயினின்றும் உயிர்களை மீட்பர் என்பது குறிப்பு. "மூல மலமெனுமோர் வெங்கரவின் பகுவாயி னின்றும்" என்று இக்கருத்தையே வைத்துப் பிற்கால ஆசிரியர் சிவப்பிரகாசர் தமது நால்வர் நான்மணிமாலையிற் போற்றுதல் காண்க. இவ்வரலாறு வெள்ளானைச் சருக்கத்துள் 4 முதல் 14 வரை உள்ள திருப்பாட்டுக்களால் விரிக்கப்படுவதாம். இச்சருக்கத்தினுள் பெரும்பான்மை நின்றமைபற்றித் திருநாவுக்கரசு நாயனார் புராணம் அப்பூதிநாயனார் புராண வரலாறுகளாற் போந்த உள்ளுறையைத் தொடர்ந்து கொண்டது இத்திருப்பாட்டு. 33 ______ சரிதச் சுருக்கம் :- சோழவள நாட்டில் வளமிக்க ஊர்களுள் ஒன்று ஏமப்பேறூர் என்பதாம். அது அருமறை தூல் வாய்மை ஒழுக்கத்தின் புகழ்மிக்கது - அப்பதியில் சைவ நெறியின் ஒருமைப்பாடுடைய அந்தணர் குலத்தில் அவதரித்த அருந்தவர் நமிநந்தி யடிகள்.- வேத வொழுக்கத்தின் வளர்க்கும் தீயினையே போல்வர்; திருநீற்றின் அடைவே மெய்ப்பொருள் என்றும் துணிவுடையவர்; சிவபெருமானை யாம இரவிலும் பகலிலும் வழிபாடு செய்தலிற் சிறந்து உணர்ச்சியில் விடாது பற்றிய இன்பநிலை யடைந்தவர். |